Tuesday, September 13, 2011

கடல் என்னும் கழிவறை (Sea - Damned to be Dumped)


              இயற்கையின் எழிலில் கடல் ஓர் மிகப்பெரிய அதிசயம். கடவுள் உருவாக்கிய உயிர்ச் சூழல் மண்டலத்தில் சமுத்திரம் ஓர் அற்புத சரித்திரம். கோடிக்கணக்கான உயிரினங்களின் தாய்மடி இந்தக் கடல். இலட்சக்கணக்கான மனிதர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த சமுத்திரம். விலைமதிப்பில்லாத பவளமும் முத்தும் கொட்டிக் கிடக்கும் அமுத சுரபி இந்த ஆழி.

             அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்வது? வேறுவழியில்லை... கடலுக்குள் செலுத்துவோம். சரி.. சாயத்தொழிற்சாலைக் கழிவுகளை என்ன செய்வது? இதில் என்ன யோசனை? கடலுக்குள் செலுத்துவதே சரியானது. பிளாஸ்டிக், கணணி, கண்ணாடிக் குப்பைகளை எங்கேக் கொட்டுவது? அதுதான் கடல் இருக்கிறதே அங்கே கொட்டுவோம். ஆம். பல பண முதலைகளும், மெத்தப் படித்த மேதாவிகளும், அதிகாரத்தில் இருக்கின்ற பெரிய மனிதர்களும் இப்படித்தான் யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

               எல்லா வகையான நச்சுக் கழிவுகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாகக் கடலை நாம் மாற்றி விட்டோம். போதாதக் குறைக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் நாட்டுக்; கழிவுகளையும் கப்பலில் ஏற்றி நமது நாட்டுக் கடலில் கொண்டுவந்து தட்ட அரசும் மறைமுகமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில,; எல்லோரும் சேர்ந்து கடலை ஓர் கழிப்பறையாக ஆக்கிவிட்டோம்.

              எதையும் அளவுக்கு மிஞ்சி செய்வதில் நாம் கெட்டிக்காரர்கள். சாப்பிட்டாலும் வயிறு முட்ட சாப்பிட வேண்டும் குடித்தாலும் இடுப்பு வேட்டி கீழே விழுந்ததுகூட நினைவில்லாத அளவுக்குக் குடிக்க வேண்டும். சுரண்டினாலும் ஒரே அடியாய் சுரண்டிவிட வேண்டும். இதே மனநிலையோடுதான் கடலையும் நாம் நாசப்படுத்திக் கொண்டிக்கிறோம். உப்பு நீர்;தானே என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டோம்.

           கழிவுகளை மதிநுட்பத்தோடும் அறிவியல் நுட்பத்தோடும் கையாளும் கலை நம்மிடம் இன்னும் வரவில்லை. மனதிற்குப் பட்டதுபோல் எங்காவது ஒரு பக்கம் கழிவுகளை திசைதிருப்பி விட்டுவிட்டு அபாயகரமான நிலையை எட்டிய பின்னரே ஏதாவது மாற்றி யோசிக்க முனைகிறது நமது அரசு. ஏற்கெனவே, பல ஆறுகளில் கழிவுகளை கலக்கவிட்டு விளைநிலைங்களை பாழாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டோம். எடுத்துக்காட்டாக, நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு நாளும் 8 கோடி லிட்டர் சாயக் கழிவுநீர் கலக்கின்றன. இதன் விளைவாக, நொய்யல் ஆறு நோய் வந்ததுபோல் காட்சியளிக்கிறது. நொய்யல் ஆற்றில் மட்டும் இத்தனைக் கோடி லிட்டல் கழிவுநீர் கலக்கிறது என்றால் கடலில் ஒவ்வொரு நாளும் கலக்கும் கழிவுநீர் எத்தனைக் கோடிக் கோடியோ   புரியவில்லை. இந்த நச்சுக் கழிவுகளின் விலையாக எத்தனை சுனாமிகளை இன்னும் நமக்கு தருவதற்கு சமுத்திரத்தாய் காத்திருக்கிறாளோ தெரியவில்லை.

நீங்க என்ன நினைக்கிறீங்க

 கடலில் உள்ள வளங்கள் யாவை?
 கழிவுகளை கடலில் செலுத்துவதுதான் ஒரே வழியா? வேறென்ன செய்யலாம்?
 கடல் பேரழிவினைத் தந்தால் யார்தான் பொறுப்பேற்க வேண்டும்?

No comments:

Post a Comment