
நற்கருணையும் சமூக விடுதலையும் என்ற எனது ஆய்வுக் கட்டுரை நான்கு இயல்களை கொண்டுள்ளது. நற்கருணைப் பற்றிய புரிதலை இந்தியாவில் நிலவும் மெய்மைகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளும் விதமாக, இந்தியாவில் ஆழமாகக் காணப்படும் சில அடிமைச் சூழல்களை முதலாவது இயல் முன்னிறுத்துகிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்வுச் சூழல்களை அவ்வளவாக கருத்தில் கொண்டிராத நற்கருணைப் பற்றிய திருச்சபையின் மரபுப் புரிதல்களை இரண்டாவது இயல் சுருக்கமாக எடுத்தியம்புகிறது. சமூக விடுதலைக்கான தாகத்தோடு நற்கருணை விடுதலை வாழ்வியல் சிந்தனைகளை விரிவாகவும் ஆழமாகவும் மூன்றாவது இயலானது ஆய்வு செய்கிறது. எனது தெளிவுகளையும் நடைமுறை வாழ்வுக்கான பரிந்துரைகளையும் கொண்டதாக நான்காவது இயல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு சமூகங்களிலும் விடுதலை வாழ்வுக்கான ஏக்கம் எல்லா காலங்களிலும் பரவலாகக் காணப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ஏக்கம் பல சமூகங்களிலும் ஆழமாகக் காணப்படுவது நாம் அறிந்ததே. இலங்கையில் சிங்களர்களால் படுகொலைச் செய்யப்படுகின்ற தமிழ் சமூகமாக இருக்கட்டும், இந்தியாவில் சுமார் 3500 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிய ஏற்றத்தாழ்வுகளால் வஞ்சிக்கப்படுகின்ற தாழ்த்தப்பட்ட சமூகங்களாக இருக்கட்டும், எல்லா சமூகங்களிலும் விடுதலைக்கான ஏக்கத்தை நாம் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு நாளும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம்.


1. நமது இந்திய சமூகம் சந்திக்கும் சில சவால்கள்
சமூக ஆன்மீகம் அடிப்படையில் சூழல் மைய ஆன்மீகம் என்பது நாம் அறிந்ததே. ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு குழுமம் தனது வாழ்வுச் சூழல்களின் மத்தியில் சமூக அக்கறையோடு தனது ஆழமான நிலைப்பாடுகளை எல்லோரும் நிறைவாழ்வு பெறும் பொருட்டு அன்றாடம் வாழ்ந்துகாட்டும் வாழ்க்கைமுறையையே சமூக ஆன்மீகம் என்று நான் வரையறைச் செய்கின்றேன். தனது சமூகச் சூழலைப் பொருட்படுத்தாத எந்தவொரு வாழ்க்கைமுறையுமே ஆன்மீகம் எனக் கருதப்படலாகாது. இந்தப் புரிதலின் அடிப்படையில், இந்திய சமூகத்தில் நிலவும் சில அடிமைச் சூழல்களை மையப்படுத்தி நற்கருணையின் சமூக விடுதலைக் கூறுகளைப் புரிந்து கொள்ள முயல்வதே நமது தேடலில் சரியான அணுகுமுறையாக அமையும்.
1.1 சாதிய இந்தியா
இந்திய மண்ணின் மிகப்பெரிய சாபம் சாதியம். இந்தியர்களின் உடல் உள்ளம், உயிர், ஆன்மா அத்தனையையும் ஆட்டிப் படைப்பது சாதியக் கட்டமைப்பு. சமூகம், சமயம், அரசியல், கல்வி, பொருளாதாரம் என எல்லா தளங்களிலும் சாதி நாற்றம் வீசுகிறது. இந்தியாவின் சட்டக் கல்லூரிகள் முதல் ஆன்மீகம் பேசும் இறையியல் கல்லூரிகள் வரை சாதியின் உடும்புப் பிடிக்குள் உருவிழந்துக் கிடக்கின்றன. எந்த அளவுக்கு சாதியத்தை உள்வாங்கி இந்தியர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து சிதறுண்டுக் கிடக்கிறார்கள் என்றால்.. இந்தியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட சாதிகளாக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட சாதியினராக பிளவுபட்டுக் கிடக்கின்றனர்.
சமத்துவத்தின் நற்செய்தியை ஆணித்தரமாக முழக்கமிட்ட இயேசுவின் மறை உடலாக, மறு உடலாக விளங்க வேண்டியக் கிறித்தவம் இந்தியாவில் சாதிக் கட்டமைப்போடு கூட்டணி அமைத்துக் கொண்டு இன்னொரு ஜென்மப் பாவத்தை தன்மேல் சுமத்தியுள்ளது. 'இந்திய சமூகம் சாதியை விட்டொழிக்க நினைத்தாலும் இந்தியத் திருச்சபையிலிருந்து ஒருபோதும் சாதியை ஒழித்துக் கட்ட முடியாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
1.2. சமய அடிப்படைவாதம்
சமயங்கள் வாழ்வின் மையம் அல்ல. வாழ்வுதான் சமயங்களின் மையம். புல்சமய சூழலைக் கொண்ட இந்திய நாட்டில் சமய அடிப்படைவாதம் என்பது வன்முறைகளின் தோற்றுவாய். ஏங்கள் சமயமே உயர்ந்தது, எங்கள் சாமி மட்டுமே உண்மை தெய்வம் மற்றவையெல்லாம் வெறும் மாயைகளே என்ற போக்குகள் பிரிவினைகளையும் வன்முறைகளையும் உருவாக்குகின்றன. இதனால் இந்திய அரசியல் சாசனத்தின் 25,26,27 மற்றும் 28 எண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்சமய சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவில், சமய அடிப்படைவாதத்திற்கான சிறந்த உதாரணமாக இந்து அடிப்படைவாதத்தை நாம் சுட்டிக் காட்ட முடியும். இந்துத்துவா இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களைம் இந்தியக் குடிமக்களாக எற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மெக்காவையும் எருசலேமையும் புண்ணியத் தலங்களாகக் கொண்டுள்ள இவர்களுக்கெல்லாம் இந்தியாவில் இடமில்லை என்று இந்துத்துவா கூறுகிறது. இந்துக்களெல்லாம் ஒன்றுபட்டு இந்துக்களல்லாதவர்களை ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும், இந்து என்ற இனத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற எல்லோரையும் கட்டாயப்படுத்த வேண்டும், மசூதிகளையும் ஆலயங்களையும் தரைமட்டமாக்க வேண்டும், இந்துக்களல்லாத எவருக்கும் இந்தியாவில் மனித உரிமைகளும், மாண்பும், மதிப்பும் மறுக்கப்பட வேண்டும் என இந்துத்துவா ஆணித்தரமாகக் கூறுகிறது. இவைகளை செயல்படுத்த வன்முறைகளை தூண்டி விடுகிறது. டிசம்பர் 6, 1992 ல் பாபர் மசூதி இடிப்பிற்கும் படுகொலைக்கும் விளக்கம் கொடுத்த எல்.கே. அத்வானி அவர்கள், 'இது கடவுளின் செயல், தேசத்தின் பெருமை' என்று புகழாரம் சூட்டினார்.
1.3. செல்வக் குவிப்பும் ஏழ்மையும்
இந்தியாவில் பலர் வாட வாட, சிலர் வாழ வாழ ஒருபக்கம் செல்வக் குவிப்பும் மறுபக்கம் ஏழ்மையும் வறுமையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா ஒளிர்கிறது என்று சிலரின் செல்வச் செழிப்பை மட்டும் காட்டி பெயரும் பதவியும் தேடி சுயநல அரசியல்வாதிகள் வரிசையில் நிற்கின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் 1.15 சதவிகிதம் பேர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். மறுபுறம் இந்தியாவிலுள்ள 65 சதவிகித குடும்பங்களுக்கு வங்கிக்கணக்கே கிடையாது. 2007 ல் பங்குச்சந்தைக் காளை சென்செக்ஸ் 10,000 புள்ளிகளைத் தாண்டிய நேரத்தில், ஆந்திராவின் விதர்பா மாவட்டத்தில் 301 வது விவசாயி கடன்தொல்லைக் காரணமாக தற்கொலைசெய்து கொண்டார். மத்திய அரசும், மாநில அரசுகளும் தனிநபர்களின் சொத்துக்குவிப்புக்கு வளைந்து நெளிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது .உண்மையை தரமறுக்கும் ஊடகங்கள் உலகமயமாக்கலை பிரம்மாண்டமாகப் பிரபலப்படுத்தி எதார்த்தங்களை நம்மிடமிருந்து மறைக்கின்றன.
1.4. பெண்ணடிமைத்தனம்

பெண்ணின் கற்பும் கடமையும் அளவுக்கதிகமாக முன்னிறுத்தப்படுகிறது. ஒரு பெண் யாரோடு வாழ வேண்டும்?, மனைவி என்பவள் ஒரு பொருட்டல்ல, கணவனது உரிமைப் பொருள், பெண் என்பவள் மதிமயங்கச் செய்பவள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண்கள் ஞானநிலையின் தடுப்புச்சவர் என்ற பெண்ணடிமை சித்தாந்தங்கள் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு வழிவகுக்கின்றன.
