Wednesday, August 10, 2011

வல்லரசு – சபாஸ் சரியானப் போட்டி (A mad Chase among the nations)

               எப்படியாவது வல்லரசாக வேண்டும் என்று பல நாடுகள் கனவு காண்கின்றன. நாமும் அத்தகைய ஓர் கனவில் நித்தம் கண்விழித்துக் கொண்டிருக்கிறோம். 2020 ல் இந்தியா வல்லரசாவது உறுதி என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செல்லும் இடமெங்கும் பெருமையுடன் பறைசாற்றி வருகிறார்.

                   அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் தான் மட்டுமே உலகின் மிகப்பெரிய வல்லரசாகத் திகழ வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருக்கிறது. எல்லாத் துறைகளையும் தன் வசப்படுத்தி தான் போடுகின்ற ரொட்டித் துண்டகளுக்கு மற்ற நாடுகளெல்லாம் வாலாட்ட வேண்டும் என்பதே அமெரிக்காவின் அதிகப்படியான ஆசை. அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது 'எல்லாத் துறையிலும் நாமே தலைசிறந்தவர்களாக திகழவேண்டும். சர்வதேச அளவில் எந்தத் துறையில் பேட்டியிருந்தாலும் நாமே வெற்றி பெற வேண்டும். இந்தியா, சீனா, போன்ற ஆசிய நாடுகளிடம் நாம் எந்தத் துறையிலும் தோற்றுப் போய்விடக் கூடாது' என்று காரசாரமாகப் பேசினார்.

                  அமெரிக்காவின் இந்த இலட்சிய வெறிக்கு யார் இடையூறாக இருந்தாலும் அமெரிக்கா ஈவிரக்கம் இல்லாமல் வம்பளந்து விடும். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை சின்னாபின்னமாக்கியது போல தனது வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் எவரையும் சிதைத்துவிட அமெரிக்க கொஞ்சமும் அஞ்சப் போவதில்லை. உலகைப் பாதுகாக்கும் காவலன் என்ற வேடம் தரித்து பாடம் புகட்டி விடும்.

                இந்த நிலையில், நமது நாடும் வல்லரசுக் கனவோடு பயணிக்கிறது. அதே வேளையில், அமெரிக்காவுக்கு கொஞ்சமும் வியர்த்துவிடாமல் பணிவோடு விசிறிக் கொண்டிருக்கிறது. எதிலும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு இயங்கவே நமது நாடு ஆசைப்படுகிறது. அமெரிக்கா தலையில் அடித்தாலும் அது செல்லமாகக் கொஞ்சுவதாகவே இந்தியா நினைத்துக் கொள்கிறது. போட்டியென்று வந்துவிட்டால் போட்டுப் பார்த்து விடுவோம் என்பதில் தெளிவாக இருக்கும் அமெரிக்காவுக்கு இந்தியாவின் வளர்ச்சி என்பது பெரும் போட்டியே. இதை ஒபாமாவே மறைமுகமாக தனது உரையிலே வெளிப்படுத்தியிருக்கிறார்.

                 பூனையின் கையைப் பிடித்து நடக்க எலி விரும்பினால் பூனை வேண்டாமென்றா சொல்லும்? என்றாவது ஒருநாள் அந்த எலி பூனைக்கு விருந்தாகப் போவது நிச்சயம். நமது நிலைமையும் அந்த எலியின் நிலைமையாகிப் போய்விடக்கூடாது என்பதில் கவனம் நிச்சயம் தேவை.  நாமே வலிந்துபோய் நட்பு கொண்டாலும் வலியைத்தான் அனுபவிக்கிறோம். நம் நாட்டு அதிகாரிகள் அமெரிக்காவுக்குச் செல்லும்போது பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்படுவதையும் நமது மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதையும் நமது நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

நீங்க என்ன நினைக்கிறீங்க


 வல்லரசுக் கனவு நமக்குத் தேவையா? ஏன்?
 ஒரு நாடு இன்னொரு நாட்டின் வளர்ச்சியை விரும்புவதில்லையே? ஏன்?
 இந்தியா - அமெரிக்கா நட்பால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன?

