Sunday, November 14, 2010

பெற்றோர் பேறுபெற்றோர் (Blessed are our Parents)

             
நம்மை இந்த உலகில் மிக அதிகமாக அன்பு செய்கிறவர்கள் யார்
தெரியுமா? நமது பெற்றோர்கள்தாம். மிக சிலருடைய வாழ்வில் மட்டுமே இது ஒரு விதிவிலக்காக இருக்கலாம். நமது துன்பத்திலும் இன்பத்திலும் நம்மைவிட அதிகம் அக்கறை காட்டுபவர்கள் நமது பெற்றோர்களே. நம் தாயின் கருவறையில் எறக்குறைய பத்து மாதங்கள் நாம் தங்கியிருந்தோம் என்ற உணர்வு நம்மை மெய்சிலர்க்க வைக்கிறது. தனது உதிரத்தை பாலாக்கி பாசத்தோடு நம் தாய் ஊட்டினார் என்ற உண்மை நம்மை பரவசப்படுத்துகிறது. நம்மை அன்போடு
கையிலெடுத்து முத்தமழை பொழிந்து, நமக்காக தன்னை அல்லும்பகலும் வருத்தி உழைத்து, பல தியாகங்கள் செய்தார் நமது தந்தை என்பதை நினைக்கையில் உள்ளம் சிலிர்க்கிறது.
           நம்மை உயிருக்கு உயிராய் நேசிக்கும் பெற்றொர்களை மதிப்பதும் பேணுவதும் நமது தலையாய கடமையல்லவா? ஆனால் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்தங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. பெற்றோர்களை திட்டித் தீர்ப்பதும், எட்டி உதைப்பதும், அநாதைகளாக கைவிடுவதும் இன்று அதிகம். 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம்... ஆனால் அன்னை இருப்பதோ அநாதை இல்லம்' என்ற அழகிய கவிதை வரிகள் இன்றைய எதார்த்தத்தை ஆழமாக எடுத்தியம்புகின்றன. படித்தவர்கள் மத்தியில்தான் பெற்றோர்களை அவமதிப்பதும் கைவிடுவதும் அதிகமாகக் காணப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். முதியோர் இல்லங்களுக்கு சென்று பாருங்கள். அங்குள்ள தாய் தந்தையரின் கண்ணீர் கதைகளில் உருகாத மனமும்
உருகும். வயதாகிவிட்டதால் பெற்றொர்கள் நமக்கு ஓர் சுமை. நோயுற்றிருப்பதால் அவர்கள் நமக்கு ஒரு செலவு. சொத்து ஏதும் சேர்த்து வைக்காததால் அவர்கள் ஒரு பாரம். அழகாக இல்லாததால் அவர்கள் ஓர் அவமானம். படிக்காததால் நாகரீகம் அறியாதவர்கள். மனைவி சொல்லுவதால் அவர்கள் நமக்கு ஓர் தலைவலி. இவ்வாறெல்லாம் எண்ணப்பட்டு ஓரங்கட்டப்படும் பெற்றோர்கள் இன்று ஏராளம்.
         சிவகங்கை மாவட்டம் கோமகோட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த அருள் என்பவரின் தாயார் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். அருளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அன்றாடக் கூலி வேலைக்கு செல்லும் இவர் ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு பல்துலக்கிவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு வேலைக்கு செல்கிறார். சலித்துக் கொள்ளாமலும், முணுமுணுக்காமலும் தனது தாய்க்கு இந்த பணிவிடையை பல ஆண்டுகளாக அன்போடு செய்து வருகிறார். இப்படி ஓர் மகனைப் பெற அந்த தாய் என்ன தவம் செய்தாரோ என்று அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வியப்படைகின்றனர். நாமும் வியப்படைகிறோம் அல்லவா!
நீங்க என்ன நினைக்கிறீங்க?


 உங்கள் பெற்றோரை பாராட்டி பேசச்சொன்னால் நீங்கள் என்ன பேசுவீர்கள்?
 நாம் நமது பெற்றோரை ஏன் பேண வேண்டும்?
 நமது பெற்றோர்கள் மனங்குளிர என்னென்ன செய்யலாம்?