2. மரபுப் பார்வையில் நற்கருணை
நற்கருணைக் குறித்த புரிதல்கள் திருச்சபையின் வரலாற்றில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திடீரென்று முளைத்தவையல்ல. அரசியல்-சமூக-கலாச்சார சூழல்கள், பல்வேறு காரசாரமான விவாதங்கள், கேள்விகள், குழப்பங்கள் மத்தியில் பரிணமித்தவையே நற்கருணைப் பற்றிப் புரிதல்கள். பல ஆண்டுகால பரிணாமத்தில், நற்கருணை தனது விடுதலைக் கூறுகளை பெருமளவில் இழக்க நேரிட்டது. இதற்கு, கத்தோலிக்கத் திருச்சபையின் மரபுப் புரிதல்களே அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்று சொன்னால் மிகையில்லை. நற்கருணைக் குறித்த திருச்சபையின் வரலாற்றுப் பார்வை முற்றிலும் தவறானது என்று நாம் சொல்வதற்கில்லை. இழந்து போனதை தேடிக் கண்டுபிடிக்கும் இயேசுவின் மனநிலையோடு நற்கருணைக் குறித்த மரபுப் பார்வைகளை நாம் இந்தப் பகுதியில் சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
2.1. புதிய ஏற்பாட்டு நூல்களின் பார்வையில் நற்கருணை
புதிய ஏற்பாட்டு நூல்கள் நற்கருணையைக் குறித்த விரிவானத் தகவல்களை கொண்டிருக்கின்றன என்று நாம் சொல்வதற்கில்லை. யோவான் நற்செய்தி மட்டுமே மற்ற மூன்று நற்செய்திகளைக் காட்டிலும் நற்கருணையைக் குறித்து விரிவானக்; குறிப்புகளை நமக்குத் தருகிறது. யோவான் நற்செய்தியின் 6 ம் மற்றும்; 13 ம் அதிகாரங்களில் இவைக் காணக் கிடக்கின்றன. ஒத்தமைவு நற்செய்திகள் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வினை மட்டுமே குறிப்பிடுகின்றன (மத் 26:26-28, மாற் 14:22-24, லூக் 22:19-20). அதுவும் சுருக்கமாகவே சொல்லியிருக்கின்றன. இயேசுவின் இறப்பு நிகழ்வுகளுக்கு சற்று முன்னர் நிகழ்ந்த நிகழ்வாக நற்கருணையை எற்படுத்தும் நிகழ்வு காட்டப்படுகிறது. இந்த நிகழ்வு இயேசுவின் உடனிருப்பு, சாவு, தியாகம், பலி, விருந்து போன்ற புரிதல்களை தருகின்ற வகையில் ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எம்மாவுசுக்கு சென்ற சீடர்கள் அப்பம் பிடுதலின் போது இயேசுவை இனங்கண்டு கொண்டதாகவும் (லூக் 24: 30-31), தொடக்கக் கிறித்தவர்கள் ஒவ்வொரு நாளும் கூடிவந்து அப்பம் பிட்டு நட்புறவில் வாழ்ந்ததாகவும் (தி.ப. 2: 42-46) வேறும் சில சுருக்கமான குறிப்புகள் புதிய ஏற்பாட்டு நூலில் காணக்கிடக்கின்றன.
ஒத்தமைவு நற்செய்திகளில் காணப்படும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் வார்த்தைகள் (மாற் 14: 17-26, லூக் 22:14-23, மத் 26:20-30) யோவான் நற்செய்தியில் இடம்பெறவில்லை. இதற்கு மாறாக, இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வு இடம்பெறுகிறது. யோவான் நற்செய்தியாளரை பொறுத்தமட்டில், பாதம் கழுவும் நிகழ்வே நற்கருணை ஏற்படுத்தும் வார்த்தைகளுக்கான சரியான விளக்கமாக அமைகிறது. யார் பெரியவர் என்ற விவாதங்களைக் கடந்து ஒருவரையொருவர் மனமார அன்பு செய்ய அழைப்பு விடுக்கும் இயேசுவின் அன்புக் கட்டளையே யோவான் நற்செய்தியாளருக்கு இன்றியமையாததாகத் தோன்றியது.
தொடக்கக் காலக் கிறித்தவர்கள் வீடுகளில் ஒன்றாக கூடிவந்து நற்கருணையைக் கொண்டாடினர். அவ்வாறு வீட்டில் ஒன்றாக கூடி வந்து நற்கருணையைக் கொண்டாடி உணவருந்துவதென்பது அவர்களிடம் 'ஒரே குடும்பம்' என்ற உணர்வை மிக ஆழமாகக் ஏற்படுத்தியது. அவர்கள் நற்கருணை முக்கிய இடம் பெற்றிருந்தது. இது வழிபாட்டு நுணுக்கங்களைக் கடந்து பெரும்பாலும் ஒன்றாகக் கூடிவந்து தங்களது பிரச்சனைகளைப் பற்றிப் பகிர்வதும், சேர்ந்து உண்பதும், பிறரது மீட்புக்காகத் தன்னையே கையளித்த ஆண்டவரை நினைவுகூர்வதுமாக அமைந்திருந்தது.
நற்கருணை குறித்துக் காட்டும் உண்மைக்கு ஏற்ப தொடக்கக்கால கிறித்தவர்கள் இனங்களுக்கிடையேயும் வர்க்கங்களுக்கிடையேயும் உள்ள பிரிவினைச் சுவர்களை தகர்த்தெறிந்தனர். வறுமையை ஒழிக்கவும், பஞசம் மற்றும் இயற்கை அழிவு சூழல்களில் நிவாவண உதவிகள் செய்யவும் தாராளமாக மனமுவந்தனர் (2 கொரி 8,9 அதிகாரங்கள்).
2.2. திருச்சபை வரலாற்றுப் பார்வையில் நற்கருணை
தூய அந்தியோக்கு இன்னாசியார் (கி;.பி. 50 – 117) நற்கருணை நமது மீட்பரின் உடல் என்ற நம்பிக்கையை ஆழப்படுத்தினார். இவ்வாறு நம்புவதால் விதவைகள், அநாதைகள், ஒடுக்கப்பட்டோர், சிறையிலிருப்போர். பசித்திருப்போர், தாகமாயிருப்போர் ஆகியோருக்கான பரிவிரக்கச் செயல்பாடுகளை நாம் முன்னெடுக்க முடியும் என்றார். ஆயர் மட்டுமே நற்கருணைக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். ஞாயிறு வழிபாட்டைக் குறித்த முதல் தகவலை தூய ஜஸ்டின் (கி;.பி. 100- 165) தருகிறார். சாதாரண அப்பமும் இரசமும் அல்ல. மாறாக மீட்பரின் உண்மையான உடலும் இரத்தமும் ஆகும். இயேசுவினுடைய அதே வார்த்தையால் இவ்வாறு மாறுகிறது என்றார்.ஜ11ஸ இருவகையான நற்கருணைக் கொண்டாட்டங்களைப் பற்றியக் குறிப்பினை இவர் தருகிறார். அ) ஆண்டக்கொருமுறை கொண்டாடப்பட்ட நற்கருணைக் கொண்டாட்டம். இதில்தான் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஆ) வாரத்திற்கு ஒருமுறைக் கொண்டாடப்பட்ட நற்கருணை. தினசரி திருப்பலி நடந்ததற்கான குறிப்புகள் ஏதும் இல்லை. நற்கருணை பீடம் புனிதமான பயத்தின் பீடமாகும். நற்கருணை என்னும் மறைபொருளைக் குறித்து மதிப்பும் நடுக்கமும் கொள்ள வேண்டும் என்று தூய ஜாண் கிறிசோஸ்தம் கூறினார்.
அரசன் கான்ஸ்டன்டைன் காலத்திலிருந்து (கி.பி. 313) நற்கருணையின் விடுதலைக் கூறுகள் ஓரங்கட்டப்பட்டன. கி;.பி;. 380 ல் அரசன் தியோடோசியஸ் கிறித்தவ மதத்தை அரச மதமாக அறிக்கையிட்டார். தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களெல்லாம் கிறித்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் கிறித்தவ மதத்திற்குள் வந்தனர். இந்தப் பெரிய மக்கள் கூட்டம் கூடி வருவதற்காக பெரிய திருத்தலங்கள் கட்டப்பட்டன. இல்லங்களில் கொண்டாடப்பட்ட நற்கருணை மாடமாளிகைப் போன்ற கோயில்களுக்கு மாற்றப்பட்டன. அவை மிக ஆடம்பரமான முறையில் அலங்கரிக்கப்பட்டன. சாதாரணப் பாத்திரங்களுக்குப் பதிலாக தங்கம் மற்றும் வெள்ளியாலான பாத்திரங்கள் வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டன.

ஆயர்கள் நீதிபதிகளாக இருந்ததால் அவர்கள் பங்கேற்ற மற்ற நிகழ்வுகளைப் போலவே அவர்கள் நடத்திய வழிபாடுகளுக்கும் அதிகார பலம் இருந்தது. நீதிபதிகளாக இருந்த ஆயர்களின் கடைக்கண் பார்வையைப் பெறும் விதமாக மக்கள் பரிசுப் பொருட்களை காணிக்கை என்ற பெயரில் வழிபாட்டின் போது ஏராளமாகக் கொண்டு வந்துக் கொடுத்தனர். அரசனுடைய நலனுக்காகவும் ஆயர்களுடைய நலனுக்காகவும் மன்றாட்டுக்களைச் சொல்லும் பழக்கம் இக்காலக்கட்டத்தில்தான் இன்றியமையாததாக ஆனது. மக்கள் தங்கள் நலனுக்காகவும் திருப்பலி ஒப்புக் கொடுக்குமாறு அயர்களுக்கும் குருக்களுக்கும் காசு கொடுக்க ஆரம்பித்தனர். இங்குதான் தினசரி திருப்பலி என்ற முறை உதயமானது.
நற்கருணையைப் பொறுத்தமட்டில், அடக்குமுறையாளர்களுக்கு சார்பான புரிதல்கள் உருவெடுத்தன. முதலாளிகள், காலனியாதிக்கவாதிகளுக்கு சார்பாக அமைந்த நற்கருணைக் கொண்டாட்டங்கள் சாதாரண மக்களிடம் கீழ்ப்படிதலையும் சுரண்டல்வாதிகளின் தாராள குணத்தையும் முன்வைத்தது. இத்தகையக் கொண்டாட்டங்கள் உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றத்திற்கான எந்தவொரு நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. பலி என்கிற வழிபாட்டுப் புரிதல் அழுத்தம் பெற்றது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டது. சாதாரண மக்களுக்கு இந்த 'புனிதமான' நற்கருணையை தொடுவதற்கான தகுதியில்லை என்ற நிலை உருவானது. நற்கருணை வழிபாடுகளிலும் படிப்பினைகளிலும் அருட்பணியாளர்கள் மட்டுமே மையப்படுத்தப்பட்டனர்.