நேர்மறையே நேரிய மறை (A Positive approach Changes Everything)

                   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரு நபர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஒருவர் தனக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்று தன்னையும் குடும்பத்தையும் கடவுளையும் நினைத்து, புலம்பிக் கொண்டும் சபித்துக் கொண்டும் நோய் கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இறக்க நேரிடுகிறது. இன்னொருவர் அந்த நோயை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கி தன்னம்பிக்கையோடும் கடவுள் நம்பிக்கையோடும் மருத்துவர் குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாட்கள் வாழ்ந்து விடுகிறார். சிலர் அந்த நோயிலிருந்து பூரண சுகமும் பெற்றுவிடுவதை நாம் பார்க்க முடிகிறது. புற்றுநோயைக் கூட ஒருவருடைய நேர்மறை சிந்தனைகளால் வெற்றிக் கொள்ள முடியும் என்பது பலருடைய வாழ்வில் உணரப்பட்ட உண்மை.

                  நம்மில் சிலருடைய எண்ணம், ஏக்கம், கனவு, வார்த்தை, செயல் அத்தனையும் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையாகவே அமைந்து விடுகிறது. வாயைத் திறந்தாலே எரிதழல் போல எதிர்மறைச் சிந்தனைகளை கொப்பளித்து விடுகிறோம். எதிர்மறை யூகங்களை வளர்த்துக் கொண்டு கண்டபடி பேசி காயப்படுத்தி விடுகிறோம். எதிர்மறைச் சிந்தனைகள் நம்மில் அலைமோதுகின்றபோது கவனச் சிதறலும் பதற்றமும் நம்மை சிறைப்பிடித்து விடுகின்றன.

                 எதிர்மறையாக சிந்தித்து செயல்படும்போது வாழ்வில் சில முக்கியமான காரியங்களை நாம் இழக்க நேரிடுகிறது. முதலாவதாக, நமது எதிர்மறைச் சிந்தனைகளால் உடல் நலனை நாம் இழக்கிறோம். பல்வேறு உடல் மன நோய்களுக்கும் காரணம் என்ன தெரியுமா? நமது எதிர்மறையான எண்ணங்கள்தான். நம்மை சபித்து, பிறரை சலித்து, உடலில் எதிர்மறை உஷ்ணம் ஏற்றி, சுவாசத்தில் வேகத்தை ஊற்றி நமது உடல் நலனை நாமே பல நேரங்களில் கெடுத்துக் கொள்கிறோம்.

              அடுத்ததாக, நாம் இழக்கின்ற பெரும் சொத்து நமது நட்பு. எதிர்மறையாகவே சிந்தித்து செயல்படும் எவருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். நேர்மறை அணுகுமுறைகளே நல்ல நண்பர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். நேர்மறையாகப் பார்ப்பவர்களிடமே நட்பு அதிகமாக பூக்கிறது. பரவாயில்லை... அதனாலென்ன... நமக்குள்தானே... சரிசெய்து கொள்ளலாம்... என்று நடந்த தவறையும் கடந்து யோசிப்பவர்களே இதயங்களை வெற்றிக் கொள்கிறார்கள். அது சரியில்லை... எனக்கு மட்டும் ஏன் இப்படி... நீ திட்டமிட்டே அப்படி செய்தாய்... உன்னைப் போய் நம்பினேனே... என்று சிறிய சிறிய காரியங்களிலும் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசுபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவே நாம் விரும்புகிறோம்.

நீங்க என்ன நினைக்கிறீங்க

 நேர்மறையாக சிந்திப்பதால் நாம் இழப்பது என்ன?
 நேர்மறையாக செயல்பட்டு சாதித்த சில மனிதர்களைப் பற்றி சொல்ல முடியுமா?
 எதிர்மறையாக சிந்தித்து செயல்பட்ட கசப்பான அனுபவங்கள் உண்டா?