சுயபுத்தி – விலைமதிப்பற்றது (Your reason)

           
 மற்ற விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்று கேட்டால், 'சிந்திக்கும் ஆற்றல்' அல்லது 'ஆறாவது அறிவு' என்று பதில் சொல்லுவோம். இதனால், மனிதர்கள் ஒரு காரியத்தை செய்யும்போது சுயபுத்தியோடு செயல்பட  வேண்டுமென்பது இயல்பாக எழும் ஓர் எதிர்பார்ப்பு. ஏதாவது தவறுகள் நடந்துவிடும்போது அவனாலதான் அல்லது அவளாலதான் இப்படி நடந்தது என்று பிறர்மீது பழிபோடும்போது 'சரி... உன் சுயபுத்தி எங்கே போச்சு?' என்று பிறர் நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
         
ஒரு குருவும் அவரது சீடர்களும் குதிரையில் சென்று கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் குரு குதிரையை நிறுத்திவிட்டு 'எனது பை கீழே விழுந்ததை யாரும் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு சீடர்கள், 'ஆம் குருவே... நாம் அந்த நதிக்கரை வளைவில் வந்து கொண்டிருந்தபோது உங்களது பை கீழே விழுந்தது' என்றனர். 'ஏன் யாரும் அதை எடுக்கவில்லை?' என்றார் குரு. 'ஏதாவது கீழே விழுந்தால் எடுக்க வேண்டுமென்று நீர்தாம் எங்களுக்கு கட்டளையிடவில்லையே. நீர் சொல்லாததை செய்ய நாங்கள் என்ன முட்டாள்களா?' என்றனர். 'சரி இனி ஏதாவது கீழே விழுந்தால் எடுங்கள்' என்று குரு சொல்ல பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சற்று தூரம் சென்றவுடன் குரு குதிரையை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தார். பின்னால் வந்துகொண்டிருந்த சீடர்கள் எவரையுமே காணோம். குழப்பமடைந்தவர் வந்த வழியே திரும்பிச் சென்றபோது அதிர்ச்சியடைந்தார். சீடர்கள் அனைவரும் குதிரையை நிறுத்திவிட்டு வழிநெடுக குதிரைகள் போட்ட சாணத்தை அள்ளிக் கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த குரு 'இதெல்லாம் என்ன?' என்று கேட்டார். 'நீர்தானே கீழே ஏதாவது விழுந்தால் எடுக்க வேண்டும் என்று கட்டளையீட்டீர்' என்றனர். குருவுக்கு கோபம் தலைக்கேறியது. சீடர்களை ஒருமுறை எரிச்சலுடன் முறைத்துப் பார்ததுவிட்டு, 'அதோ தெரிகிறதே அதுதான் நாம் செல்ல வேண்டிய மலை. நீங்கள் எல்லோரும் முன்னே செல்லுங்கள். நான் பின் தொடர்ந்து வருவேன். ஏதாவது விழுந்தால் நானே பார்த்துக் கொள்கிறேன்' என்றார். சற்று தூரம் சென்றதும் குதிரையின் கால்
 இடறவே குரு ஐயோ என்று கத்தியவாறே கீழே விழுந்தார். சீடர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவுமில்லை. அவரை தூக்கிவிடவுமில்லை. அவர்தான் பார்த்துக்கொள்வாரே என்ற எண்ணம் அவர்களிடத்தில்.
           தங்களின் சுயபுத்தியை பயன்படுத்தாத நபர்களாக இந்த சீடர்களை நாம் இனங்கண்டு கொள்ளலாம். யாராவது ஏதாவது சொன்னால் அதன்படி செய்வோம். நாங்களாக எதையும் சிந்தித்து செய்யமாட்டோம் என்ற தவறான மனநிலை இது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 சுயமாக சிந்தித்து சாதித்த அனுபவம் ஏதேனும் உண்டா?
 சுயபுத்தியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
 சுயபுத்தியை எவ்வாறெல்லாம் வளர்த்தெடுக்கலாம்?