நமது கண்கள் வெறும் அப்பத்தையும் இரசத்தையும் பார்த்தாலும் நம்பிக்கையால் நாம் அவற்றை இயேசுவின் உண்மையான உடலாகவும் இரத்தமாகவும் ஏற்றுக் கொள்கிறோம் என்று தூய அகுஸ்தினார் (கி;.பி. 354 – 430) குறிப்பிட்டார். நற்கருணை என்பது வெறுமனே ஒரு பொருளல்ல. மாறாக, அது ஒரு அருட்சாதனம் என்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது கிறிஸ்துவின் உடல் என்பதற்கு ஆமென் என்று சொல்லும் நாம் அருட்சாதனமாகவே ஆகிவிடுகிறோம். இயேசுவின் உடலின் உறுப்புக்களாக இருக்கின்றோம். நற்கருணைக்கு முதலில் வணக்கம் செலுத்தியப் பிறகுதான் எவரும் அதை உண்ண வேண்டும் என்றார்.
காலப்போக்கில், நுணக்கமான வழிபாட்டு வரையறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நற்கருணைக் கொண்டாட்டத்தை அர்த்தமிழக்கச் செய்தது திருச்சபை. வழிபாட்டு நுணுக்கங்கள், குருக்களின் முக்கியத்துவம், ஆராதனை, பயம் போன்றவை முன்னிறுத்தப்பட்டு நற்கருணையின் அடிப்படை அர்ததங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இதற்கு தவறான கிறிஸ்தியலும் ஒரு காரணமானது. ஏனென்றால், கிறிஸ்தியல் இயேசுவின் புனிதத்தை ஓயாமல் அழுத்தி இயேசு ஒரு மனிதராக வாழ்ந்து பிறரது விடுதலைக்காகக் தன்னையேக் கையளித்தார் என்ற சிந்தனையை எங்கோ கண்தெரியாத இடத்திற்குள் புதைத்து விட்டது.
இயேசுவின் புனிதம் தந்தையாம் கடவுளுடைய புனிதத்திற்கு நிகரானதா என்று கேள்விகள் எழும்பியக் காலகட்டத்தில் நீசேயா பொதுச் சங்கம் (கி;.பி. 325) தந்தையாம் கடவுளுக்கு நிகராக இயேசுவின் புனிதத்தை வலியுறுத்தியது. இதன் பின்னணியில், நற்கருணை புனிதமிக்க மறைபொருளாக வலிறுத்தப்பட்டது. நற்கருணை என்பது மதிப்போடும் பயத்தோடும் கூடிய ஆராதனைக்குரியது என்ற புரிதல் கொடுக்கப்பட்டது. மக்கள் நற்கருணைக் குறித்த பயத்தைக் கொள்ள ஆரம்பித்தனர். நற்கருணையின் புனிதத்தையும் தங்களின் பாவநிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து நற்கருணையிடமிருந்து தங்களை தூரப்படுத்திப் பார்த்தனர். 'நான் தூய நிலையில்தான் இருக்கிறேன்' என்று தீர்க்கமாக உணர்பவர்கள் மட்டுமே நற்கருணை பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதனால் மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே நற்கருணைக் கொண்டாட்டங்களுக்கு வந்து சென்றனர். நற்கருணையைப் பெற்றுக் கொள்ள அச்சமுற்றனர். ஆய்களும், குருக்களும். திருத்தொண்டர்களுமே மையப்படுத்தப்பட்டனர். நற்கருணை வழிபாட்டுக்கு விண்ணுலகைச் சார்ந்த புரிதல்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டன. குரு என்பவர் இயேசு நிலையிலும், மெழுகுவர்த்தி நமது நம்பிக்கையை குறிக்கிறது என்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
நற்கருணை ஆன்ம உணவாக, வானதூதர்களின் உணவாக அழுத்தம் பெற்றதால் சாதாரண மக்கள் அதைப் பெற தங்களுக்குத் தகுதியில்லை என உணர்ந்தனர். பலவகையானத் திருப்பலிகள் அறிமுகம் செய்யப்பட்டு நற்கருணைக் கொண்டாட்டங்கள் வியாபார மையப்படுத்தப்பட்டன. குருக்களின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நற்கருணைக் கொண்டாட்டங்கள் எந்திரமயமாக்கப்பட்டன.

தூய வின்சென்ட் தே பவுல் (கி;.பி.1581- 1660) நற்கருணையில் நாம் இறைவனோடு கொள்ளும்; அதே ஒன்றிப்பை வாழ்வை இழக்கும் தருவாயிலிருக்கும் மனிதர்களோடு கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் என்றார். நாம் இறைவனோடு கொள்ளும் ஒன்றிப்பு மிகப்பெரிய கொடை. இந்த கொடையை நாம் நற்கணையில் பெறுகிறோம். இந்த மிகப்பெரிய கொடையை நாமும் பிறருக்கு கொடுக்க அழைக்கப்படுகிறோம். நற்கருணையை இவர் வானக மன்னா என்று அழைக்கிறார். எல்லோருமே குறிப்பாக, ஏழைகளும் அவரை பெறமுடியும் என்பதற்காக இயேசு அப்ப விடிவில் தன்னை நமக்கு விட்டுச் சென்றுள்ளார் என்று தூய அல்போன்சு லிகோரி (கி;.பி. 1695- 1787) குறிப்பிட்டார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் (கி;.பி. 1920- 2005) புரிதலின்படி, திருச்சபைக்கு நற்கருணையே மையம் (திருச்சபையும் நற்கருணையும் எண்:7). நற்கருணையிடமிருந்துதான் திருச்சபை தனது உயிரையும் ஆற்றலையும் பெறுகிறது. நற்கருணையின் மூலம் நாம் மீட்பின் அருளால் நிரப்பப்படுகிறோம். சிறப்பாக, அருட்பணியாளர்கள் இவ்வருளால் நிரப்ப்படுகின்றனர். ஏனெனில், அவரே இயேசுவின் வார்த்தைகளை சொல்லி புனிதப்படுத்துகிறார். நற்கருணை என்னும் கொடை திருச்சபையின் விலைமதிக்கமுடியாத சொத்து. இதில், இயேசுவின் ஒட்டுமொத்த வாழ்வும் அடங்கியுள்ளது. இறையாட்சிக்கான அவரது பொறுப்புணர்வு, அவரது போதனை, குணமளித்தல், அவரது விடுதலையளிக்கும் செயல்பாடுகள், அவரது பாடுகள், துன்பம் அனைத்துமே ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை 16 ம் ஆசீர்வாதப்பர் கருத்தின்படி, கிறிஸ்து தன்னை நமக்கு முழுமையாகக் கொடுக்கும் நிகழ்வான நற்கருணையே முழுமையான பரிவிரக்கச் செயல்பாடாகும். நற்கருணை என்னும் கொடையால் நம்மில் புதிய வாழ்வு, நிலையான வாழ்வு, உருப்பெறுகிறது.ஜ24ஸ இறைமகனின் சாயலை பிரதிபலிக்கும் வண்ணம் நற்கருணை நம்பிக்கைக் கொண்டோரில் தொடர் மாற்றத்தை விளைவிக்கிறது. நம்பிக்கை; கொண்டோரின் அன்றாட வாழ்வினை நற்கருணை ஆழமாக தொடுகிறது. நற்கருணையில் நாம் கொண்டாடும் அன்பு அதன் இயல்பிலேயே அந்த அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறித்தவ வாழ்வு என்று சொல்லும்போது இந்த அன்பை பிறருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நமது வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும்.
2.3. நற்கருணையைக் குறித்த சில விவாதங்கள்
பாஸ்காஸ் ராட்பர்ட் என்பவர் கி;பி; 831 – ல் புனிதப்படுத்தப்பட்ட அப்பமும் இரசமும் இயேசுவின் உண்மையான உடலும் இரத்தமும் என்று கூறினார். டூர்ஸ் - ஐ சார்ந்த பெரங்கர் (11- ம் நூற்றாண்டு) என்பவர் பாஸ்காஸ் ராட்பர்ட்டின் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்தார். அப்பமும் இரசமும் அடையாளங்களே என்றார். இயேசுவின் உண்மையான உடலும் இரத்தமுமல்ல அவை. மாறாக, இயேசுவின் ஆவியும் அருளும் ஆற்றலும் அவற்றில் இருக்கிறது என்றார். உரோமைச் சங்கம் (கி.பி. 1059) பெரங்கரின் இந்தக் கருத்தைக் கண்டனம் செய்தது. அவை உண்மையாகவே இயேசுவின் உடலும் இரத்தமும் என்ற ராட்பர்ட்டின் கருத்தை சங்கம் வலியுறுத்தியது. இக்காலத்தில்தான், நற்கருணையில் இரத்தம் வடிகிறது என்பது போன்ற நம்பிக்கைகள் பரப்பப்பட்டன. நற்கருணை ஆராதனை, நற்கருணைப் பேழையை கோவிலின் நடுப்பகுதியின் உயரமான இடத்தில் வைத்தல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. குரு உயர்த்திப்பிடித்துக் கொண்டிருக்கும் நற்கருணையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த வேளையில் உத்தரிக்கும் தலங்களில் இருக்கும் ஆத்துமாக்கள் துன்புறாமலிருக்கும் என்ற நம்பிக்கைப் பரப்பப்பட்டது. இதனால், மக்கள் குரு உயர்த்திப் பிடிக்கும் நற்கருணையைக் காண கோவில் கோவிலாகச் சென்றனர். குருவும் நீண்ட நேரம் நற்கருணையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்பமும் இரசமும் சரியாக எந்த நேரத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன? அது எவ்வாறு அப்படி மாற்றம் காண்கிறது? நற்கருணை என்ற அருளடையாளம் எத்தகைய தன்மை கொண்டது? அவை தன்னிலையிலேயே அருளைத் தர முடியுமா? என்றெல்லாம் பலவிதமான விவாதங்கள் எழுந்தன. நற்கருணை தன்னிலையிலேயே அருளைத் தரக்கூடியது என்று தாமஸ் அக்குவினாஸ் குறிப்பிட்டார். நற்கருணை தன்னிலையிலேயே அருளைத் தரமுடியாது; அவை கடவுளின் அருளை நாம் பெற்றுக் கொள்வதற்காக உதவி செய்யும் வெறும் கருவிகளே என்று மறுமலர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
புனிதப்படுத்தப்பட்டபின் அப்பம் இரசம் இவற்றின் பருப்பொருளோடு இயேசுவின் உடல், இரத்தம் ஆகிவற்றின் பருப்பொருளும் இணைந்து காணப்படுகின்றன என்ற புரிதல் தொடக்கத்தில் இருந்தது. (அரிஸ்டாட்டில் தத்துவம், அகுஸ்தினார், லூத்தர்). புனிதப்படுத்தப்பட்ட பிறகு அப்பம், இரசம் இவற்றின் பருப்பொருள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இயேசுவின் உடல், இரத்தம் இவற்றின் பருப்பொருள் மட்டுமே இருக்கிறது என்ற புரிதல் தொடர்ந்து வந்தது. பின்பு, தோற்றத்தில் அப்பம், இரசம் போன்று காணப்பட்டாலும் இயேசுவின் உடலும் இரத்தமுமே பருப்பொருளாகக் காணப்படுகிறது என்ற புரிதல் வலியுறுத்தப்பட்டது. இந்தப் புரிதலே இன்றுவரை திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனையாக இருந்து வருகிறது.