பாரதத்தின் பெருமை சமய உரிமை (The pride of India)

                நாங்கள் கும்பிடும் தெய்வம்தான் உண்மையான தெய்வம். மற்றவையெல்லாம் வெறும் சிலைகள்... சாத்தான்கள்... என்று கூறுபவர்கள் நமது நாட்டில் அதிகம். இந்த மனநிலையால் உருவாகும் பிரச்சனைகளும் அதிகம். எங்கள் தெய்வத்திற்கு ஈடானது எதுவுமில்லை. நாங்கள் கும்பிடும் கடவுளால் மட்டுமே உலகை மீட்க முடியும். மற்றவையெல்லாம் வெறும் மாயை... பெரும் மயக்கம்... என்ற பேச்செல்லாம் நமது பாரத நாட்டின் பல்சமய சூழலுக்கு சிறிதளவும் ஏற்றதல்ல.
                    ஒரு கோவிலின் உச்சியில் சில புறாக்கள் அமர்ந்திருந்தன. அவை கீழே எட்டிப்பார்த்தபோது மனிதர்கள் ஒருவர் மற்றவரை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டன. புறாக் குஞ்சு தாயிடம் கேட்டது, 'ஏம்மா அந்த மனிதர்கள் அடித்துக் கொள்கிறார்கள்?' தாய் சொன்னது, 'கீழே மதக் கலவரம் நடக்கிறது. கோயிலுக்கு செல்பவர்களும் மசூதிக்குச் செல்பவர்களும் இப்படி அடிக்கடி அடித்துக் கொள்வார்கள்.' புறாக் குஞ்சு வியப்போடு, 'அம்மா நாம் இதற்கு முன்னால் ஒரு மசூதியின் மீதிருந்தோம். இப்போது கோவிலின்; மீது அமர்ந்திருக்கிறோம். நாளை வேண்டுமானால் ஒரு கிறித்தவ ஆலயத்தின் மீது போய் அமருவோம். இதெல்லாம் ஒரு பிரச்சனையாக நமக்குத் தெரிவதில்லையே?' அதற்கு தாய் புறா, 'அதனால்தான் நாம் மேலே உயர்ந்து இருக்கிறோம். மனிதர்கள் இன்னமும் மட்டமாக தரைமட்டத்தில் கிடக்கிறார்கள்' என்றது.

                         நாம் கும்பிடும் தெய்வமே உண்மைக் கடவுளாகவும், மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகவும் இருக்கட்டும்! அந்த உண்மை தெய்;வத்திடம் வேண்டி பிற சமயத்தவரையும் வாழ வைப்போம். நமது தெய்வ நம்பிக்கையால் பிற சமயத்தவருக்கும் நன்மை விளைந்தால் நல்லதுதானே? அதை விட்டுவிட்டு தனது கடவுளையும் சமயத்தையும் பற்றி ஆணவத் தம்பட்டம் அடிப்பதில் பலனில்லை.

            ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றால் அவரது கருத்துக்களை, உணர்வுகளை, சமய நம்பி;க்கையை, வழிபாட்டு முறையை நாம் மதிக்கிறோம் என்றே அர்த்தம். நம்முடைய சமய நம்பிக்கையையும் நாம் வழிபடும் கடவுளையும் அவமதிப்பதை நம்மில் யார்தான் அனுமதிப்போம்? நாம் போட்டிருக்கும் சட்டையை ஒருவர் குறை கூறிவிட்டாலே நமக்கு கோபம் வந்துவிடும். நாம் வழிபடும் கடவுளையும், நமது வழிபாட்டுத் தலங்களையும் யாராவது இழிவுபடுத்தினால் விட்டுவோமா? பழிக்கப் பழி என்று கலவரங்கள் வெடித்து பல உயிர்களை பலிவாங்கிவிடுவோம் அல்லவா?

                இதையெல்லாம் நன்கு உணர்ந்ததால்தான் நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த சான்றோர்கள் இந்தியர் ஒவ்வொருவரும் தாம் விரும்பும் கடவுளை வழிபடவும், விரும்பிய முறையில் வழிபாடு நடத்தவும் சமய உரிமை உண்டு என்ற அற்புதமான உரிமையை உறுதிபடுத்தினார்கள்.

