Wednesday, September 29, 2010

சாதிக் கிறித்தவம் - 3 (கிறித்தவர்களின் சாதிவெறி)

சாதிக் கிறித்தவம் - 3 (கிறித்தவர்களின் சாதிவெறி)

கிறித்தவ அதிகார வர்க்கத்தின் சாதி வெறி     மக்கள் மையத் திருச்சபை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் இன்றும் கிறித்தவம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் போன்றோரின் கண்ணசைவினைப் பொறுத்தே அசைந்து கொண்டிருக்கிறது. ஆகவே இவர்களையே கிறித்தவத்தின் அதிகார வர்க்கம் என்று எவ்வித தயக்கமுமின்றி இங்கு குறிப்பிடுகிறேன்.     சாதிப் புழுதியை தின்று கொழுத்து, முதலில் சாதிக்கும் பிறகு சாமிக்கும் துதிபாடும் கிறித்தவத்தின் அதிகார வர்க்கமே, சமத்துவ நாடகத்தின் உச்சகட்ட நடிகர்கள். விவிலியத்தைத் துருவித் துருவி ஆய்ந்த பின்னும் சாதி வெள்ளம் இவர்களில் பொங்கி வழிகிறது. இவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சாதி சமுதாயத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். ஏன், தங்கள் சாதியின் மரியாதைக்குரிய பிரதிநிகள் என்றும் தாராளமாகச் சொல்லலாம். சில வேளைகளில், மறைமாவட்டத்திலும் பங்குகளிலும் அரங்கேறும் சாதிப் பிளவுகளுக்கு மூல காரணிகளாக இருப்பவர்கள் இந்த இறைப்பணியாளர்களே.     தங்கள் சாதி வட்டத்திற்குள் மட்டும் கண்சிமிட்டும் ஆயர்கள், குருக்கள், கன்னியர், அருட்சகோதரர்கள் ஏராளம் சாதிக் களைகளை அறுத்தெறியத் தெரியாமல் அந்த பொறிக்குள் விழுந்து தடுமாறும் ஆயர்களின் கண்காணிப்பில் அவர்களுடைய சாதி ஆடுகள் மட்டுமே கொழுத்துக் கிடக்கின்றன. திருச்சபை வட்டத்திற்குள் குருத்துவ மற்றும் துறவற சபைகளில் உறுப்பினர்களை சேர்ப்பதும், பணித்தளங்களில் குருக்களை நியமிப்பதும், துறவற சபை தலைவர்களை நியமிப்பதும், நிர்வாகம் சார்ந்த பெரியப் பொறுப்புக்களை ஒப்படைப்பதும் பெரும்பாலும் சாதிய அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகின்றன.இனம் புரியாத அக்கறையோடு சாதிக் கோஷ்டிகளைச் சேர்க்கும் குருக்கள், துறவியர், குருமாணவர்கள், குறிப்பிட்ட சாதியனருக்கென்றே துவங்கப்பட்டத் துறவற சபைகள், குறிப்பிட்ட சாதியினருக்கென்றே புதிதாக உருவாக்கப்படும் மறைமாவட்டங்கள், பங்குகள், குறிப்பிட்ட சாதியினருக்கென்று ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், தனது பங்கைச் சார்ந்த தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை மதிப்பின்றி நடத்தும் குருக்கள், தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை அதிக நேரம் காக்க வைப்பது, சாமியார் இல்லை என்று உள்ளே இருந்து கொண்டே ஆணவமாய் சொல்லி அனுப்புவது, தேவையில்லாமல் அவர்களை திட்டித் தீர்ப்பது போன்றவை அதிக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.தலித் ஒருவர் ஆயராக நியமிக்கப்படுவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது. தமிழகத்திலும் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பிறகுதான் முதன்முதலாக வேலூரில் தலித் ஆயர் நியமனம் செய்யப்பட்டார்.ஏன் திருச்சபை சாதியத்தைப் ஏற்றுக் கொண்டு வந்துள்ளது என்ற விவாதத்தைப் பார்க்கும்போது, ஒரு உண்மை தெளிவாகப் புலப்படுகிறது. திருச்சபையில் அதிகாரத்தில் உள்ளவர்களும், திட்டங்களை உருவாக்குபவர்களும், இறையியலாளர்களும் உயர்த்திக் கொண்ட சாதியைச் சார்ந்தவர்கள். இதனால் அவர்கள் கிறித்தவராகவும், அதே சமயத்தில் சாதியின் பெயரால் தங்களை உயர்த்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருப்பதன் முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதே அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

பொதுநிலையினரின சாதிவெறி    

திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் (தி.ப. 2:42) தொடக்கக் காலத்தில் உச்சமடைந்த நம்பிக்கைக் கொண்டோரின் வாழ்க்கைநெறி இந்தியாவில் சாதி வெறியால் கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆதிக் கிறித்தவம் இறந்து சாதிக் கிறித்தவம் உயிர்த்தெழுந்ததால் சாதியின் சாட்சிகளாக பொதுநிலையினர் காட்சி தருகின்றனர்;. திருமண உறவு, குடியிருப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் இடம், பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளைக் கைப்பற்றுவது போன்றவற்றில் சாதிஉணர்வு ஓங்கி நிற்கிறது.     குறிப்பிட்ட சாதியனருக்கென்றே ஒதுக்கப்பட்ட அன்பியங்கள், பங்குத் தந்தையை சாதியின் பெயரால் சொந்தம் கொண்டாடும் அல்லது விரட்டியடிக்கத் துடிக்கும் ஒரு வகையான வெறி, வழிபாடுகளிலும் திருவிழா நிகழ்வுகளிலும் தாழ்த்தப்பட்டோர் என முத்திரைக் குத்தி ஒதுக்கித் தள்ளும் நிலை, சாதிக்கொரு கல்லறைத் தோட்டம் கட்டி சில்லறை புத்தியைக் காட்டுவது, சாதிகொரு பங்கு, சாதிக்கொரு கோயில், ஆதிக்க சாதிக் கிறித்தவரின் ஆணவ மனநிலை, தலித் கிறித்தவரின் தாழ்வு மனப்பான்மை இவையெல்லாம் பொதுநிலையினரிடம் காணக்கிடக்கும் சாதி மனநிலையின் கோர முகங்கள்.ஜஐஅயபநஸஜஐஅயபநஸபுதுவை – கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த இறையூர் பங்கில் கிறித்தவ வன்னியர்களின் சாதிய அடாவடித்தனம், காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் கிறித்தவ ரெட்டியார்கள் தாழ்த்தப்பட்ட சமூகக் கிறித்தவர்களை தேவாலயத்தின் நுழைவாயில் வழியே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத கொடுமை, திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் மேட்டுப்பட்டி வன்னிய கிறித்தவருக்கும் தலித் கிறித்தவருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதல், திருச்சி மேலப்புதூர் பங்கிலுள்ள சாதிக்கல்லறைத் தடுப்புச்சுவர், பல பங்குகளில் சாதி வாரியாக திருவிழாக்கள், பாதங் கழுவுதல் சடங்கில் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் பங்கேற்கத் தடை, தேர் மற்றும் குருத்தோலைப் பவனிகள் தலித் கிறித்தவரின் பகுதிகளுக்கு செல்லாத நிலை போன்றவை பொதுநிலையினரிடம் அன்றாடம் காணக்கிடக்கும் சாதிய அவலங்கள்.

No comments:

Post a Comment