நம்மில் சிலருடைய எண்ணம், ஏக்கம், கனவு, வார்த்தை, செயல் அத்தனையும் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையாகவே அமைந்து விடுகிறது. வாயைத் திறந்தாலே எரிதழல் போல எதிர்மறைச் சிந்தனைகளை கொப்பளித்து விடுகிறோம். எதிர்மறை யூகங்களை வளர்த்துக் கொண்டு கண்டபடி பேசி காயப்படுத்தி விடுகிறோம். எதிர்மறைச் சிந்தனைகள் நம்மில் அலைமோதுகின்றபோது கவனச் சிதறலும் பதற்றமும் நம்மை சிறைப்பிடித்து விடுகின்றன.
எதிர்மறையாக சிந்தித்து செயல்படும்போது வாழ்வில் சில முக்கியமான காரியங்களை நாம் இழக்க நேரிடுகிறது. முதலாவதாக, நமது எதிர்மறைச் சிந்தனைகளால் உடல் நலனை நாம் இழக்கிறோம். பல்வேறு உடல் மன நோய்களுக்கும் காரணம் என்ன தெரியுமா? நமது எதிர்மறையான எண்ணங்கள்தான். நம்மை சபித்து, பிறரை சலித்து, உடலில் எதிர்மறை உஷ்ணம் ஏற்றி, சுவாசத்தில் வேகத்தை ஊற்றி நமது உடல் நலனை நாமே பல நேரங்களில் கெடுத்துக் கொள்கிறோம்.
அடுத்ததாக, நாம் இழக்கின்ற பெரும் சொத்து நமது நட்பு. எதிர்மறையாகவே சிந்தித்து செயல்படும் எவருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். நேர்மறை அணுகுமுறைகளே நல்ல நண்பர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். நேர்மறையாகப் பார்ப்பவர்களிடமே நட்பு அதிகமாக பூக்கிறது. பரவாயில்லை... அதனாலென்ன... நமக்குள்தானே... சரிசெய்து கொள்ளலாம்... என்று நடந்த தவறையும் கடந்து யோசிப்பவர்களே இதயங்களை வெற்றிக் கொள்கிறார்கள். அது சரியில்லை... எனக்கு மட்டும் ஏன் இப்படி... நீ திட்டமிட்டே அப்படி செய்தாய்... உன்னைப் போய் நம்பினேனே... என்று சிறிய சிறிய காரியங்களிலும் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசுபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவே நாம் விரும்புகிறோம்.
நேர்மறையாக சிந்திப்பதால் நாம் இழப்பது என்ன?
நேர்மறையாக செயல்பட்டு சாதித்த சில மனிதர்களைப் பற்றி சொல்ல முடியுமா?
எதிர்மறையாக சிந்தித்து செயல்பட்ட கசப்பான அனுபவங்கள் உண்டா?