நீங்க என்ன நினைக்கிறீங்க

 பிற சமயத்தவர் வழிபடும் தெய்வம் உண்மையில்லையா? ஏன்?
 பல்சமய சூழலை நாம் பாதுகாக்க வேண்டுமா?
 பிறரது சமய சுதந்திரத்தை அவமதிப்பதால் எற்படும் விளைவுகள் என்னென்ன?

Sunday, August 7, 2011

சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Equals as per Law)

                      தாலுகா அலுவலகத்தில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது... 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை... என்று அந்த நபர்களின் புகைப்படத்தோடு நாளிதழ்களில் செய்திகள் வெளிவருவதை வாசித்திருப்பீர்கள். ஆயிரத்திற்கும் ஐநூறுக்கும் உடனே பாய்ந்து சென்று அடக்கும் சட்டம், கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கையாடல் செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறது. ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இருவர் திருடி மாட்டிக்கொண்டால், கொஞ்சம் திருடியவனை பெரிய திருடன் என்றும் நிறைய திருடியவனை நிரபராதி என்றும் சட்டம் சொன்னால் அது எப்படி நியாயமாகும்? ஆனால் சட்டம் பலவேளைகளில் அப்படித்தான் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
                   பணபலம், அரசியல் பலம், ஆள்பலம், சாதிபலம் உள்ளவர்கள் தவறு செய்யும் போது சட்டம் தனது வாலை சுருட்டிக் கொள்கிறது. அப்பாவி மக்கள் சிறிய தவறு செய்தால் கூட முட்டிக்கு முட்டித் தட்டுகிறது. அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்களைப் பொறுத்தமட்டில் சட்டம் ஒரு செல்ல நாய் மாதிரி. அவர்கள் போடுவதை சாப்பிட்டுவிட்டு செல்லமாய் வாலாட்டிக் கொண்டு தூங்கிப்போய்விடுகிறது.

                            
     மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் 1,76,000 கோடி ஊழல் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆ...ஐயோ...ராசா... இவ்வளவு பெரிய ஊழலா என்று மக்கள் பதறிப்போன நேரம் ஆ.ராசா வழக்கம்போல பளபளப்பான வெள்ளை வேட்டிச் சட்டையோடு கம்பீரமாக சுற்றித்திரிந்தார். நமது சட்டங்களெல்லாம் கைகட்டி நின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தன. அவர் குற்றவாளிதான் என்று சொல்ல அச்சப்பட்டன. காரணம் என்னவென்றால், ஆட்சியும், பணபலமும், ஆள்பலமும் ஆ.ராசாவுக்கு அதிகமாகவே இருந்தன.
               
              திருடனாக இருந்தாலும் பெரிய திருடனாக இரு. சட்டம் உனக்குப் பாதுகாப்புக் கொடுக்கும். பணம் இருந்தால் எவரை வேண்டுமானாலும் கொலை செய். சட்டம் உன்னை நிரபராதி என தீர்ப்பளிக்கும். பதவி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய். சட்டம் உனக்கு உதவி செய்யும். பதவி இல்லையா? பணம் இல்லையா? ஆள்பலம் இல்லையா? எதற்கும் கவனமாயிரு. நீ செய்யாத குற்றத்திற்கும் சட்டம் உன்னை சிறைவைக்கலாம்.
                        காசு உள்ளவன் குற்றம் செய்யலாம். ஏனென்றால் அவன் சட்டத்தின் செல்லப்பிள்ளை...செல்வப்பிள்ளை. ஆனால், காசில்லாதவரை சட்டம் தனது காலில் போட்டு மிதித்;துவிடும். இந்தச் சூழலில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் வெறும் வேடிக்கைப் பேச்சு. ஆம். நீதி தேவதையின் தராசுகள் என்றோ துருப்பிடித்துப் போச்சு.

நீங்க என்ன நினைக்கிறீங்க
 சட்டம் உங்களை பாதுகாக்கும் என நம்புகிறீர்களா? ஏன்?
 சட்டம் தனது கடமையை செய்யத் தவறினால் நாம் என்ன செய்யலாம்?
 யாருக்கு சாதகமாக நமது சட்டங்கள் செயல்படுகின்றன?