இவ்வாறு, நற்கருணை உண்மையிலேயே இயேசுவின் உடல், புனிதமானது, ஆராதனைக்குரியது, பயமும் நடுக்கமும் கொள்ளப்படக் கூடியது, புனிதமான நிலையில்தான் அதைப் பெற வேண்டும், நற்கருணைக் கொண்டாட்டத்தை குறிப்பிட்ட நபர்கள்தான் நடத்த முடியும், நற்கருணையால் பாவப் பரிகாரங்கள் கிடைக்கும், உத்திரிக்கிற தலத்தில் உள்ளவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும், விண்ணுலக வாழ்வுக்கான அருளை நற்கருணை சிறப்பான விதத்தில் பெற்றுத் தர இயலும், என்ற புரிதல்களே திருச்சபையின் வரலாற்றில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது.
3. சமூக விடுதலைக்கான நற்கருணை வாழ்வியல் சிந்தனைகள்
கத்தோலிக்கத் திருச்சபை மரபில்; பலரும் நற்கருணை கிறித்தவ வாழ்வின் மையம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கிறித்தவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை பலி என இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தியிருப்பதை நாம் இங்குக் கருத்தில் கொள்ள வேண்டும் (திருச்சபை, எண்11). நற்கருணையைக் குறித்து தற்போதையக் காலக்கட்டத்தில் ஆழமான சிந்தனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சிந்தனையாளர்களும் 'நற்கருணை கிறித்தவ வாழ்வின் மையம்' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுத்துகின்றனர். தே. அல்போன்சு அவர்கள் 'நற்கருணை கிறித்தவ சமயத்தின் மிக உன்னதமான அருளடையாளம். அதற்கு கிறித்தவ மக்களின் வாழ்விலும் வழிபாட்டிலும் மைய இடம் உண்டு' என்பதை தனது புத்தகத்தின் முன்னுரையில் முதலுரையாக முன்னிறுத்துகிறார். ஆகவே, கிறித்தவ வாழ்வின் மையமான நற்கருணையிலும் அதன் கொண்டாட்டத்திலும் மாற்றம் ஏற்படுமாயின் அவர்களின் அன்றாட வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மை.
நற்கருணையின் புனிதத்தை மட்டுமே தூக்கி நிறுத்தத் துடிப்பவர்களுக்கு நற்கருணையின் விடுதலைக் கூறுகள் குறித்த விவாதங்கள் விரும்பத்தகாததாகத் தோன்றலாம். ஆனால், இயேசுவின் நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இத்தகைய விவாதங்கள் மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. இயேசுவின் தியாகச் செயல்பாடுகளுக்கு நமது வாழ்வுச் சூழலில் ஆழமான அழுத்தமான புரிதல்களை தருவதே இத்தகைய விவாதங்களின் நோக்கமாகும்.
நற்கருணை பற்றிய கிறித்தவத்தின் மரபுப் புரிதல்களை பற்றிய விவாதங்கள் தேவையா? அத்தகைய விவாதங்கள் நியாமானதா? என்ற கேள்விகள் எழும்பலாம். இத்தகைய விவாதங்கள் தேவையானதே; நியாயமானதே. கிறித்தவம் வரலாற்றின் பலவேளைகளில் ஆதிக்க சக்திகளோடு கரம்கோர்த்து வந்துள்ளதால் இத்தகைய விவாதம் நியாயமானதே.ஜ28ஸ கிறித்தவ வாழ்வின் மையம் என்று சொல்லப்படும் நற்கருணை பெரும்பாலானக் கிறி;த்தவர்களின் தனிப்பட்ட வாழ்விலோ, சமூகத்திலோ குறிப்பிட்டுச் சொல்லும்படியான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதால் நமது மரபுப் புரிதல்களைப் பற்றிய விவாதம் அர்த்தமானதே.
3.1 நற்கருணையும் பாஸ்கா என்னும் விடுதலைக் கொண்டாட்டமும்
பாஸ்கா கொண்டாட்டம் யுதர்களின் விடுதலைக் கொண்டாட்டமாகும். எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து கடவுள் மோசே வழியாக இஸ்ரயேலரை விடுதலைக்கு அழைத்து வந்ததன் கொண்டாட்டம் இது. இத்தகைய விடுதலைக்கு கடவுள் தேர்ந்துகொண்ட வழிமுறை வன்முறையே. இந்த விடுதலைப் பாதையில் கடவுள் இஸ்ரயேலருக்குத் திடமளிக்கக் கொடுத்த உணவுதான் மன்னாவும் காடையும். பாஸ்கா இரவு என்பது இஸ்ரயேலரின் அரசியல் விடுதலை நிகழ்வு.
எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப் பெற்றதை நினைவுகூரும் விதமாக பாஸ்கா உணவு அமைந்திருந்தது (வி.ப. 24 1-10). கடந்தகால அடிமைச் சூழலை நினைவு கூருவதும், விடுதலையளிக்கும் கடவுளின் செயலை நினைவுகூருவதும், என்றாவது ஒருநாள் நிச்சயமாக முழுவிடுதலையும் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து கொள்ளச் செய்வவதும் இந்த பாஸ்கா விழாவின் நோக்கமாக இருந்தது. பாஸ்காவிழா கொண்டாட்டத்தின் போது யூதர்கள் உண்மையாகவே தங்களது விடுதலையை உணர்வை வெளிப்படுத்தினர். இதனாலேயே பாஸ்கா விழாவின் போது கலவரங்கள் வெடித்தன. இத்தகைய கலவரங்களையும் குழப்பநிலையையும் கட்டப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவே பாஸ்கா விழாக் காலத்தின் போது அரசன் எருசலேமில் தங்க வேண்டியிருந்தது.
யூதர்களின் விடுதலை உணர்வுகள் பொங்கி வழியும் பாஸ்கா இரவில் இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதாக நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த இரவில் ஏற்படுத்திய நற்கருணையும் அத்தகைய ஒரு விடுதலையை மையப்படுத்தியதே. இயேசு செய்த ஒவ்வொரு செயல்களிலும் மிக ஆழமான அர்த்தங்கள் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். அவர் இந்த கடைசி இராவுணவை உண்ண மிகவும் ஆவலோடு இருந்ததாக லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (லூக் 22:15). இந்த இராவுணவை உண்ண இயேசு ஒரு திட்டம் வைத்திருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது. ஆகவே, இயேசுவைப் பொறுத்தமட்டில் இந்த இராவுணவு மிகவும் முக்கியமானது; அர்;த்தம் மிகுந்தது. இந்த நிலையில், இயேசு நற்கருணையை எற்படுத்த குறிப்பாக பாஸ்கா இரவைத் தேர்ந்து கொண்டதென்பது நற்கருணை அடிப்படையில் ஒரு விடுதலைக் கொண்டாட்டமே என்ற புரிதலை ஆழமாக வெளிப்படுத்துகிறது.
3.2. சமூக விடுதலைக்காக தன்னையே முழுமையாகக் கையளித்தல்
இயேசு கடைசி இராவுணவில் ஏற்படுத்திய நற்கருணை அவரது ஒட்டுமொத்த வாழ்வின் அர்த்தங்களையும் உள்ளடக்கியது. அவர் முழுமையான மனித விடுதலைக்காகத் தன்னையே கையளித்தார். இத்தகைய தியாகத்தை அவரது சீடர்களும் அவரது நினைவாகச் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். நற்கருணையின் அடிப்படை அர்த்தமே 'பிறரது விடுதலைக்காகத் தன்னையேக் கையளித்தல்' என்பதுதான்.
நற்கருணையில் உண்மையாக பங்கெடுத்தல் என்பது வெறுமனே ஞாயிறு திருப்பலிக்கு மட்டும் வழக்கமாக சென்று வருவதல்ல. மாறாக நற்கருணையைக் குறித்து இயேசு கொண்டிருந்த புரிதலை நமது நம்பிக்கையாகவும் அன்றாட வாழ்வாகவும் மாற்றுவதாகும். இயேசுவை பொறுத்தமட்டில் நற்கருணை என்பது மனுக்குலத்தின் விடுதலைக்காக தன்னையே சாவுக்குக் கையளிப்பதன் உயர்ந்த அடையாளமாகும். நற்கருணை விடுதலை செயல்பாட்டின் அடையாளம். பிறருக்காக வாழுதல் என்ற இயேசுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சுருக்கமே நற்கருணை.
