Wednesday, November 10, 2010

வாய்ப்புகள் வானளவு (Opportunities in Plenty)

           ஆயிரமாயிரம் வாய்ப்புகள் நம் கண்முன்னே கொட்டிக்கிடக்கின்றன. உள்ளம் தெளிந்து, கண்கள் திறந்து பார்ப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்வில் முன்னேறியே தீருவேன் என்ற தாகம் கொண்டவர்கள் சிறியசிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு பெரியபெரிய சாதனைகளை படைத்து விடுகிறார்கள்.
            வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவரைப் பற்றி ஆங்கில பாடப்புத்தகத்தில் நாம் கேள்விப் பட்டிருக்கலாம். இவர் ஆங்கில நாடக இலக்கியத்திற்கு மிகவும் பெயர்போனவர். மிகப்புகழ்பெற்ற 37 நாடகங்களை எழுதி எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். ஏறக்குறைய எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இவர் எழுதிய நாடகங்கள் முக்கியமான பாடங்களாக இடம் பெற்றுள்ளன. லண்டனில் ஒரு சிற்றூரில் பிறந்த இவர் பிழைப்புத் தேடி நகரத்திற்கு வந்தார்.  நாடக அரங்கில் குதிரை வண்டிகளை காவல் காக்கின்ற வேலை கிடைத்தது. வெளியே குதிரைகளை காவல் காத்துக் கொண்டே அரங்கத்தினுள்ளே நடந்து கொண்டிருக்கும் நாடகங்களையும் கவனமாய் கேட்டுக் கொண்டிருப்பார். நாடகங்களை அவ்வாறு திரும்பத்திரும்பக் கேட்டு மனப்பாடம் ஆக்கிக்கொண்டார். ஒரு நாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. நாடகக்குழவினர் மிகவும் பதற்றமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் சென்று 'நான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்களேன்' என்று கேட்டார். நாடகக்குழவினர் முதலில் அவரை மிக ஏளனமாகப் பார்த்தாலும் வேறுவழியில்லாததால் அவரை நடிக்கவிட்டனர். மேடை ஏறிய ஷேக்ஸ்பியர் மிகப் பிரமாதமாக நடித்து அசத்திவிட்டார். நாடக்குழவினருக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை. பிறகு பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. நாடகங்களில் நடித்துக்கொண்டு, தானே பல நாடகங்களை எழுதவும் ஆரம்பித்தார். அன்று அவர் பயன்படுத்திக் கொண்ட சிறிய வாய்ப்பினால் அளவுகடந்த புகழையும் பெயரையும் பின்னாளில் சம்பாதித்துக் கொள்ள முடிந்தது.
               
 ஏழ்மையும் வறுமையும் நமது வளர்ச்சிக்கு தடையல்ல. உடல் குறைகளோ, நமது குடும்பச் சூழலோ, சாதிய நிலையோ நமது வளர்ச்சியை ஒருபோதும் தடுத்துநிறுத்த முடியாது. எல்லாச் சூழலிலும் நாம் வளர்வதற்கான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்பிக்கையிழந்து விரக்தியோடு வாழ்பவர்களின் கண்களுக்கு அந்த வாய்ப்புகள் தெரிவதில்லை. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சாதிக்க முடியாததை இன்று ஏழை விட்டு;ப் பிள்ளைகள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல திடகாத்திரமான உடலோடு இருப்பவர்கள் சாதிக்காததை இன்று மாற்றுத் திறனாளிகள் சாதித்துக் காட்டுகிறார்கள். படித்தவர்கள் செய்யத் துணியாத பல நல்ல காரியங்களை படிக்காத பாமரர்கள் எத்தனையோ வழிகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்களாக ஏதாவது வாய்ப்பைத் தேடிச்சென்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
 வாய்ப்புகள் நம்மை தேடிவரும் என்று காத்துக்கிடப்பது சரியா?
 என்னென்ன வாய்ப்புகள் நம் முன்னே கொட்டிக்கிடக்கின்றன?