சாதியை கடந்து சாதிக்க வா (Beyond the caste)


             
அறுபது வயதுப் பெரியவரை ஆறே வயதுச் சிறுவன் தான் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக 'யோவ் ஆறுமுகம் இங்க வாயா' என்று எந்தவொரு உறுத்தலுமின்றி உரக்கக் கூப்பிடுவதன் நியாயம் என்ன? 'என்னங்க சாமி' என்று எந்தவொரு வருத்தமுமின்றி கூனிக் குறுகி நிற்கும் அந்தப் பெரியவரின் சுயஉணர்வு மழுங்கிப் போனதன் காரணம்தான் என்ன? மனித மலத்தைக் கையால் அள்ளி மலத்தோடு மலமாய் குறிப்பிட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் நாறச்செய்தவன் எவன்? படிச்சாலும் காசுபணம் சம்பாதிச்சாலும் நீங்க அந்தப் பயலுகதானே என்ற ஆணவத்தைக் கற்பித்தவன் யார்? எல்லாத் தளங்களிலும் குறிப்பிட்ட மக்கள் சாதியின் பெயரால் காலங்காலமாக ஒரங்கட்டப்படுவதன் காரணமென்ன?
               
இந்திய மண்ணின் மிகப்பெரிய சாபம் சாதியம். இந்தியர்களின் உடல், உள்ளம், உயிர், ஆன்மா அத்தனையையும் ஆட்டிப் படைக்கிறது சாதி. பிறப்பில் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஓயாமல் தொடர்ந்து, இறந்தபின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்போதும் குறுக்கே வந்து நிற்கிறது சாதி. இந்தியாவின் சட்டக் கல்லூரிகள் முதல் கல்லறைகள் வரை சாதியின் உடும்புப் பிடிக்குள் உருவிழந்துக் கிடக்கின்றன. சமூகம், சமயம், அரசியல், கல்வி, பொருளாதாரம் என எல்லா தளங்களிலும் சாதி நாற்றம் வீசுகிறது.
               
      சாதித் தீ இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் காலங்காலமாக கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு இடமில்லாமல் மனிதர்களின் உயிரை, உடைமையை, மாண்பை சாதி சூறையாடுகிறது. சாதிப் பற்றினால் உடலும் உணர்வும் இரத்தமும் பற்றியெரிய சாதிவெறியர்கள் மிருகங்களாக உருவெடுத்து அரங்கேற்றும் வேதனைப்படக் கூடிய, வெட்கப்படக் கூடிய செயல்களைக் கண்டு நாமே நாம் தலைகளில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
                  30.04.2008 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்த்திக் கொண்ட சாதியினர் பயன்படுத்துகின்ற பாதையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 6 வயது சிறுமி நடந்து வந்த காரணத்திற்காக அவள் நெருப்புக்குள் தள்ளப்பட்டு உடல் முழுவதும் வெந்துபோனது. மனித மலத்தைத் தின்ன வைப்பது, சிறுநீரைக் குடிக்க வைப்பது, தாழ்த்தப்பட்டப் பெண்களை கொச்சையாகத் திட்டித் தீர்ப்பது, நிர்வாணமாக மரத்தில் கட்டி வைப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது இவ்வாறாக சாதியின் பெயரால் அரங்கேற்றப்பட்டு நியாயப்படுத்தப்படும் கொடுமைகள் ஆயிரமாயிரம்.


நீங்க என்ன நினைக்கிறீங்க?
 சாதியத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
 சாதியத்தால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன?
 சாதியத்தை ஒழிக்க முடியுமா? என்னென்ன செய்யலாம்?

