Friday, January 28, 2011

மீன் விற்பவர்களின் மாண்புக்கு என்ன விலை?

               குளச்சலிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி பேருந்து ஒன்று புறப்படுகின்றது. நிறைய இருக்கைகள் காலியாகவேக் கிடக்கின்றன. ஒரு சட்டுவத்தில் மீனோடு 45 வயது மதிக்கத்தக்க மீன் விற்கும் பெண் ஒருவர் அந்தப் பேருந்தில் ஏற முயலுகின்றார். உடனே நடத்துனர், 'ஏய்... மீனு ஒண்ணும் ஏத்தக்கூடாது... கீழே இறங்கு... இப்ப கீழே இறங்குறியா இல்லையா...' என்று கத்துகிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் மீன் சட்டுவத்தோடு பேருந்தில் ஏறி அமர்கின்றார். நடத்துனர் கோபத்தோடு வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருக்கிறார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் திட்டத் துவங்குகிறார். வாக்குவாதம் முற்றியது. பேருந்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் வேடிக்கையாக சிரிக்கின்றனர். சிலர் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியபோது நடத்துனர், 'இறங்கடி கீழே' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே மீன்சட்டுவத்தை எட்டி உதைக்கிறார். மீன்களெல்லாம் தரையில் கொட்டின. இதைப் பார்த்த சில இளைஞர்கள் கோபத்தோடு இருக்கையிலிருந்து எழுந்து நடத்துனரை திட்டித் தீர்க்கின்றனர். நடத்துனர் வீம்பாகப் பேசவே அவரை அடிக்கவும் செல்கின்றனர். அந்தப் பெண் அழுகையுடன், 'எனக்க பொழப்புல மண்ணை வாரிப் போட்ட நீ நல்லாவே இருக்கமாட்ட' என்று சபித்துக்கோண்டே கீழே இறங்கினார்.

                எங்கு மனித இனம் மாண்பிழந்து கிடக்கிறதோ அங்கு மனிதர்கள் மனிதர்களாக இல்லை. மாண்பிழக்கக் காரணமானவரும் மனிதராக இல்லை. மாண்பை இழந்துவிட்டு அதை சகித்துக் கொண்டு வாழ்பவரும் மனிதராக இல்லை. பிறர் மாண்பிழந்து அவமானப்படுவதை கண்டும் காணாமல் செல்பவரும் மனிதராக இல்லை. ஏனென்றால், இவர்கள் யாரிடமும் மனிதநேயம் உயிரோடில்லை.
             பிறரை மதிப்போடும் மாண்போடும் நடத்த வேண்டும் என்பது வெறும் வேண்டுகோளோ, பரிந்துரையோ கிடையாது. அது ஒரு கட்டாயக் கடமை. மதிக்கலாம்... மதிக்காமலும் இருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதையாவது காரணம் காட்டி பிறரை இழிவுபடுத்துவது என்பது மனிதநேயத்திற்கு எதிராக நாம் இழைக்கும் பெரும் குற்றமாகும். பதவியை, படிப்பை, பணத்தை, சாதியை, தொழிலை காரணம் காட்டி சகமனிதரை தரக்குறைவாக நடத்துவதைவிட தரங்கெட்டச் செயல் ஏதுமில்லை.
                  மீன் தொழில் புரிவோரை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர்களது மாண்பும் மரியாதையும் பல இடங்களில் பல நபர்களால் சூறையாடப்படுவது நம்மில் யாருக்கும் தெரியாததல்ல. ஏனென்றால், அந்தப் பேருந்தில் நடந்ததுபோல எத்தனையோ நிகழ்வுகள் நமது கண்களுக்கு முன்னதாகவே நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்போதெல்லாம் நமது மனநிலை எவ்வாறு இருந்தது? சரி... அதை நம் ஒவ்வொருவரின் சுய ஆய்வுக்கு விட்டுவைப்போம்.
           நமது வீட்டு முற்றங்களிலும், சந்தையிலும் மீன் கொண்டு வருபவர்களை நாம் எப்படி அழைக்கின்றோம் என்பதிலேயே நமது மனநிலை வெளிப்பட்டுவிடும். மேடம்... சார்... என்று அவர்களை அழைக்கச் சொல்லவில்லை. இந்த மீன் எவ்வளவுங்க... இது எவ்வளவும்மா... என்ன விலைக்குப்பா இந்த மீன் தருவீங்க... என்று மதிப்போடு அழைத்தால் என்னதான் குறைந்துவிடும். ஒருவேளை அப்படி அழைப்பதால் மீனின் விலை குறையலாம்!
            சுளித்த முகத்தோடும் புளித்த வார்த்தையோடும் அவர்களை நெருங்காமல், மனிதநேயத்தோடு நடத்த முயற்சிக்கலாம் என்பதில்தான் என்ன சிக்கல்? மீன் விற்பனை செய்பவரில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது நாம் அறிந்ததே. நாம் அவர்களது சூழலை கொஞ்சம் கருத்தில் கொண்டால், நிச்சயமாக அவர்களை மதிக்கத்  தோன்றும். அவர்களில் பலர் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மோசமான பொருளாதார நிலையைக் கொண்டவர்கள், குடிகார பொறுப்பற்ற கணவரால் பாதிக்கப்பட்டவர்கள். நெஞ்சில் குடும்ப சுமையையும் தலையில் மீன் சுமையையும் சுமந்துவரும் அவர்களை நமது பார்வையால், வார்த்தைகளால், செயல்களால் அவமானப்படுத்துவதை விட அன்போடு நடத்தலாம் அல்லவா!