தனது சமுதாயத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து தன்னையே ஒரு பலியாக இயேசுக் கொடுத்தார். தான் மேற்கொண்ட விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகவும், அத்தகைய ஒரு விடுதலைப் போராட்டத்தில் தனது உடனிருப்பு நிச்சயம் உண்டு என்ற உணர்வைக் கொடுப்பதாகவும் நற்கருணையை ஏற்படுத்தினார். யூதர்களின் பாஸ்காவை ஓர் அடையாளமாகப் பயன்படுத்தி அதற்கு ஆழமான அர்த்தத்தையும் கொடுத்தார். அந்த இராவுணவில் பங்கேற்றோரைப் பொறுத்தமட்டில் அது விடுதலை வாழ்வைப் பிறருக்குத் தரும் போராட்டத்தில் இணைந்தோர்களின் ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது.
உணவு, இயேசுவின் பிரசன்னம், நினைவு கூர்தல், உடன்படிக்கையை புதுப்பித்தல் என பல்வேறுக் கூறுகளை நற்கருணைக் கொண்டிருந்தாலும், 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று இயேசு நம் ஒவ்வொருவரையும் விடுதலைப் பணியில் பங்கேற்க விடுக்கும் அழைப்பே முக்கியமானக் கூறாகும். இது வெறும் வார்த்தையல்ல மாறாக வாழ்வு தரும் செயல்பாடு. அர்ப்பணத்தைத் தூண்டாத, முரண்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்காத நற்கருணைக் கொண்டாட்டம் வீணே. தனிப்பட்ட அன்பும் சமூக ஈடுபாடும் கொள்ளாதவரை நமது நற்கருணைக் கொண்டாட்டம் ஒரு தீட்டுப்படுத்தும் செயலே. ஏனெனில், இயேசுவைப் பொறுத்தமட்டில் நற்கருணை என்பது அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்காக உயிரையும் கொடுக்கும் தியாகச் செயலை முன்னிறுத்தியதாகும்.
3.3 உலகமெல்லாம் ஒரே அன்புக் குடும்பம்
உலகமெல்லாம் ஒரே குடும்பம், ஒரே சமூகம் என்ற கருத்தியல் நற்கருணையின் அடிப்படை கூறுகளில் ஒன்றாகும். தன்னை மட்டுமே மையப்படுத்தி வாழும் கிறித்தவர்கள் நற்கருணையின் இந்த உண்மையினை சரியாக புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர்.
இன்றைய உலகமயமாக்கல் வெறும் பொருளாதாரக் கூறுகளுக்கும் சுயநலக் கூறுகளுக்கும் மட்டும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுப்பதை நாம் காண்கிறோம். பொருளாதார இலாபத்தை மையப்படுத்தி அதற்காக மனிதர்களையும், மனித மாண்பையும், பொதுநலனையும் காவுகொடுக்கவும் உலகமயமாக்கல் துணிகிறது. ஆனால், நற்கருணை சகோதர அன்பையும், மனித நேயத்தையும், விடுதலையையும், பொதுநலனையும் மையப்படுத்தி பிரிவினைத் தடைகளை உடைத்தறிய துணிகிறது.
நற்கருணை என்னும் அருட்சாதனத்தில் அன்பே உருவான கடவுள் தன்னையே கிறித்துவில் நமக்கு பரிசாகக் கொடுக்கிறார். இதனால் நாம் ஒவ்வொருவருமே மற்றவர்களுக்கு அன்பின் கொடையாக மாறுகிறோம். சகோதரிகளாக, சகோதரர்களாக, நண்பர்களாக நாம் ஒருவருக்கொருவர் அன்புக் கூட்டுறவில் இணைகின்றோம். சாதி, வர்க்கம், இனம், தேசியம் போன்ற எல்லாவிதமான பிரிவினை எல்லைகளையும் கடந்து கிறித்து என்னும் ஒரே உடலாய் ஒன்றிக்க நற்கருணை நமக்கு அழைப்பு விடுக்கின்றது.ஜ34ஸ நற்கருணையின் கூறுகளோடு முரண்பட்டுக் காணப்படும் எந்தவொரு மெய்மையும் கிறித்துவின் ஒரே உடலைக் கட்டியெழுப்பும் பணிக்கு தடையாக விளங்குகிறது.
பவுலடியார் கூறும் உடல் ஒன்றே உறுப்புக்கள் பல ( 1கொரி 12:1-29) என்ற சித்தாந்தம் நற்கருணை கூறுகளில் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. கிறித்துவின் உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்ளும் நமக்குள் இரத்த உறவானது நிலைநாட்டப்படுகிறது. இங்கே நாம் அனைவரும் கிறித்துவின் ஒரே உடலாய் உருப்பெறுகிறோம். ஒரே உடலின் உறுப்புக்களாய் மாறுகிறோம். ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாய் ஏற்றம் காண்கிறோம்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் (கி;.பி. 1962 – 1965) நற்கருணையின் அடிப்படை கூறுகளில் குறிப்பிடத்தக்கதாக கிறித்தவ ஒற்றுமையினை முன்வைத்தது நற்கருணை கிறித்தவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சமுமாகும். திருப்பந்தியில் கிறித்துவின் உடலால் ஊட்டம் பெறுகிறோம். நற்கருணை என்னும்; மாண்புமிகு அடையாளம் இறைமக்களின் ஒற்றுமையை விளைவிக்கிறது. இந்த ஒற்றுமை அன்றாட வாழ்விலே வெளிக்காட்டப்பட வேண்டியதாகும் (திருச்சபை, எண் 11). நற்கருணை கிறித்தவ ஒற்றுமைக்கான அடையாளம். நம் மத்தியில் ஏற்கெனவே இருக்கும் ஒற்றுமையின் வெளிப்பாடே நற்கருணை கொண்டாட்டம். இந்த நற்கருணை கொண்டாட்டத்தினால் நமக்குள் இருக்கும் ஒற்றுமை இன்னும் வலுப்பெறுகிறது (கிறித்தவ ஒன்றிப்பு, எண் 8).
3.4. பகிர்வுக்கான அழைப்பு
பகிர்வுக்கான ஆழமான அழைப்பை நற்கருணை முன்வைக்கிறது. கிறித்துவின் உடலையும் இரத்தத்தையும் நமக்குள் பகிர்ந்து கொள்வதென்பது நமது உடைமைகளையும், திறமைகளையும். வாய்ப்புகளையும் பிறரோடு தாராளமாக பகிர்ந்து கொளவதற்கான அழைப்பை முன்னிறுத்துகிறது. தொடக்கத் திருச்சபையில் இந்த அழைப்பு வாழ்வாக்கப்பட்டிருந்ததை நாம் திருத்தூதர் பணிகள் நூலில் காண்கிறோம். 'நம்பிக்கைக் கொண்டிருந்தோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாக வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பகிர்ந்தளித்தனர்' (தி;ப. 2:44-45) என்று பார்க்கின்றோம்.
ஆனால், கொரிந்து திருச்சபையில் இருந்த கிறித்தவர்கள் உணவுப் பகிர்தலுக்கும் நற்கருணைக் கொண்டாட்டத்திற்கும் இடையே இடைவெளியை நிலைநாட்டினர். இரண்டும் வேறானவை என்று எண்ணினர். பவுலடியார் அவை இரண்டும் ஒன்றே என்ற புரிதலைக் கொடுத்தார். ஒரே குடும்பம் என்ற முறையில் ஒன்றுகூடும் நாம் நம்முடைய அன்பின் வெளிப்பாடாக உணவுப் பகிர்வையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பதே பவுலின் நற்கருணை சித்தாந்தம்;.
நற்கருணையின் இலக்கணமே பகிர்வுதான். எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும் என்று நாம் தந்தையைப் பார்த்து செபிக்கின்றோம். இந்த செபத்திற்கு மறுமொழியாக கடவுள், பூமி என்னும் மிகப்பெரிய நற்கருணையை நமக்குத் தந்திருக்கிறார். பூமி என்ற இந்த பெரிய அப்பத்தை கடவுள் தனது இதய நெருப்பில் சுட்டுத் தந்துள்ளார். இந்த பூமி என்னும் அப்பம் பகிரப்படவேண்டும். அதனுடைய வளங்களெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எந்த அளவுக்கென்றால், யாருமே பசியோடு படுக்கைக்கு செல்லாத வகையில், யாருமே வேதனையில் உழலாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்ஜ40ஸ என்று இந்திய விடுதலை இறையியலாளர்களில் குறிப்பிடத்தக்கவரான சாமுவேல் ராயன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
3.5. வாழ்வே வழிபாடு
வழிபாடு என்பது பணிவாழ்வோடு பின்னிப் பிணைந்தது. வழிபாடு வேறு பணிவாழ்வு வேறு என்பது சரியான புரிதலாக அமையாது. நமது சமூக பொறுப்பணர்வையும் கடமைகளையும் ஓரங்கட்டிவிட்டு வழிபாடு என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்வது முறையல்ல. வழிபாடு நமது பொறுப்புணர்வையும்; கடமைகளையும்; புதிய உத்வேகத்தோடு செயல்படுத்த வழிவகுக்க வேண்டும். சமூக மெய்மைகளோடு நம்மை இன்னும் நெருக்கமாய் உணரச் செய்ய வேண்டும். இந்த மெய்மைகளை சரியாக விமர்சனம் செய்யவும், மாற்று செயல்பாடுகளை நாமே முன்னெடுக்கவும் தூண்டி எழுப்ப வேண்டும். இத்தகைய அடிப்படையிலேயே நாம் நற்கருணை வழிபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வழிபாட்டுப் புத்தகங்கள் மட்டுமே நற்கருணைக்கு முழுமையான அர்த்தத்தைத் தந்துவிட முடியாது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகச் சூழலில் வாழ்பவர்கள் ஒன்றுகூடி வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை சீண்டிப் பார்க்காத, ஏற்கெனவே தரப்பட்டுள்ள வாசகங்களை வாசித்து, நற்கருணை கொண்டாட்டங்களை கொண்டாடிவிட்டு, மீண்டும் அதே அடிமை-ஆதிக்க வாழ்வுச் சூழலுக்கு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிச் சென்று விடுவது மிகப்பெரிய முரண்பாடு. ஞாயிறு நற்கருணைக் கொண்டாட்டங்கள் பெரும்பாலான நேரங்களில் சமூக விடுதலையின் கொண்டாட்டமாக அமைவதில்லை. ஒரு வாடிக்கையான நிகழ்வாக மட்டுமே அமைந்து விடுகின்றது. இது, மேற்கத்திய நாடுகளில் நற்கருணைக் கொண்டாட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து வருவதற்கான இன்றியமையாத காரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
அர்த்தமற்ற வழிபாடுகளையும், பிறரன்பையும் நீதியையும் மையப்படுத்தாத வழிபாடுகளையும் இறைவாக்கினர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்தனர். எசாயா (1:11-17, 58:4-8), ஆமோஸ் (5:21-24) ஆகிய இறைவாக்கினர்கள் மிகச் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றனர். இறைவாக்கினர்களைப் போலவே இயேசுவும் வாழ்வினை முன்னிறுத்தாத வழிபாடுகளைக் கடுமையாக எதிர்த்தார். கோவிலை வியாபாரத் தலமாக்கியதைக் கண்டு கொதித்தெழுந்தார். வழிபாடும் வியாபாரமும் பின்னிப் பிணைந்து சாதாரண மக்களைச் சுரண்டியதைக் கண்டு அடித்து விரட்டினார். வளவளவென வார்த்தைகளை அடுக்கும் செபத்தையும், வெளிவேடம் நிறைந்த செபத்தையும் இயேசு கொஞ்சமும் விரும்பவில்லை.