நலம் குன்றியவர்களோடு தோழமை (Solidarity With the Sick)

                    நோயாளிகள் நாடிச் செல்லும் ஓர் சரணாலயம் திருச்சி பாத்திமா நகர் திருக்குடும்பம் மருத்துவமனை. தொழுநோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் என பலரும் தஞ்சமடையும் ஒர் தாயின் மடி அது. இங்கு அடைக்கலம் தேடும் பல நோயாளிகள் அவர்களது குடும்பத்தாலும் உறவினர்களாலும் ஊராலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். சீ என்று மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு ஒதுங்கிச்செல்லும் மனிதர்களால் அவமானப்படுத்தப்பட்டவர்கள். சமூகம் தனது நாவினால் சுட்ட வடுக்கள் ஆறாமல் அழுதுகொண்டிருப்பவர்கள். இத்தகைய நோயாளிகளின் அழுகிப்போன புண்களை பரிவோடுக் கழுவித் துடைக்கிறார்கள் அங்குள்ள செவிலியர்கள். இதயத்தில் உறைந்த பயத்தையும், வெறுப்பையும், அவமானத்தையும், கோபத்தையும், வேதனையையும் போக்கி ஆறுதல் தருகிறார்கள். நோயாளிகளின் குழந்தைகளை தாயன்போடு அரவணைத்துப் பேணுகிறார்கள். இங்கு பொங்கி வழிந்தோடும் மனிதநேயம் மனதை கொள்ளை கொள்கிறது.
                       நோயுற்றிருக்கும் கணவருக்காக மருத்துவமனையில் கண்விழித்துக் காத்துக் கிடக்கும் நல்ல மனைவியரைப் பார்த்திருப்போம். படுத்தப்படுக்கையில் கிடக்கும் பெற்றோரை பரிவோடு பேணும் நல்ல பிள்ளைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நோய்வாய்ப்பட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு பதற்றத்தோடு தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரைக் கண்டிருப்போம். இவையெல்லாம் அன்பின் ஆழமான வெளிப்பாடுகள்.
             
இன்னொரு மனிதரை கனிவோடு பராமரிப்பது என்பது போற்றப்படவேண்டய ஓர் செயலாகும். அதிலும் குறிப்பாக, ஒருவர் நோய்வாய்பட்டிருக்கும்போது அவரை பரிவன்போடு பேணுவது வாழ்த்தப்படவேண்டியதாகும். நோயுற்றிருக்கும் வேளையில் இயல்பாகவே அடுத்தவரின் அன்பையும் அரவணைப்பையும் நாம் நாடுகிறோம். நமக்குத் தெரிந்த நபர் மருத்தவமனையில் இருக்கும்போது பழவகைகள், சத்துமாவுகள் என விதவிதமாய் வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்து நலம் விசாரிக்கிறோம். 'நல்ல நண்பனை ஆபத்தில் அறி' என்பதுபோல உண்மையான உறவை நாம் நோயுற்றிருக்கும்போது அறிந்து கொள்ளலாம்.
 
                   நோய்வாய்ப்பட்டிருக்கும் பெற்றொர்களையும் பெரியோர்களையும் சில வீடுகளில் ஏதோ ஒரு மூலையில் ஓரங்கட்டியிருப்பார்கள். மாட்டுக் கொட்டகையில் கிடத்தியிருப்பதையும் பார்க்கலாம். நோயுற்றதால் அந்தப் பெரியவர்கள் ஆடுமாடுகளைவிடக் கேவலமாகிவிட்டார்கள். சனியன் இருமிக்கிட்டே இருக்கு... வீடெல்லாம் நாறித் தொலையுது... இதால வீட்டுக்கு விருந்தாளிகளை அழைக்க முடியல... சீக்கிரம் செத்து தொலையமாட்டேங்குது என்று சிலர் திட்டித் தீர்ப்பதுண்டு. அந்த வேளைகளில் நோயுற்றிருப்பவர்களின் உள்ளம் வேதனையில் துடிதுடித்துப்போகும்.

 
நீங்க என்ன நினைக்கிறீங்க?
 நீங்கள் நோயுற்றிருக்கும்போது உங்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் என்னென்ன?
 நோய் என்பது கடவுளின் சாபமா? நம் பாவத்தின் விளைவா?
 நோயாளிகளுக்கு என்னென்ன வழிகளில் துணைநிற்கலாம்?