Saturday, November 13, 2010

கவனச் சிதறல் - கவனியுங்கள் (Distraction)

             
குரு ஒருவர் கோவிலில் போதித்துக் கொண்டிருந்தார். அவரது நீளமான, வெளிறிய தாடியை தடிவிக்கொண்டே, தலையை ஆட்டிஆட்டி பரவசத்தோடு போதித்துக் கொண்டிருந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியின் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. அந்த குருவானவரை உற்றுக் கவனித்தபடியே அந்த பாட்டி அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்த குருவின் மனதில் பல எண்ணங்கள் ஊசலாடின. 'இந்த பாட்டி ஏன் அழுது கொண்டிருக்கிறார்? எனது போதனை அவரது மனதை ஆழமாக உருக்கிவிட்டதோ! கடவுளே நன்றி! இந்த பாட்டியின் உள்ளத்தை எனது போதனையால் நீர் கவர்ந்துவிட்டீர்' என்றவாறு பலவகையான எண்ணங்கள் அவருக்குள் உருண்டோட, தொடர்ந்து போதித்துக் கொண்டேயிருந்தார். போதனை முடிந்ததும் மக்கள் கூட்டம் கோயிலிலிருந்து கலையத் தொடங்கியது. குருவானவர் அவசர அவசரமாக, ஆவலோடு அந்த பாட்டியை தேடிச்சென்றார். 'பாட்டி ஏன் நீங்க அழுதுகிட்டே இருந்தீங்க' என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி, 'சாமி... நீங்க உங்க நீளமான தாடியை தடவிக்கிட்டே தலையை ஆட்டிஆட்டி பேசும்போது இரண்டு நாளுக்கு முன்னால காணாமப்போன என் ஆடு நியாபகத்துக்கு வந்திருச்சு. நல்ல கொழுத்த ஆடு சாமி... அது தலையை ஆட்டியாட்டி நடந்து வரும்போது அப்படியொரு அழகு சாமி... உங்களைப் பார்த்ததும் அது நியாபகம் வந்திருச்சு. அதனாலதான் அழுக வந்திருச்சு' என்றார். 'அப்போ நான் போதிச்சதைக் கேட்டு நீங்க அழவில்லையா?' என்று குரு மனம் நொந்து போனார்.
        
 நாமும் பலநேரங்களில் இந்த பாட்டியைப் போலத்தான். உற்றுக்கவனிப்பதுபோல பாவனை செய்து கொண்டு வேறொரு சிந்தனை வானில் சிறகடித்துக் கொண்டிருப்போம். கண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்குள் அறையில் அமர்ந்துகொண்டே கற்பனை என்ற ராக்கெட்டில் உலகையே பலமுறை சுற்றி வந்துவிடுகிறோம். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது ஒரு கிளையில் இருக்க விரும்பாமல் பல கிளைகளுக்கும் தாவிக் கொண்டேயிருக்கும்.
            
 இன்று... இங்கே... இப்போது... இந்த நிமிடம்... இந்த நொடி... இதை கவனி... முழுமையாக கவனி... என்று ஜென் எனப்படும் தியானம் வலியுறுத்துகிறது. நாம் பல நேரங்களில் கடந்தகால அனுபவங்களிலும் எதிர்கால கனவுகளிலும் மூழ்கிவிடுகிறோம். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கவனச்சிதறல் அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்வேறு காரியங்களில் மனதைச் செலுத்தி ஒரு வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் பலர் தடுமாறுகின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 கவனச் சிதறலுக்கான காரணங்கள் என்னென்ன?
 கவனச் சிதறலால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறோம்?
 கவனச் சிதறலை தவிர்க்க முடியுமா? என்னென்ன வழிகளில்?

குறைச்சொல்வதை குறைப்போமா? (Hello...Appreciate)

 'குறை எப்போதும் பிறரை குறைச் சொல்லிக் கொண்ட இருக்கும்'
                                                                                                                    - பரதேசி பீட்டர்

              சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறைச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 'எனது பக்கத்து விட்டுக்காரி சரியில்லை, என்னோடு படிக்கின்ற அந்தப் பையன் ரொம்ப மோசமானவன், எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியாது, அவங்க குடும்பமே அப்படித்தான்' என்று  யாரையாவது எதையாவது  குறைச்சொல்லிக் கொண்டிருப்பதே சிலரது பொழுதுபோக்கு.
         
