
அழகழகான கல்லறைகளை நாம் பார்த்திருப்போம். நன்றாக வர்ணம் பூசி பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்டக் கல்லறைகள் இன்று அதிகம். ஆனால், என்னதான் அழகுபடுத்தினாலும் உள்ளே இருப்பது செல்லரித்;துப்போன எலும்புகள்தான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. உள்ளே தோண்டிப் பார்த்தால் அருவருப்பும் துர்நாற்றமுமே மிஞ்சும் என்பதே உண்மை. இறந்தவர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்தக் கல்லறைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மனநிலையை சுட்டிக் காட்டுகிறது. வெளிப்புறத்தை அழகுபடுத்தி உள்ளத்தை செல்லரித்துப் போகச்செய்யும் நமது போக்கைக் கல்லறைகள் நினைவுபடுத்துகின்றன.
ஒரு நாளைக்கு இரண்டு தடவைக் குளிக்கலைன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்கும்... ஹலோ... நாகர்கோவில் எப்.எம் தானே இது... ஒரு அழகுக்குறிப்புச் சொல்லவா? யேய் கலா... இந்த கலர்தான் உனக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும் என்று பல கோணங்களில் பேசி நமது உடல் அழகை மெருகுபடுத்த முயற்சி செய்கிறோம்.

உடலை அழகுபடுத்த நாம் செலவழிக்கும் நேரம், பணம் இவற்றில் ஒரு பங்கு அக்கறையாவது நமது உள்ளத்தைத் தூய்மைப்படுத்த நாம் காட்டுவதில்லை. உள்ளத்தில் குவிந்து கிடக்கும் அசுத்தங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. உள்ளத்தை சலவை செய்ய நமக்கு நேரம் இருப்பதில்லை. வஞ்சகம், பொறாமை, ஆணவம், கோபம், சுயநலம், போட்டி, ஏமாற்றுதல், ஜாடைப் பேச்சுக்கள், தகாத பாலியல் எண்ணங்கள், களவு, கொலை, என எத்தனையோ சாக்கடைகள் நமது உள்ளத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றிலிருந்து எழும்பும் துர்நாற்றத்தை போக்குவதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதைக் காட்டிலும் அதற்கான மனமில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

மாசற்ற மனதினராய் இருப்பதே தலைசிறந்த அறம் என்று வள்ளுவர் உள்ளத் தூய்மையை பின்வருமாறு கொண்டாடுகிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
உடல் அழகை ஆராதனை செய்யும் இக்காலச் சூழலில் உள்ளத்தின் அழகை பலர் பொருட்படுத்துவதில்லை. வெளிப்பறத்தோற்றத்திற்கே மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன. ஆகவேதான், தங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் குடும்பத்தார் மணமகனின் நிறத்தையும், படிப்பையும், பணத்தையும்தான் பார்க்கிறார்களே தவிர குணத்தைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையுடையவரே போற்றுதற்குரியவர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க

உள்ளத்தை எவற்றால் அழகுபடுத்தலாம்?
உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் அழுக்குகளை நாம் மறைப்பதேன்?
உள்ளத்தில் தூய்மையுடையோர் எப்படி செயல்படுவர்?
No comments:
Post a Comment