மனிதர்களின் அன்றாடக் கவலைகளும், குழப்பங்களும், குமுறல்களும், மகிழ்ச்சியும் நமது வழிபாடுகளோடு பின்னிப்பிணைந்துச் செல்ல வேண்டும். மாற்று சமுதாயத்திற்கான செல்பாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வட்ட வடிவ தளத்தில் அமையும் ஒரே மானுடக் குடும்பத்திற்கான ஆன்மீகமாக நற்கருணை ஆன்மீகம் அமைய வேண்டும். நற்கருணைச் சமூகங்கள் முழுமையான மானுட விடுதலையை நோக்கிப் பயணிக்கும் சமூகங்களாக மாற வேண்டும். பூசாரித்தனங்களையும் நுணக்கமான வழிபாட்டு வரையறைகளையும் கடந்து புதிய உலகைக் கட்டியெழுப்பும் போராட்டச் செயல்பாடுகளை முன்னிறுத்துவதாக நற்கருணைச் கூட்டங்கள் அமைய வேண்டும்.
கோயில் மற்றும் குருத்துவ சம்பிரதாயங்களோடு முடங்கிவிடாத, பிறருக்காகத் தன்னையேக் கையளிக்கும் ஒரு அன்புப் பலிதான் முதல் நற்கருணைக் கொண்டாட்டம் (இயேசுவின் இராவுணவு). அதில் குருவே பலிபொருள். வழிபாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமூக அக்கறையை வளர்க்க வேண்டும். நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு கூடியிருக்கும் சமூகம் ஏனோதானோவென்று கூடியிருக்கும் தனிநபர் கூட்டமல்ல் உணர்வுடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் செயல்பாட்டுக்கான நோக்கத்துடன் கூடியிருக்கும் சமூகமாக அமைய வேண்டும். அத்தகைய சமூகமாகக் கட்டியெழுப்பும் நோக்கில்தான் குருத்துவம் மற்றும் குருக்கள் பற்றியப் புரிதல்கள் அமைய வேண்டும்.
3.6. கூட்டுச்செயல்பாட்டுக்கான அழைப்பு
புனிதமிக்க வாழ்வுக்கு அழைக்கப்படும் கிறித்தவர்கள் புனிதமான சமூகத்தைக் கட்டியெழுப்ப அழைக்கப்படுகிறார்கள். புனிதமான சமூகமென்பது நீதியும் அன்பும் நிறைந்த சமூகமே. நீதிக்கானப் போராட்டத்தில் ஈடுபடாமல் தன்னை மட்டுமே புனிதப்படுத்த ஆயுள் முழுவதும் நோன்பிருந்தாலும் கிறித்தவர்கள் தங்கள் உண்மை அடையாளத்தை இழந்தவர்களாகவே இறந்து போவார்கள். எனெனில், கிறித்தவ அடையாளம் என்பது சமூக நீதிக்கான போராட்டத்தில் இயேசுவைப் போல் முழுமையாக ஈடுபடுவதாகும். சாமுவேல் ராயன் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஆற்றலூட்டப்படுவதில் ஆவியானவரின் தடங்களைக் காண்பதாக வலியுறுத்துகிறார். அடிமைத்தளையில் நொந்துக் கிடப்பவரின் சார்பாக களமிறங்குவதே உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு. நற்கருணை மீதான விவாதங்களையும் விளக்கங்களையும் மட்டுமே தருவதற்காக கூடுவதல்ல கிறிஸ்தவ ஒன்றிப்பு.
சமூக விடுதலைக்கான இயேசுவின் அழைப்பு எல்லோருக்கும் பொதுவானது. தான் மட்டுமே தனியாக நின்று தனது விடுதலைக் கனவுகளை செயலாக்கம் செய்துவிடலாம் என்று இயேசு எண்ணியதில்லை. ஆகவேதான், வாழ்வில் ஆழமானத் தேடல்களைக் கொண்டிருந்தவர்களை சீடர்களாகத் தேர்ந்து கொண்டு அவர்களையும் தனது பணியில் முககியமான அங்கத்தினராக்கினார். அவர்களை வெறும் பணியாளர்கள் என்று கருதாமல் நண்பர்கள் என்றழைத்தார். ஒவ்வொருவருடைய சமூகப் பொறுப்பையும் உறுதிபடுத்தும் விதமாக சமூகத்தின் பல்வேறுபட்ட நிலைகளில் இருந்தவர்களையெல்லாம் அழைத்தார். சமூக விடுதலைக்காக தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கான இந்த அழைப்பு கிறித்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. நீதியும் அன்பும் நிறைந்த உலகுக்கானக் கனவோடு தங்கள் ஆழமான நிலைப்பாடுகளை செயலாக்கம் செய்யத் துடிக்கும் ஒவ்வொருவருக்குமான அழைப்பும் பொறுப்புமாகும். மனிதநேயம் கொண்ட எல்லா மாந்தரும் சேர்ந்து ஈடுபடும் கூட்டுக் கெயல்பாடே சமூக விடுதலைக்கான நமது செயல்பாட்டின் இயல்பு. நீதியான வாழ்வை முன்னிறுத்தும் எல்லா சமயங்களும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய விடுதலைப் பயணமாகும்.
பொதுவுடைமை, பகிர்வு என்னும் அடிப்படை சித்தாந்ததைக் கொண்ட சோசியலிசம், மார்க்சியம் போன்றவையும் கிறித்தவமும் ஒன்றுக்கொன்று சமூக நீதி என்னும் தளத்தில் சந்தித்தே ஆக வேண்டிய நிலையிலுள்ளன. சிந்தனை, செயல்பாடு, நிறுவனத் தளங்களில் ஏற்கெனவே அவை ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சமூக அக்கறையில் தவறிய கிறித்தவத்திற்கு மார்க்சியத்தின் சமூக அக்கறை ஒரு அழைப்பாகும். இது போன்றே மார்க்சியம் தவறும் போது கிறித்தவமும் பல கோணங்களில் அழைப்பு விடுக்கிறது. கடப்புநிலை விழுமியங்கள் மனித வாழ்வுக்கு மிக அவசியம் என்பதை மார்க்சியம் கிறித்தவத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
சமூக ஈடுபாடு என்பது எளிதான ஒன்றல்ல. ஏனெனில் இது வெறுமனே சில செயல்பாடுகள் அல்ல மாறாக நமது ஆளுமையாக மாற வேண்டியிருக்கிறது. அதிகமான இழப்புகளை சந்திக்க நேரிடும், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும், உறவுகளை இழக்க நேரிடும், உயிரையே இழக்க நேரிடும். இத்தகைய இழப்புகளை எல்லா எல்லைகளையும் தாண்டி இறுதிவரை நிலைத்து நின்று சந்திக்க இயேசுவைப் போன்று சமூகக் கரிசனையும் கடவுளின் அருள் வரலாற்றில் இயேசுவின் வாழ்வில் உச்சத்தைக் கண்டது என்ற நமது நம்பிக்கை உண்மையானால் நாமும் பிறருக்கு நிறைவாழவுக் கொடுப்பதில் நம்மையே தாராளமாக ஈடுபடுத்த வேண்டும்.
4. எனது தெளிவுகளும் நடைமுறை வாழ்வுக்கான பரிந்துரைகளும்
கிறித்தவ மரபுச் சிந்தனைகளோடு நாம் மேற்கொண்டுள்ள விவாதம் புண்படுத்துவதற்காக அல்ல பண்படுத்தவே. சாதியம், ஏழ்மை, பதவிமோகம், பெண்ணடிமைத்தனம், சுயநல அரசியல், சமய அடிப்படைவாதம் போன்ற தீய சக்திகளுக்கு நேருக்கு நேர் நின்று பதிலடிக் கொடுக்கத் துணியாமல் கிறித்தவம் தயங்கி மயங்கிக் கிடக்கும் நமது இன்றைய வாழ்வுச் சூழலில்; கிறித்தவ மரபுச் சிந்தனைகளை குறுக்கு விசாரணைச் செய்யும் விவாதங்கள் மிகமிக அவசியம் என்பது என் நிலைப்பாடு.
தனிமை, வெறுமை, வேலையின்மை, ஊடகங்கள், உறவுச் சரிவு, இழப்புகள் இவற்றால் நிலைகுலைக்கப்பட்டு, அமைதியும் அர்த்தமும் தேடி யோகா, தியானம் போன்ற முயற்சிகளில் மக்கள் மும்முரமாக ஈடுபடுகின்றனர். நற்கருணைக் கொண்டாட்டங்கள் ஒரு தகுந்த தியானச் சூழலை மக்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதை இது உணர்த்துகிறது.