 தத்துவயியலாளரான சார்த்தர் என்பவர் 'அடுத்தவன் ஒரு நரகம்' என்று பிறரைக் குறித்து இழிவாகக் கூறினார். புத்தரை ஓர் இளைஞன் 'நீ ஒரு முட்டாள்' என்று கேவலமாகத் திட்டி அவர்மீது காறி உமிழ்ந்தான். 'காந்தி ஒரு நாகரீகமற்ற அரைநிர்வாணி' என்று அமெரிக்க அதிபர் ஒருவர் அவமானப்படுத்திப் பேசினார். இவ்வாறு, படித்தவர் முதல் படிக்காத பாமரர் வரை பிறரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
                 
நாமும் பல நேரங்களில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்போம். இரண்டு மூன்று பெண்கள் கூடியிருந்து பேசத்தொடங்கினாலே அடுத்த வீட்டுக் கதைதான் அங்கு பேசப்படும் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது பலநேரங்களில் உண்மையாவதுமுண்டு. 'அட அவன் அப்படி...   ஐயோ இவள் இப்படி...' என்று வாய்க்கு வந்தபடி குறை சொல்லிவிடுகிறோம். அடுத்த கணமே நாம் குறைசொன்ன நபர் அந்த பக்கம் தற்செயலாக வந்துவிட்டால், 'வாங்க வாங்க எப்படி நல்லா இருக்கீங்களா? என்ன உடம்பு ரொம்ப இளைச்சு போயிடுச்சு? இந்தப் பக்கமே வரமாட்டேங்கிறீங்க. எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?' என்று புன்னகைப் பொங்க அன்பு வார்த்தைகளை அப்படியே அள்ளி வீசுவோம்.
                
யாரிடம்தான் குறையில்லை? யாரிடம்தான் பலவீனமில்லை? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா? நான் தவறே செய்வதில்லையா? என்று திறந்த மனதுடன் நம்மையே கேட்டுப் பார்ப்போம். அடுத்த மனிதரிடம் நல்ல குணங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி தாராளமாகவும் ஏராளமாகவும் பேசுவோம். அடுத்தவரின் நல்ல குணங்களை நம் கண்கள் நன்றாகப் பார்க்கட்டும். அடுத்தவரை பற்றி நல்லது பேசுவதால் நாம் எதையும் இழந்துவிடப்போவதில்லை. பிறர் நம்மை வெறுத்தாலும், பழித்தாலும். காயப்படுத்தினாலும், காறி உமிழ்ந்தாலும், ஏன் சிலுவையிலேயே அறைந்தாலும் அவர்களை குறைச் சொல்வதை விட மனதார மன்னித்து ஏற்றுக் கொள்வதே சிறந்தது. பல நல்ல மனிதர்கள் அதைத்தான் செய்தார்கள்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 அடுத்தவரைக் குறைசொல்லும் உங்களிடமும் குறைகள் உண்டு என்பதை உணர்கிறீர்களா?
 பிறரை குறைச்சொல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
 பிறரை திருத்துவதற்கு குறைச்சொல்வதுதான் வழியா? வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன?

நாமும் இவர்களைப் போல் வாழலாமே (Inspire Before You Expire)

           உங்களுக்குப் பிடித்த சில நல்ல மனிதர்களை கொஞ்ச நேரம் அமைதியாக நினைத்துக் கொள்ளுங்களேன். எடுத்துக்காட்டாக, அன்னைத் தெரசா, காந்தியடிகள், பெரியார், அம்பேத்கார், மேதா பட்கர், நெல்சன் மண்டேலா... நமக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இந்த நல்ல மனிதர்களை நன்றாகப் பிடிக்கிறது. நிறைய பேருக்கு இவர்கள் மீது அன்பும் மதிப்பும் மரியாதையும் பாசமும் இருக்கிறது. ஏன் இவர்களை மட்டும் நல்லவர்கள், தியாகிகள், தலைவர்கள், புனிதர்கள் என்று எல்லோரும் கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எப்போதாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
            
இந்த நல்ல மனிதர்களெல்லாம் பிறர்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். அதற்காக தங்கள் வாழ்வின் சுகபோகங்களையும், நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தவர்கள். நான் இந்த சமூகத்திற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஒவ்வொருநாளும் ஏங்கியவர்கள். எதற்கெடுத்தாலும் நான், எனது பெற்றோர், என்னுடைய சகோதர சகோதரிகள், எனது உறவினர்கள், என்னுடைய சாதியினர், எனது சமயத்தினர் என்று சுயநலத்தோடு மட்டுமே சிந்திக்காமல் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். நான்தான் எல்லோரையும் விட பெரியவன்  என்று நினைக்காமல் எல்லோரையும் அன்போடு அரவணைத்தவர்கள். பிறருக்கு ஏதாவது துன்பம் வருகின்றபோது ஓடிச் சென்று உதவி செய்தவர்கள். யாராவது மற்றவருக்கு அநீதி இழைக்கும்போது செய்தால் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தைரியமாக தட்டிக் கேட்டவர்கள். அநீதிகளைத் தட்டிக் கேட்டு அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள்.
            
