Wednesday, September 29, 2010

சாதிய இந்தியா - 3 (சாதிக்குள்ளே மட்டும் திருமணம்)

சாதியமும் அகமணமும்

        ஒருவர் தனது சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வரம்பினை சாதியம் தீர்மானித்துள்ளது. இந்த வரம்பினை தாண்டுபவர் யாராக இருந்தாலும் பல்வேறு தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும். ஒருவகையில், அகமணம் மட்டுமே சாதியின் சாரம்சமான ஒரேயொரு இயல்பு எனக் கூறி விடலாம். வேறு விதமாகக் கூறினால், கலப்பு மணம் இன்மையே (அகமணம்) சாதியின் சாராம்சமாக இருக்கிறது.
           சாதிக்கலப்புத் (சாதி எதிர்ப்பு) திருமணங்கள் செய்வோர் சாதி அல்லது குடும்ப கௌரவம் என்ற பெயரில் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இத்தகைய படுகொலைகள் மனதை உறுத்துகின்றன. அரசும் காவல்துறையும் இத்தகைய படுகொலைகளை மூடிமறைப்பதில் பெரிதும் துணைபோகின்றன.
          இத்தகைய படுகொலைகளைப் பற்றிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை பிரண்ட்லைன் இதழ் (ஆகஸ்டு, 2009) பிரசுரம் செய்துள்ளது. 14.11.2008 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் தந்தையால் இளம் பெண்ணும், அவளது காதலனும், காதலனுடைய சகோதரனும் படுகொலை திருவாரூர் மாவட்டத்தில் ஹரிதிவாரமங்கலம் கிராமத்தில் சிவாஜி என்ற தலித் இளைஞன் படுகொலை போன்றவை ஒரு சில உதாரணங்கள். இத்தகையப் படுகொலைகள் கட்டப்பஞ்சாயத்துகளின் கோர வெளிப்பாடுகளாக உள்ளன. சில பஞ்சாயத்துக்கள் இத்தகையப் படுகொலைகளை ஊக்கப்படுத்த தக்க சன்மானங்களை அறிவிப்பது மிருகத்தனமானது.
        சாதி இரத்தம் கலந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தகைய வன்முறையையும் கட்டவிழ்த்துவிட ஆதிக்க சாதியினர் தயங்குவதில்லை. தங்களது சாதிய சமூகத்தின் எல்லைகளை மீறித் திருமணம் செய்துகொள்வதென்பது மிகப்பெரியத் தண்டனைக்குரியக் குற்றமாகவே இன்றுவரை கருதப்படுகிறது.


No comments:

Post a Comment