கடமையும் உரிமையும் (Responsiblity and Rights)


'நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?'
- ஜான் கென்னடி
                  ஊதிய உயர்வுகோரி ஆசிரியர்கள் போராட்டம்... சாலை வசதி செய்து தரமாறு கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்... இலவச டி.வி. வழங்கப்படாத ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்... வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டம்... ஓவ்வொருநாள் செய்தித்தாளிலும் இதுபோன்ற செய்திகளை நாம் காண்கிறோம். தங்களது உரிமைகளைக் கேட்டு ஏதாவது ஒரு போராட்டம் இந்த நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கலாம்.
        உரிமைகளைக் கேட்டுப் பெறத்துடிக்கும் நம்மில் பலர் நமது கடமைகளைப் பற்றிய பேச்சை அறவே மறந்து விடுகிறோம். எதையெல்லாம் பெற்றோர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பெற்றுவிடவேண்டுமோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் நாம், நமது கடமைகளை குழிதோண்டிப் புதைத்துவிடுகிறாம். ஊதிய உயர்வுக்கோரிப் போராடும் ஆசிரியர்களில் எத்தனைபேர் தான் பொறுப்புள்ள ஓர் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற கடமையை உணர்;ந்து செயல்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அரசிடமிருந்து இலவசங்களை வாங்கிக் குவிக்க நினைக்கும் நாம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்துள்ளோமா என்ற கேள்வியை பலநேரங்களில் கேட்பதில்லை.
        
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசும்போது அதிலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி மட்டும் பேசுகிறோம். அதே அரசியலமைப்புச் சட்டத்தில்தான் ஒவ்வொரு இந்தியக்    குடிமகனு(ளு)ம் ஆற்ற வேண்டிய கடமைகளும் எழுதப்பட்டுள்ளன. அதைப்பற்றி நம்மில்  அதிகமானோர் பெரிதாகப் பேசுவதே இல்லை. சாதி, சமய, மொழி பேதங்களைக் கடந்து சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும், வன்முறைகளை தவிர்க்க வேண்டும், சுற்றுப்புறச் சூழலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும், பொதுச்சொத்துக்களை பேணிப் பாதுகாக்க வேண்டு;ம் என நமது அரசியலமைப்புச் சட்டம் நம்மிடம் எதிர்பார்க்கும் கடமைகளை எத்தனை பேர் பெரிதாக எண்ணி செயல்படுத்துகிறோம்?
             கடமைகளைச் செய்ய மனமில்லாத எவருக்கும் சலுகைகளும் உரிமைகளையும் பெறுவதற்கான தகுதியில்லை. கடமையும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். கடமையை ஆற்ற மனமில்லாதவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவது நியாயமானதே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 ஒரு மனிதருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு?
 நமக்கு வீட்டிலும், சமூகத்திலும். நாட்டிலும் என்னென்ன கடமைகள் இருக்கின்றன?
 கடமைகளை எல்லாரும் ஒழுங்காக செய்தால் நமது வீடும் நாடும் எப்படியிருக்கும்?

இழப்புகளை தாண்டி வா

               வாழ்வினில் ஏமாற்றப்படும்போதோ, இழப்புகளை சந்திக்கின்றபோதோ நம்மில் பலர் மனம் தளர்ந்து விடுகிறோம். இனி வாழ்வதில் பயனில்லை என்று நிலைகுலைந்து விடுகிறோம். உதாரணமாக, மாணவர்கiளை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலோ அல்லது தோல்வியடைந்திருந்தாலோ சில மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் அறிவோம். ஓவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை நாம் செய்தித்தாள்களில் வாசிக்க முடிகிறது.
                 
அறிவியல் உலகம் இன்றளவும் வியந்து போற்றும் மாமேதைகளில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரது ஆசிரியர் 'இவன் சரியான மரமண்டை.. எதையுமே புரிந்துகொள்ளாத உதவாக்கரை' என்ற சொல்லி பள்ளிக்கூடத்தை விட்டே  துரத்தியடித்தார். ஆனால், இதனைக்கண்டு மனமுடைந்து போகாத எடிசன் தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகையே வியக்க வைத்தார். எடிசனால் அவமானத்தைத் தாண்டி சாதிக்க முடிந்தது.