நற்கருணைக் கொண்டாட்டங்கள் இளைஞர்களுக்கு எத்தகைய அர்த்தங்களை கொடுத்து அவர்களை சமூக மாற்றத்திற்கானக் கருவிகளாக மாற்றியிருக்கின்றன என்பது மிகப்பெரியக் கேள்வியே. நற்கருணைக் கொண்டாட்டங்கள் இளைஞர்களின் சமூக அக்கறையை அவ்வளவாக சீண்டுவதில்லை, தியாகப் பணிகளுக்கு அவர்களை அவ்வளவாகத் தூண்டுவதில்லை.
நற்கருணைக் கொண்டாட்டங்கள் பல நேரங்களில் மக்களின் அன்றாட வாழ்வுக் குமுறல்களை மறந்தும் சாதாரண மக்களின் பண்பாடுகளை துறந்தும் கொண்டாடப்படுகின்ற உயிரற்ற சடங்காக ஆகிவிடுவது கவலைக்குரியது. பணி. எஸ். தேவராஜ் அவர்கள் இதையே பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'இன்று பெரும்பாலும் நற்கருணைக் கொண்டாட்டம் வாழ்வோடு தொடர்பற்ற வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது.'ஜ47ஸ இதனடிப்படையில், சாதாரண மக்களின் பண்பாடு, மொழி, பழக்கவழக்கம் ஆகியவற்றை வேண்டுமென்றே ஓரங்கட்டும் நிலை ஆழமாக விமர்சிக்கப்பட வேண்டும். 'சமஸ்கிருதம் மட்டுமே தேவ பாஷை, மற்றதெல்லாம் நீச பாஷை' என்ற பார்ப்பன ஆதிக்க குணம் கிறித்தவத்திலும் பிரதிபலிப்பதை நாம் விமர்சனம் செய்ய வேண்டும். இலத்தீன் மொழி நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு திரும்பிச் செல்வோம் என்ற இலத்தீன் மோகத்திற்கு தக்க பதில் கொடுக்க நாம் முன்வர வேண்டும். அழகு தமிழில் தமிழ் மக்களின் இதயங்களை சமூக விடுதலைக்காய் தூண்டி எழுப்பும் வகையில் இயேசுவின் தியாகப் பலியினைக் கொண்டாடுவோம். சில இடங்களில், ஆயர்கள், குருக்கள் இவர்களுக்கான இறுதிச் சடங்கு செபங்களை பக்திப் பரவசம் பொங்க இலத்தீன் மொழியில் ஓதுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை மறுந்து நிற்கும் வழிபாடு அந்த சமூகத்தின் எதார்த்தங்களையும் அடியோடு மறக்கிறது. ஆசிய மக்களின் அடிப்படை உணவு அல்லாத அப்பமும் இரசமும் அவ்வளவாக அர்த்தம் தருவதில்லை. இரசம் எதிர்மறையான உணர்வைக் கூட ஒருவகையில் ஆசிய மக்களுக்குக் கொடுத்து விடுகிறது. தங்களது கலாச்சாரத்தோடு முரண்பட்டு நிற்கும் நற்கருணை நடைமுறைகள் எந்த அளவுக்கு ஆசிய மக்களிடம் விடுதலை உணர்வைக் கொடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறி.

நற்கருணையில் காணப்படும் பல்வேறு கூறுகளில் 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்ற தியாக செயல்பாட்டுக்கான இயேசுவின் அழைப்பு இன்றியமையாதது. முழுமனித விடுதலைக்கானப் பணியில் நாம் ஒவ்வொருவரும் இணைய வேண்டும் என இயேசு விடுக்கும் இந்த அழைப்பே நற்கருணையின் மற்றெல்லாக் கூறுகளையும் விட இன்றியமையாததாக நான் உணர்கிறேன். நற்கருணையைப் பொறுத்தமட்டில் பலி, இயேசுவின் பிரசன்னம் ஆகிய இருக் கூறுகளை மட்டுமே முன்னிறுத்திய கிறித்தவ மரபுச் சிந்தனைகளுக்கு நமது விடுதலைச் சிந்தனைகள் சவால் விடுக்க வேண்டும். இந்த சவால் காலத்தின் கட்டாயம், விடுதலைக்கான புதிய அத்தியாயம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. பணி. வாலண்டின் ஜோசப் அவர்கள் நற்கருணைக் கொண்டாட்டத்தில் காணப்படும் பல்வேறு கூறுகளில் வாழ்வை உருமாற்றுகின்ற தோழமைக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 'சமுதாயத்தின் கடைநிலையில் உள்ள மனிதர்களோடு தோழமை கொள்வதுதான் நற்கருணைக் காட்டுகின்ற முதல் பாடம்' என்று அவர் கூறுகிறார். 'வாழ்வு மறுக்கப்பட்டோருக்கு வாழ்வு கொடுக்கும் பணியில் ஈடுபடுவதே உண்மையான வாழ்வாக்கப்பட்ட நற்கருணை பலி' என்று பணி. எரோணிமுசு குறிப்பிடுகிறார். விடுதலைச் செயல்பாடுகளை முன்னிறுத்தாத எந்தவொரு நற்கருணைக் கொண்டாட்டமும் மிகப்பெரிய முரண்பாடே.
திருச்சபை வரலாற்றில் பல நேரங்களில் நற்கருணைக் கொண்டாட்டங்கள் வியாபாரமயமாகிப் போனதை நாம் காண்கிறோம். கிறித்தவம் அரச மதமாக மாறிப்போன காலத்திலிருந்து இறையருளை காசுக்கு விற்ற நிலைமை திருச்சபையின் நடைமுறையிலிருந்ததை திருச்சபை வரலாறு நமக்கு கூறுகிறது. இந்த அநீத நிலையினை நியாயமான முறையில் எதிர்த்து முழக்கமிட்ட மார்ட்டின் லூதர் போன்ற மறுமலர்ச்சியாளர்கள் திருச்சபையிலிருந்து தூக்கி வீசப்பட்ட உண்மையையும் நாம் அறிவோம். இன்றும், நற்கருணை கொண்டாட்டங்கள் வியாபாரமாக்கப்படும் நிலையினை நாம் காண்கிறோம். எதற்கெடுத்தாலும் காணிக்கை, நன்கொடை, அன்பளிப்பு எனப் பல்லிளிக்கும் 'உண்டியல் கிறித்தவம்' ஒருவகையில் பிறருக்காகத் தன்னையேக் கையளிக்கும் ஒரு அன்பு பலியைக் களங்கப்படுத்துகிறது. கவர்ச்சி வார்த்தைகளைச் சொல்லி வசூலிக்கப்படும் காணிக்கைகள் தகுதியானவர்களை சென்று சேர்கிறதா என்பதில் பலருக்கும் மிகுதியான சந்தேகம் உண்டு. மக்களின் பக்தியை காசாக்கும் கயமையை இயேசு அடித்து விரட்டியது என் மனக்கண்முன் தெரிகிறது. 'நற்கருணைக் கொண்டாட்டங்களில் கொடு;க்கப்படும் காணிக்கை அருள்பணியாளருக்குரிய காணிக்கையாக திசைமாறி விட்டது' என பணி.எஸ். தேவராஜ் குறிப்பிடுகிறார். இத்தயை அநீத நிலையினை, இயேசு கொண்டிருந்த அதே மனநிலையோடு நாம் சாட வேண்டும். வியாபாரமாக்குபவர்களை துரத்தியடிக்க வேண்டும்.
நிறைய காணிக்கைப் போடாத மக்களை திட்டித் தீர்க்கும் காணிக்கை ராசாக்களை நாம் காண்கிறோம். இத்தகைய மக்கள் இருக்கும் கிளைப்பங்குகளுக்கு அருட்பணியாளர்கள் பல மாதங்களாக திருப்பலி நிறைவேற்றச் செல்லாத கசப்பான உண்மையை நாம் அறிவோம். பணக்கார குடும்பங்களைச் சார்ந்தவர்களின் திருமணம் மற்றும் இறப்புத் திருப்பலிக்கு எண்ணற்ற அருட்பணியாளர்கள் போய் குவிந்து கிடக்கும் அவலநிலையை நாம் காண்கிறோம். 'வண்டிக்கு பெட்ரோல் போடக் கூட காசு தரமுடியாத உங்களுக்கெல்லாம் திருப்பலி ஒரு கேடா?' என தாறுமாறாக கேள்வி கேட்கும் சில அருட்பணியாளர்களை நாம் சந்தித்திருக்கிறோம்.
குருக்களின் தனிநடிப்புக்கானத் தளமாக நற்கருணைக் கொண்டாட்டங்கள் காலப்போக்கில் மாறிப்போனது வரமல்ல சாபமே. மக்களுக்கும் குருக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை வழிபாட்டிலும், மிகப்பெரிய முரண்பாட்டை வாழ்க்கையிலும் நம்மால் இன்று பரவலாக காண முடிகிறது. நற்கருணைக் கொண்டாட்டத்தில் குருக்களே அதிமுக்கியமான அங்கமாகக் கருதப்பட்டதை (நஒ ழிநசய ழிநசயவழ) மரபு கிறித்தவத்தில் நாம் அழுத்தமாக காண்கிறோம். மார்ட்டின் லூத்தர் நற்கருணையை குருக்களின் அதிகாரச் செயல்பாடாகப் பார்த்துஜ53ஸ அதனை கடுமையாக எதிர்த்ததில் நியாயம் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் தங்களது அருமையான வாழ்வு அனுபவங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தளமாக நற்கருணை வழிபாடுகள் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக, திருமணத் திருப்பலியின்;போது பல ஆண்டுகளாக திருமண வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளில் யாரையாவது அழைத்து அவர்களுடைய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம்.
