

சாதியம் - ஒரு தெளிவானப் புரிதல்
'சாதி என்பது மிகப் பெரிய பிரச்சனை. இப்பிரச்சனையை அதன் முழுமையில் என்னால் விளக்கிவிட முடியாது. அந்த அளவுக்கு சிக்கலானது' என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை, சாதியக் கட்டமைப்பின் நாடி நரம்புகளை ஆழமாகத் தேடிப் பயணித்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் உண்மையானவை. அந்த அளவுக்கு சாதியின் வேர்கள் நமது வாழ்வின் ஒட்டுமொத்தத் தளங்களையும் சுற்றி வளைத்துள்ளன.
சாதியக் கூறுகள் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்ற பொதுவானக் கூறுகள் கிடையாது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளில்தான் சாதிய இறுக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் சாதியத்தின் இறுக்கம் கடுமையாகக் காணப்படுகிறது. எந்த அளவுக்கு இந்தியர்கள் சாதியத்தை உள்வாங்கி; ஒருவர் மற்றவரிடமிருந்து சிதறுண்டுக் கிடக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட சாதிகளாக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட சாதியினராக பிளவுபட்டுக் கிடக்கின்றனர்.
சாதி ஒரு இந்திய நிகழ்வு, இந்து சமய நிகழ்வு என வாதிடும் முனைவர் கோ. கேசவன் அவர்கள், 'சாதி, மனித குலத்துக்கே பொதுவானது என்பதாகவும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்பதாகவும் சொல்ல முடியாதபடி சில பிரதேசங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே தோன்றி திடப்பட்ட ஒன்றாக உள்ளது' என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
சாதி என்பது அடிப்படையில் என்ன என்ற தேடலில், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாதபடி எல்லாத் தளங்களிலும் பரந்து காணப்படுகிறது. ஒவ்வொரு வரையறையிலும் வாழ்வின் ஒருக் குறிப்பிட்டத் தளம் அழுத்தம் பெறுவதைக் காணமுடிகிறது. பலர் பொருளாதாரத் தளத்தை மையப்படுத்தி சாதியை வரையறைச் செய்கின்றனர். சாதியக் கட்டமைப்பு என்பது அடிப்படையில் ஒரு பொருளாதாரச் சுரண்டலே. இந்தச் சுரண்டலின் தவிர்க்க முடியா விளைவுகள் சமூக, சமய மற்றும் பல்வேறு தளங்களில் பரந்துக் கிடக்கிறது.
சாதியத்தின் பொதுவானத் தன்மைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம். பிறவியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுதல், அதாவது பாரம்பரியத் தொழில் கையளிக்கப்டுதல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே திருமண உறவுகளை வைத்துக் கொள்ளுதல், சமூகம் முழுமைக்கும் மேலிருந்து கீழ்வரை ஒரு படிநிலைமுறையை அமைத்துக் கொள்ளல், சமூகம் முழுமைக்கும் தூய்மை - தூய்மையற்றத்தன்மை ஆகியவற்றை உருவாக்குதல்.
வருணாசிரமம் வகுத்த சிரமம்
எந்த ஒருக் கட்டமைப்பையும் நிலைநிறுத்துவதற்கு அதற்கு சாதகமானக் கருத்தியல்கள் துணைபோகின்றன. சாதியக் கட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மனுசாஸ்திரம்தான் அதற்கானக் கருத்தியலைத் தருகிறது.
சாதியத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததன் மிகப் பெரிய பாவம் மனு என்பவரையே சாரும். மனுசாஸ்திரம் என்று அழைக்கப்படும் அவரது சட்டப் புத்தகம்தான் இந்துக்களுடைய மிகவும் அதிகாரப் பூர்வமானச் சட்டப்புத்தகமாகும். மனு நால்வர்ண நிறுவனத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கிறார். நான்கு வர்ணங்களுக்கான சட்டத்தை வகுத்தளிப்பதே மனுவினுடைய முதன்மையான நோக்கமாகத் தெரிகிறது.
சிந்தனையில் ஆழ்ந்திருந்த மனுவிடம் சென்ற மாமுனிவர்கள் அவரை வணங்கி 'தெய்வீக அற்றலே, சாதிகள் (நான்கு முதன்மை சாதிகள்) ஒவ்வொன்றினுடைய புனிதச் சட்டங்களையும் சரியாகவும் முறையாகவும் எங்களுக்கு அருள்வாயாக' என்றுக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனு கொடுத்தச் சட்டங்கள்தான் மனுசாஸ்திரமாகப் போற்றப்படுகிறது. சாதியத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் மனுவின் கூற்றுக்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்..
சாதியக் கட்டமைப்பை பாதுகாத்துப் பேணுவது அரசனின் தலையாயக் கடமையாகும். சாதி மீறுவது மிகப் பெரியக் குற்றமாகும். அதற்காக கடுமையானத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தண்டனைக் கொடுக்கத் தவறினால் எல்லா சாதிகளும் நாசமுறும். சாதிகளின் எல்லைகள் கடக்கப்படும். சாதியை மீறுபவர்கள் சரியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவர்களின் வாரிசு உரிமையைப் பறிக்க வேண்டும்.
வருணாசிரமம் என்னும் கோட்பாடுதான் சாதியப் பாகுபாடு, சாதியப் படிநிலை அமைப்பு, தீண்டாமை போன்றவற்றின் கருத்தியல் அடிப்படையைத் தருகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களை கற்பிக்கும் வருண நெறிமுறை தொடக்கத்தில் தொழில் பிரிவின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஆக்கப்பட்டது. 'வருணம் பிறப்புரிமையாக, பரம்பரை உரிமையாக ஆக்கப்பட்டது பார்ப்பனியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அம்பேத்கார் குறிப்பிடுகிறார்.


No comments:
Post a Comment