கிரிக்கெட் உலகமே வியந்து கொண்டாடுகின்ற சச்சின் தெண்டுல்கர் பத்தாம் வகுப்புத் தேல்வில் தோல்வியடைந்தவர். இன்று கிரிக்கெட் விளையாட்டில் அவர் முறியடிக்காத சாதனைகளே இல்லை என்றாகிவிட்டது. ஆம். அவரால் தோல்வியைத்தாண்டி வாழ்வில் சாதிக்க முடிந்தது. இவர்களைப் போன்று எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் தோல்விகளையும் தாண்டி சாதித்திருக்கிறார்கள்.
             மதுரை அழகர்கோவில் பகுதியைச் சார்ந்த அமுதலட்சுமி என்பவர் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு பிரச்சனைகளோடு தன்னிடம் தஞ்சமடையும் பெண்களை ஆறுதலோடு தேற்றி நல்வழிப்படுத்துகிறார். ஆனால். இவர் தனது சொந்த வாழ்விலே பல்வேறு வேதனைகளை அனுபவித்தவர். தனது கணவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்டவர். எதெற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவரால் வஞ்சிக்கப்பட்டவர்.  'ஐயோ எனக்கு மட்டும் இப்படி நடந்து விட்டதே' என்று மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கவில்லை. மாறாக, துணிவு கொண்டிருந்தார். ஆழமான தன்னம்பிக்கைக் கொண்டிருந்தார். தன்னைப்போல் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்ய முடிவுசெய்தார். இன்று அளப்பரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார். (நன்றி: தினமணி, ஆகஸ்டு 15, 2010).
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்கள் வாழ்வில் அவமானங்களும் தோல்விகளும் நிகழ்ந்ததுண்டா? என்ன செய்தீர்கள்?
 மதிப்பெண் குறைவாலும், தோல்வியுறுவதாலும் தற்கொலை முடிவுக்கு வரும் மாணவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 தோல்விகளே இல்லாத வாழ்வு என்பது சாத்தியமா?
 எந்த மாதிரியான பிரச்சனைகளை நிங்கள் சந்தித்துக் கெண்டிருக்கிறீர்கள்?

பணம் - நேர்மையின் விலை?

                ஒருமுறை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றிருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வெளிநாட்டு அதிகாரி ஒருவரிடம் நம்மவர் காதோடு காதாய் ஒரு கேள்வியைக் கேட்டார், 'உங்களிடம் மட்டும் இவ்வளவு பணம் எப்படி?' அதற்கு அந்த அதிகாரி, 'கொஞ்சம் வெளியே வருகிறீர்களா' என்று நம்மவரை வெளியே கூட்டிச் சென்றார். 'அதோ அங்கே முழுமையாகக் கட்டமுடிக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று தெரிகிறதே பார்த்தீர்களா?' என்று கேட்டார். நம்மவர் சற்று கோபத்தோடு, 'என்ன விளையாடகிறீர்களா? அங்கு முழு பாலம் எங்கே இருக்கிறது? கட்டிமுடிக்கப்படாத பாதி பாலம்தானே இருக்கிறது' என்று காட்டமாகச் சொன்னார். அந்த அதிகாரி சிரித்துக் கொண்டே, 'மீதி பாலம் கட்டவேண்டிய காசுதான் எங்களை இவ்வளவு வசதியாக வாழ வைத்திருக்கிறது' என்றார். ஓஹோ.. விசயம் அப்படியா என்று நம்மவர் புரிந்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து, இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்த அந்த வெளிநாட்டு அதிகாரி நம்மவரின் வீட்டுக்குச் சென்றார். நம்மவரின் ஆடம்பர மாட மாளிகையையும், ஏக்கர் கணக்கான நிலங்களையும், அளவுகடந்த சொத்துக்களையும் ஆடம்பரங்களையும் கண்டு அவர் மலைத்துப் போய்விட்டார். 'என்னப்பா இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயே எப்படி?' என்று வியப்புடன் கேட்டார்.   கொஞ்சம் வெளியே வாருங்களேன் என்று நம்மவர் அழைத்துச் சென்றார். அதோ அங்கே ஒரு பாலம் இருக்கிறதே பார்த்தீர்களா என்று கேட்டார். வெளிநாட்டு அதிகாரி சுற்றிலும் பார்த்தார். பாலம் இருப்பதற்கான சிறு அடையாளம்கூட காணப்படவில்லை. பெரிதும் குழம்பிப்போனவராய் 'என்னப்பா பாலம் இருப்பதற்கான அடையாளத்தையே காணவில்லையே' என்றார். நம்மவர் சிரித்துக்கொண்டே முழு பாலமும் என் பாக்கெட்டிற்குள் என்று பதிலளித்தார்.
                அரசியல், கல்வித்துறை, காவல்துறை, மருத்துவம், கோயில் என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்பில்லாமல் போயிற்று. பெரிய பொறுப்புகளில் இருப்பவர் ஒருவர் நேர்மையாக நடக்க முயற்சித்தால் 'பிழைக்கத் தெரியாதவன'; என்றுச் சொல்லி உசுப்பி விடுகின்றனர். பதவியிலிருக்கும் காலத்திற்குள் முடிந்தவரை சுருட்டிவிடும் மனநிலை பரவலாகக் காணப்படுகிறது. காசுக்கு முன்னால் நேர்மை கைகட்டி நிற்கிறது. ஊழல் ஆண்டாண்டு காலமாய் அதிகார நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 பணஆசை நம்மை என்னென்ன செய்ய தூண்டும்?
 ஊழலில்லாத சமுதாயம் எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
 அரசியல்வாதிகள் ஊழல் செய்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்களா? எப்படி?
 நேர்மையுடன் நம்மால் வாழ முடியுமா? என்னென்ன வழிகளில்?