குருக்களின் வாழ்வுக்கும் அவர்கள் நடத்தும் நற்கருணை வழிபாடுகளுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்க வேண்டும். தனது சுயநலத்திற்காக மக்களை பகடைக் காயாக்கும் குருக்கள் நடத்தும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் 'பிறரது வாழ்வுக்காகத் தன்னையே இழத்தல்' என்ற நற்கருணையின் அடிப்படை ஏக்கம் அடியோடு மாண்டுப் போகிறது. பணம், பதவி, சாதி, குடிவெறி, காமவெறி, ஆணவம் என்று எல்லா வகையான தீயப் பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கும் குருக்கள், நற்கருணைக் கொண்டாட்டங்கள் மூலம் எத்தகைய விடுதலைக்கான அழைப்பை இதுவரைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை. 'பல இடங்களில் அருள்பணியாளர்கள் இன்றும் ஒரு கிறித்தவ பார்ப்பன உயர்குலத்தினர் போல் அல்லது சமயப் பண்ணையார் பாணியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வழிபாட்டில் 'குருகுலமே வருக' என இறைமக்கள் சமூகத்திலிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கும் இன்னொரு குலமாகத்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்' என தே. அல்போன்சு அவர்கள் கூறுவதில் இந்த உண்மை தெளிவாகக் காணக்கிடக்கிறது. தாறுமாறாக வாழும் குருக்கள், வழிபாடுகளில் மட்டும் இனம்புரியாத பரவசத்தைக் கொண்டிருப்பதில் எந்தவொரு அரத்தமும் கிடையாது என்பதை பொதுநிலையினர் அதிகமாகவே உணரத் தொடங்கி விட்டனர்.
மக்களின் உழைப்பையும் உரிமையையும் சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்க சக்திகளை தாராள வள்ளல்களாகக் காட்டுகின்ற நற்கருணைக் கொண்டாட்டங்கள் அத்தகையோரின் அடாவடித்தனத்திற்கு வளைந்து நெளிந்து கொடுக்கிறது. வேலைக்கேற்றக் கூலியினைக் கொடுக்காமல், வட்டி என்ற பெயரில் ஏழைகளின் மாண்பை மட்டந்தட்டும் பலரை ஞாயிறுதோறும் நன்கொடைக் கொடுத்தவர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்து, மேன்மக்களாகக் காட்டும் தவறைச் செய்கிறது இன்றைய நற்கருணைக் கொண்டாட்டங்கள். பிறரது வாழ்வைச் சுரண்டி இன்புறும் சாவின் சக்திகளின் மனதை உறுத்தாத எந்தவொரு நற்கருணைக் கொண்டாட்டமும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு அடிமைப்படுத்தும் நிகழ்வே. சாவின் சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் இயேசு நிச்சமாக இல்லை. ஏனெனில், பணி. தே.அல்போன்சு அவர்கள் சொல்வது போல 'நற்கருணையில் நம்முடன் இருக்கும் இயேசு சாவின் சக்திகளை வென்று உயிர்த்த விடுதலை வீரர்.'
சாதிக்கொரு கோயில் கட்டி நிம்மதியாய்க் கொண்டாடப்படும் நற்கருணைக் கொண்டாட்டங்கள் உறவின் அடையாளமல்ல. மாறாக பிளவுகளின், வன்முறையின் பிறப்பிடம். நற்கருணைக் கொண்டாட்டங்கள் சமூகத்தில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை ஏனென்றுக் கேட்காமல் பிளவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் நற்கருணைக் கொண்டாட்டங்கள் ஒருவகையில் துணைபோகின்றன. பிரிவினைகளை கண்டு கொள்ளாமலும் மூடிமறைத்தும் கொண்டாடப்படும் நற்கருணை கொண்டாட்டங்கள் ஒருவகையில் பாவச் செயல்களே. உறவின் விருந்து, சகோதரத்துவ சமபந்தி, ஒன்றிப்பின் உடன்படிக்கை, தோழமையின் ஊற்று என என்னதான் அழகழகாகப் பெயரிட்டு அழைத்தாலும்; சாதி என்னும் பிரிவினை அழுக்கு பல இடங்களில் நற்கருணையைத் தொடர்ந்துக் கறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நமது இந்தியத் திருச்சபையில் 65 சதவீதத்திற்கு மேல் இருப்பவர்கள் தலித் கிறித்தவர்கள். ஆனால் திருச்சபையின் அதிகாரம் பல்வேறு தளங்களில் உயர்த்திக்கொண்ட சாதியைச் சார்ந்த கிறித்தவரிடமே இதுவரையில் பெருமளவில் முடங்கிக் கிடக்கிறது. ஆகவே, உயர்த்திக் கொண்ட சாதியைச் சார்ந்த ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர் இதுவரையில் தாங்கள் வைத்திருந்த அதிகாரத்தால் சாதி ஒழிப்பு செயல்பாட்டை முறையாக முன்னெடுக்கத் தவறிய காரணத்திற்காக வருந்தி, கத்தோலிக்கத் திருச்சபையின் மிகப் பெரும்பான்மையானவர்களான தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களின்; பிரநிதிகளோடு தாராளமாக பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், சாதியத்திற்கு எதிரான கிறித்தவரின் போராட்டம் ஒட்டுமொத்தக் கிறித்தவ சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும். ஆங்காங்கே ஒலிக்கும் ஒருசிலக் குரல்கள் நிச்சயமாகப் போதாது. சாதியம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. மாறாக பார்ப்பனர்களின் சுயநலமேக் காரணம் என்ற தெளிவை கிறித்தவ மாணவ மாணவியருக்கு சிறுவயதிலேயே நன்றாகத் தெளிவுபடுத்த வேண்டும். தலித் கிறித்தவரி;ன் போராட்டத்தை காலத்தின் மிகப்பெரிய அறிகுறியாகக் கருதி அதற்கு ஏற்றவாறு இறையியலையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மறைமாவட்டத்திலும் பங்கிலும் சாதி ஒழிப்பு இயக்கத்தை உருவாக்கி அதை வெறும் பக்த சபையாக்கி விடாமல் பல தளங்களில் சாதி மறுப்புக்கான தொடர் பயிற்சிகளை மும்முரமாக நடத்த வேண்டும். எல்லா பங்குகளிலும் அன்றாடத் திருப்பலிக்குப் பின் சாதியில்லா சமத்துவ சமுதாயத்திற்கான சிறப்பு செபத்தை மக்களே தயாரித்து சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் பழிவாங்கும் நோக்கத்துடன் அல்லாமல், தங்களது உரிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சாதி ஒழிப்பு முயற்சிகளில் பெரும்பான்மையாக களமிறங்க வேண்டும். தாழ்த்தப்பட்டக் கிறித்தவ மாணவ மாணவியருக்குத் தரமானக் கல்வியை உறுதி செய்து அந்தந்தப் பகுதிகளில் முன்னிலை வகிக்கும் கிறித்தவ கல்வி நிறுவனங்களில் கட்டாய முன்னுரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நற்கருணை ஆண்டு, இறைவார்த்தை ஆண்டு, பவுல் ஆண்டு எனக் கொண்டாடும் திருச்சபை சாதி ஒழிப்பு ஆண்டை தகுந்தத் திட்டங்களோடு அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டக் கிறித்தவருக்கும், தாழ்த்தப்பட்ட இந்துக்களைப் போலவே சமமான ஒதுக்கீட்டையும் உரிமையையும் உரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்க வேண்டும். தேர்தல் சமயங்களில் நமது கோரிக்கைகளில் முதன்மையானதாக இதை வைக்க வேண்டும்.

நற்கருணைக் கொண்டாட்டங்கள் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டுக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். அத்தகையச் செயல்பாட்டுக்குத் தூண்டும் வகையில் நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஆழமான மாற்றங்களை அதிகமாக ஏற்படுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான நற்கருணைக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்தப் பிறகும் எந்தவித உப்புச்சப்புமின்றி சுயநலத்துடன் சிந்தித்து செயல்படும் கிறித்தவர்களை நாம் காண்கிறோம். இவர்கள் சமூக மாற்றத்திற்கான மிகப்பெரிய தடைக்கற்கள். விடுதலை வேள்வியை தூண்டி எழுப்பும் ஆமோஸ், மீக்கா, யோவேல் போன்ற இறைவாக்கினர் நூல்களை மறைக்கல்வியிலும், மறையுரைகளிலும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் தினம், வறுமை ஒழைப்பு தினம், பெண்கள் தினம், மனித உரிமைகள் தினம் போன்ற நாட்களின் வழிபாடுகளை நன்றாக திட்டமிட்டு விழிப்புணர்வு பேரணியை பங்குகளில் நடத்த வேண்டும். சமூகத்தின் அன்றாடப் பிரச்சனைகளைக் குறித்த கைப்பிரதிகளை வழிபாடு முடிந்து செல்லும்போது கொடுக்க வேண்டும். குடும்பங்களில் அவற்றைப் பற்றி விவாதிக்க அழைப்பு விடுக்க வேண்டும். புனித வாரங்களில் நோயாளிகளை சந்தித்தல், முதியவர்களை சந்தித்தல், குடும்பங்களுக்கிடையே உறவினை புதுப்பித்தல் போன்றவற்றை பல்வேறு பங்கிலுள்ள குழுக்கள் வழியாக செய்ய வேண்டும்.
பல கிறித்தவ இளைஞர்களிடமும், பெரியோர்களிடமும், ஏன் நம்மில் பலரிடமும் 'நற்கருணைக் கொண்டாட்டங்கள் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் துரப்பிடித்த இயந்திரம் போல் ஆகிவிட்டது' என்ற உணர்வு பல நேரங்களில் மேலோங்கி நிற்பதைக் காண முடிகிறது. இதனுடைய மிகப்பெரிய வெளிப்பாடாகத்தான் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வெறுத்துப்போய் பிற கிறித்தவ சபைகளுக்கு அங்குமிங்குமாகத் தாவி விளையாடும் வேடிக்கையை ஒவ்வாரு பங்குகளிலும் நாம் பெருமளவில் காண முடிகிறது.