 உதாரணமாக, நெல்சன் மண்டேலா அவர்களை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தனது சொந்த மண்ணான தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஒவ்வொருநாளும் துடிதுடித்துப் போனார். தென்னாப்பிரிக்காவில் 87 சதவீதம் இருக்கும் கறுப்பின மக்களை வெறும் 13 சதவீதமே வாழும் வெள்ளையர்கள் கொடுமைப்படுத்தினர். இந்தச் சூழலில், தனது நாட்டை எப்படியாவது வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று மண்டேலா முடிவு செய்தார். கறுப்பின மக்களின் நிலங்களை அபகரித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் அவலம் ஒழிய வேண்டும் என்று முழங்கினார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 25 ஆண்டுகள் சிறையிலே ஆயுள்கைதியாக தண்டனை அனுபவித்தார். சிறையிலே அடி, உதை, கடுமையான வேலை, அவமதிப்பு என்று பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இவையெல்லாம் தனக்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ அல்ல தனது நாட்டிற்காக அவர் அனுபவித்தார்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 இந்த நல்ல மனிதர்களைப் போல் வாழ உனக்கு ஆசை இருக்கிறதா?
 எல்லோருக்கும் நல்லது செய்யும் நல்ல எண்ணம் உன்னிடம் இருக்கிறதா?
 பிறருக்காக நீ செய்த உதவிகள் சிலவற்றைக் கூற முடியுமா?
 இந்த சமூகத்திற்கு நீ என்னென்ன நன்மைகளையெல்லாம் இந்த வயதில் செய்ய முடியும்?

தொலைக்காட்சி – சிறார்களின் சிறைச்சாலையா? (Impact of Television)

         இன்று மக்கள் மத்தியில் தொலைக்காட்சியைப் போல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேறு எதுவும் இல்லை எனலாம். வயது வரம்பின்றி எல்லா தரப்பினரையும் அது கவர்ந்துவிட்டது. குறிப்பாக, நமது சிறார்கள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்கின்றார்கள். விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியோடுதான் அவர்களது பொழுதெல்லாம் கரைகிறது. அவர்களை குறிவைத்தே புதியபுதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாளுக்குநாள் வந்து கொண்டிருக்கின்றன.
      
ஆளுக்கொரு சினிமா ஹீரோவை பிடித்துக் கொண்டு அந்த ஹீரோவைப் போல பேசுவதும், தலை சீவுவதும், ஆடை அணிவதும், செயல்களைச் செய்வதும், மற்றவர்களோடு அந்த ஹீரோவைப் பற்றி வாக்குவாதம் செய்வதும் சிறார்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. ஹீரோ என்றால் மற்றவர்களை எப்படியாவது அடித்து வீழ்த்தி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தனையை தொலைக்காட்சி சிறார்கள் மனதில் வேரூன்ற செய்வதால் அவர்கள் முரட்டுக் குணம் படைத்தவர்களாகவும், தங்களால் முடியாததைக் குறித்து தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
            
தொலைக்காட்சியால் நமது சிறார்கள் பல்வேறு உறவுச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிற்கு மாமா, சித்தி, பாட்டி என்று யாராவது வந்துவிட்டால் சிறார்கள் அவர்களை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வது வழக்கம். இப்போதோ, யார் வந்தாலும் எனக்கென்ன என்று ரீமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியிலேயே கண்களை பதித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் ஏதாவது வேலைச்செய்ய சொல்லிவிட்டால் எளிதில் எரிச்சல் அடைந்து விடுகிறார்கள். தனக்கு விருப்பமான அலைவரிசையை வைக்கவேண்டும் என்று சிறார்கள் தங்களுக்குள்ளே ஓயாமல் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள்.
            