தவறு – யார்தான் செய்யவில்லை?

                 நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. 2006 –ம் ஆண்டில் இறுதிப் போட்டிக்கு பிரான்சு அணியும் இத்தாலி அணியும் தகுதிப்பெற்றன. இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பினை தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டியும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. திடீரென, பிரான்சு அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ஜிடேன், இத்தாலி அணி வீரர் ஒருவரோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் சூடேற ஆத்திரமடைந்த ஜிடேன் இத்தாலி அணி வீரரின் நெஞ்சில் தனது தலையால் ஓங்கி முட்டினார். விளையாட்டு அரங்கம் முழுவதும் பதற்றமடைந்தது. விளையாட்டின் ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நொந்து போயினர். மறுநாள் பத்திரிக்கைகள். தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று எல்லாம் ஜிடேன் மீது பல்வேறு விமர்சனங்கதை; தொடுத்தன. ஆனால் ஜிடேன் தனது செயலை பல காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். விமர்சனங்கள் ஓரளவுக்கு ஓய்ந்தபிறகு, அவர் தனக்குள் ஒருவகையான மௌனத்தை உணர்ந்தார். அந்த மௌனம் அவரை வேதனைக்குள்ளாக்கியது. தனது செயலை நினைத்து ஜிடேன் வருத்தமடையத் தொடங்கினார். 'அட பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்;கும்போது இவ்வளவு மோசமாக நடந்துவிட்டேனே' என்று சுயஉணர்வு பெற்றார். 'நான் அன்று நடந்துகொண்டது தவறு. தயவுசெய்து எல்லோரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எல்லாரும் ஜிடேனின் இந்த மனப்பக்குவத்தைப் பாராட்டினர்.
               தவறு செய்யாத மனிதர்களே இல்லை எனலாம். நாம் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் தவறு செய்திருக்கிறோம். 'நான் தவறு செய்ததே கிடையாது என்று சொல்பவர் பொய்யர்' என்று விவிலியம் சாடுகின்றது. சில நேரங்களில் 'நான் செய்தது தவறு' என்பதை உணர மறந்து விடுகிறோம். யாராவது நமது தவறை சுட்டிக்காட்ட நேர்ந்தால் 'நீ என்ன யோக்கியமா' என்று கேட்டு அவரை படாதபாடு படுத்திவிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் தவறு என்று தெரிந்தும் அவற்றை  திரும்பத்திரும்ப நாம் செய்கிறோம். அந்தத் தவறுகளை ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி நியாயப்படுத்தி விடுகிறோம். 'ஊர் உலகத்தில் யாரும் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன்' என்று மனசாட்சியை தொலைத்து விடுகிறோம். நமது தவறை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலும், அதை திருத்திக் கொள்வதற்கான முயற்சியும் நம்;மிடம் இருக்குமானால் நாமும் மனப்பக்குவமுடைய மனிதர்களாக வாழமுடியும். ஜிடேனைப் போல நாமும் பாராட்டப் பெறுவோம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்கள் தவறுகள் செய்தபோது உங்களிடம் இருந்த உணர்வுகள் என்னென்ன?
 உங்களது தவறை எப்போதாவது நியாப்படுத்தியது உண்டா?
 தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட அனுபவம் ஏதேனும் உங்களுக்கு உண்டா?
 நமது தவறுகளைத்  திருத்திக் கொள்ள என்னென்ன முயற்சிகளை முன்னெடுக்கலாம்?


'எல்லா தவறுகளும் நல்ல படிப்பினைகளே'

கடவுளை கொஞ்சம் மற... மனிதனை நினை...

'கடவுளைத் துதிக்கும் நாவுகளைவிட
மனிதருக்கு உதவும் கரங்கள்
மிகவும் புனிதமானவை'
                                                                       - அன்னைத் தெரசா