அனுபவங்கள் நம்மை மாற்றட்டும் (Experience is the Best Teacher)

                  ஒவ்வொரு நாளும் பல்வேறு நபர்களை நாம் சந்திக்கிறோம். பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம்.  மனதை வருடுகின்ற மற்றும் மனதை நெருடுகின்ற பல எதார்த்தங்களை நாளும் அனுபவிக்கின்றோம். இத்தகைய அனுபவங்களை கவனமாய் உள்வாங்கி, ஆய்வு செய்து, தங்களது வாழ்விலும் பிறரது வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே மகான்களாக போற்றப்படுகிறார்கள்.
                      சித்தார்த்தன் என்பவர் நோயினால் அவதியுறும் மனிதரைப் பார்த்தார், முதிர்ந்த வயதினால் தள்ளாடுபவரைக் கண்டார், இறுதிச்சடங்கிற்காக ஊர்வலமாகக் கொண்டுச்செல்லப்படும் பிணத்தைப் பார்த்தார். மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதுவதை உணர்ந்தார். மரத்தடியில் அமர்ந்து அனுபவங்களை ஆய்வு செய்தார். ஞானம் பெற்று புத்தராக உருவெடுத்தார். அனுபவங்கள் அவரை மாற்றின.
                                  
         ஆக்னஸ் என்ற ஓர் வெளிநாட்டுப் பெண் கொல்கத்தாவில் ஆசிரியராக பணிபுரிந்தார். அதே சமயம் கொல்கொத்தாவின் சேரிப்புறங்களிலும் சாலையோரங்களிலும் மக்கள் பசியிலும் நோயிலும் முதுமையிலும் வாடுவதைக் கண்டார். தனது ஆசிரியப் பணியை விட்டுவிட்டு சேரிகளை நோக்கி புறப்பட்டார். சாலையோரம் கவனிப்பாரற்றுக் கிடந்த மனிதர்களை அன்போடு அரவணைத்து ஆதரவு அளித்தார். அநாதைகளாகக் கைவிடப்பட்டக் குழந்தைகளை தாய்போல பேணி வளர்த்தார்;. அன்னைத் தெரசாவாக புகழ்பெற்றார். அனுபவங்கள் அவரை மாற்றின.
                               உளுந்தூர்பேட்டையின் ஓர் குறிப்பிட்ட சாலையில் காலையிலும் மாலையிலும் பரபரப்பு. வாகனங்கள் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பயத்தோடு சாலையைக் கடக்கின்றனர். வேலைக்குச் செல்வோர் அங்குமிங்குமாக சென்று கொண்டிருக்கின்றனர். பெரிய விபத்து ஒன்று நடக்கிறது. இதையெல்லாம் நேரில் பார்க்கிறார் அப்பகுதியை சார்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர். அவருடைய மனிதில் ஓர் சலனத்தை உணர்ந்தார். ஏதாவது செய்யலாமே என்று யோசிக்கலானார். அன்றிலிருந்து சுமார் 15 ஆண்டுகளாக காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரை மற்றும் மாலை 3.30 மணி முதல் 5.00 மணிவரை பள்ளி செல்லும் மாணவர்களையும் மற்றவர்களையும் சாலையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். அனுபவம் அவரை மாற்றியது.
              இவ்வாறு எத்தனையோபேரை சொல்லிக் கொண்டே போகலாம். தங்களுடைய வாழ்வில் பெற்ற அனுபவங்களால் தூண்டப்பட்டவர்கள் இவர்கள். ஏன்? ஏதற்கு? யார்? என்ற கேள்விகளைக் கேட்டு தங்கள் அனுபவத்திலிருந்து புதிய மனிதர்களாக உருவெடுத்தவர்கள் இவர்கள்.  ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள், ஏமாற்று வேலைகள். விபத்துகள் என எத்தனையோ அனுபவங்களை நாம் பெறுகிறோம். மாற்றங்கள் எங்கே?
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்கள் வாழ்வை மாற்றிய அனுபவம் ஏதேனும் உண்டா?
 அனுபவங்களால் நாம் மாறுவதில்லையே ஏன்?
 அனுபவங்களால் மாற்றம் காண நாம் என்னென்ன செய்யலாம்?