தொலைக்காட்சி தரும் ஆச்சரியமும், பயமும், வன்முறையும் நிறைந்த மாயாஜாலக் காட்சிகளை எதார்த்தமாக நினைத்துக் கொண்டு தாங்களும் அதே போல் செய்ய வேண்டும் என்ற தீராத மயக்கத்தில் இன்றைய சிறார்கள் உள்ளனர். இதனால் நடந்தேறும் விபரீதங்கள் கொஞ்சமல்ல. 1999 ம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் 30 க்கும் மேற்பட்ட சிறார்கள் அன்றைய சாகச வீரனான சக்திமானைப் பின்பற்றி தீக்குளித்தல், உயரத்திலிருந்து குதித்து கை கால்களை முறித்துக் கொள்ளுதல், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு விபரீதங்களுக்கு ஆளானார்கள். 27.08.2006 அன்று மதுரையை சார்ந்த தியாகேஷ் என்ற சிறுவன் பவர் ரேஞ்சர்ஸ்களை நினைத்துக் கொண்டு தீயோடு விளையாடி உயிரை மாய்த்துக் கொண்டான்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்கள் அதிகநேரம் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?
 தொலைக்காட்சியால் வரும் நன்மைதீமைகள் என்னென்ன?
 தொலைக்காட்சியில் எவற்றை விரும்பிப் பார்க்கிறீர்கள்? ஏன்?

நான் யாராகப் போகிறேன்? (I want to Be...)

          'நீங்கள் யாராகப் போகிறீர்கள்?' என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். வகுப்பில் ஆசிரியரோ, வீட்டில் நம பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்கும்போது, 'நான் டாக்டராகப் போறேன்... இஞ்சினியராகப் போறேன்... கலெக்டராகப் போறேன்... டீச்சர் ஆகப்போறேன்' என்று விதவிதமாய் பதிலளித்திருப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு பதிலளித்ததோடு சரி. அதன்பிறகு, நாம் என்ன சொன்னோம் என்பதே நம்மில் பலருக்கு நினைவிருப்பதில்லை. ஏதோ ஒருசிலர்தான் தாங்கள் சிறுவயதில் கொண்டிருந்த குறிக்கோளைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, அருமையாக திட்டம் தீட்டி, விடாமல் முயற்சி செய்து குறிக்கோளை அடைந்து விடுகிறார்கள்.
            
அமெரிக்காவில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கனிடம் சிறுவயதிலேயே ஒரு குறிக்கோள் இருந்தது. அமெரிக்காவின் அதிபர் தங்கும் மாளிகையான வெள்ளைமாளிகையில் தானும் ஒருநாள் அதிபராக அமர்ந்து, மக்களுக்கு சேவை செய்வேன் என்பதே அவரது சிறுவயது குறிக்கோள். அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு அவரின் இந்த குறிக்கோள் மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால், லிங்கன் தனது குறிக்கோளில் மிகவும் உறுதியாயிருந்தார். வீட்டின் மிகவும் ஏழ்மையான சூழலிலும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் கடினப்பட்டுப் படித்து முன்னேறினார். தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் தொடர்ந்து படுதோல்வியடைந்தார். இருப்பினும், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டேயிருந்தார். ஆம். அந்த நாள் வந்தது. தான் நினைத்ததுபோலவே அதிபராகி வெள்ளைமாளிகையில் போய் அமர்ந்தார். கறுப்பின மக்களுக்காக அளப்பரிய பணிகளை செய்து எல்லோருடைய மனதிலும் நீங்காத  இடத்தையும் பெற்றுவிட்டார்.
             
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள் என்று பிறர் நம்மிடம் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும். 'நான் யாராகப் போகிறேன்?' என்ற கேள்வியை நாம் என்றாவது நம்மிடம் கேட்டு;ப் பார்த்திருக்கின்றோமா? ஏதோ நாமும் பிறந்தோம்... ஜாலியாக இருந்தோம்... இறந்தோம் என்று வாழ்வை வீணடிக்கப்போகிறோமா?
        
சிலரிடம் குறிக்கோள்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆயிரம் குறிக்கோள்கள் அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. ஆனால், அதனை அடைவதற்கான வேகம், விவேகம், கடின உழைப்பு, மனஉறுதி காணப்படுவதில்லை. அதனால்தான் லிங்கனைப்போல் நம்மால் குறிக்கோளை அடையமுடிவதில்லை.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 'நான் யாராகப் போகிறேன்?' என்ற தெளிவு உங்களிடம் இருக்கிறதா? யாராகப் போகிறீர்கள்?
 அந்த இலக்கை அடைய என்னென்ன முயற்சிகளை இதுவரை மேற்கொண்டிருக்கிறீர்கள்?
 நமது எந்தவொரு இலக்கும் சமூக நலனுக்காகவே என்பது சரியா?