                        கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். பல்வேறு சமய நூல்கள், சட்டங்கள், புராணங்கள், கதைகள் என்று அயராது வாசித்தார். கற்றுத்தேர்ந்த பலரோடு கடவுள் பற்றி காரசாரமான விவாதங்களை நடத்தினார். எதிலும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஒவ்வாருநாளும் வெறுத்துப்போய் வீடு வந்துசேர்ந்தார். மனைவி பேசும்போதெல்லாம் எரிச்சல் அடைந்து விடுவார். குழந்தை அழும்போது கோபத்தில் சலித்துக் கொள்வார். கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே வீட்டிலும் ஆழ்ந்திருப்பார். ஒருநாள் தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு சிந்தனையில் தன்னையே மறந்து போயிருந்தார். குழந்தையின் மூக்கிலிருந்து சளி வழிந்து கொண்டிருந்தது. திடீரென்று தனது சட்டையில் ஈரத்தை உணர்ந்தவர் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதுபோல் மனைவியை நோக்கிக் கத்தினார். பயந்து கொண்டே வந்த மனைவி குழந்தையை அவரிடமிருந்து வாங்கினாள். தனது வாயை குழந்தையின் மூக்கில் வைத்து குழந்தைக்கு வலிக்காதவாறு சளியை உறிஞ்சினாள். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டவாறே தூக்கிச் சென்றாள். மனைவியின் இச்செயலைக் கண்ட கணவர் வெட்கித் தலைகுனிந்தார்.
                 நம்மில் சிலர் இப்படித்தான் கடவுள், கோயில். வழிபாடு பற்றிய சிந்தனைகளில் தீவிரமாகி சகமனிதர்களை மறந்து விடுகிறோம். கடவுளுக்கு புகழ்பாக்கள் பாடிவிட்டு பிற மனிதர்களை எளிதில் வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம்.
                 கடவுளை அன்பு செய்வதாகச் சொல்லிக் கொண்டு மனிதரை அன்பு செய்யாத எவரும் பொய்யர் என்று விவிலியம் எடுத்துரைக்கிறது. கடவுளை தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு பக்கத்து வீட்டுக்காரனை காலில் போட்டு மிதிக்கும் கடவுள் பக்தர்களைப் பார்த்துத்தான் 'அட.. கடவுளை மற் மனிதனை நினை' என்று பெரியார் மனம் வெதும்பி கூறினார் போலும்!

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 கடவுளை மனதார அன்பு செய்வதாகச் சொல்லும் நம்மால் சகமனிதர்களை அன்பு செய்ய முடிவதில்லையே ஏன் ?
 மனிதாபிமானமில்லாத கடவுள் பக்தர்களால் பிரச்சனைகளே விளையும் என்பதை உணர்கிறீர்களா?
 'வழிபாடு, துன்பப்படும் மனிதனுக்கு உதவி' இவை இரண்டில் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் ?  

குழந்தைகள் மட்டும் எப்படி.. இப்படி!


'ஒரு குழந்தை பிறந்தவுடன்
நீங்கள் எதையெதையோ கற்றுக் கொடுக்கத் தயாராகிறீர்கள்
உண்மையில் நீங்கள்தான்
அக்குழந்தையிடம் கற்றுக்கொள்ள வேண்டும்'
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
                        பேருந்தில் பயணம் செய்கின்றபோது குழந்தைகளை கவனித்திருப்போம். சில குழந்தைகள் வைத்தகண் வாங்காமல் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பார்த்து அப்படி ஒரு புன்சிரிப்பு பூப்பார்கள். பல சைகைகளைக் காட்டி நம்மை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்து நம்மில் சிலர் அப்படியே உளம் பூரித்துப்போய் அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளியிருப்போம். 'என்னிடம் வருகிறாயா' என்று கேட்பதுபோல் குழந்தையைப் பார்த்து பல சைகைகளைக் காட்டியிருப்போம். அந்தக் குழந்தை யாரென்று நமக்கு தெரியாமலிருக்கலாம். எந்த ஊரென்பதும் நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையால் ஒருவகையான இனம்புரியாத மகிழ்ச்சி நம்மில் உதயமாகிறது. நாம் பல்வேறு சிந்தனைகளோடு அந்த பேருந்தில் ஏறியிருக்கலாம். அவசர அவசரமாக குழப்பத்தோடு எங்காவது கிளம்பியிருக்கலாம்.ஆனால், அவற்றையெல்லாம் அந்த குழந்தையின் புன்னகையும் அழகிய சைகைகளும் அப்படியே மறக்கச் செய்துவிடும்.
                   இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன. இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் நிம்மதியும் இருப்பது இயல்புதானே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 குழந்தைகளோடு நீங்கள் பெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? அதில் ஏதேனும் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்து இன்றைய நாளில் சந்தோசமாக இருங்களேன்...
 குழந்தைகளிடம் மட்டும் எப்படி இவ்வளவு நல்ல குணங்கள் காணப்படுகின்றன?
 நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே? நமது சிறுவயது நல்ல குணங்களெல்லாம் நம்மிடம் இப்போது இருக்கிறதா? இல்லையேல் அவை எங்கு போயின?
 குழந்தைகள் போல் வாழ நாம் அன்றாடம் என்னென்ன செய்யலாம் ?