தூய்மை – தீட்டுக் கருத்தியல்
தூய்மை - தீட்டு என்ற கருத்தியல் சாதியப் படிநிலைக்கு அடிப்படையாக உள்ளது. இதுவே தீண்டாமை என்ற கருத்தியலுக்கும் இட்டுச் செல்கிறது. தாழ்த்தப்பட்டவர்களை கோவிலில் நுழைய விடாததற்கும் இதுவே காரணமாகிறது.
தொட்டால் மட்டுமே தீட்டு உண்டாக்கக் கூடியவர்கள் தீண்டப்படத்தகாதவர்கள். ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்துவிட்டாலே தீட்டு உண்டாக்கக் கூடிய மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் நெருங்கத்தகாதவர்கள். நெருங்கத்தகாத சாதியைச்; சார்ந்த நாயாடிகள் என்பவர்கள் நாய்களைத் தின்னும் கீழ்சாதி இனத்தினர், பிச்சைக்காரக் கூட்டத்தினர் என்று மலபார் கையேடு ஒன்று பதிவுச் செய்துள்ளது. இவர்களைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பவர்கள் பார்க்கத்தகாதவர்கள். பார்க்கத்காதவர்கள் எனக் கூறப்படும் திருநெல்வேலி மாவட்டத்தைச சார்ந்த புரத வண்ணார்கள் எனும் சாதியினர்க்கு பகலில் நடமாட அனுமதியில்லை. குகைகளில் வாழும் கரடி, புலி போன்ற காட்டு விலங்குகளைப் போல் பகல் முழுவதும் உள்ளே அடைந்துக் கிடந்து இரவில் மட்டுமே அவர்கள் வெளியே வர அனுமதி உண்டாம். 'இந்து நாகரீகத்தால் சமூகத் தொழுநோயாளிகளாக மாற்றப்பட்ட 'தீண்டத்தகாதவர்கள்' என்ற இந்த நற்பேறு பெற்ற உயிர்களுக்குத்தான் எவ்வளவு பெரிய இழிவு! தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுவதே பெரும் அவப்பேறு. அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படத்தகாதவன் என்கிற அவமானத்தைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையானது என்னுடையக் கருத்துப்படி வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரிகத்தைப் பற்றி தீண்டத்தகாதவன் என்ன சொல்வான்? இது நாகரிகம் அல்ல, நயவஞ்சகம் என்று அவன் சொன்னால் தவறா?'ஜ16ஸ என்று அம்பேத்கர் விமர்சித்தார்.
தீண்டத்தகாத சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுப் படிநிலையை உருவாக்கி அவர்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்தும் வெறியை சாதியம் கொடுத்திருக்கிறது. இது, சாதியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி.ஜ17ஸ எடுத்துக்காட்டாக, தேனி மாவட்டம கோட்டூர் என்ற கிராமத்திற்கு நான் களப்பணி அனுபவத்திற்காக சென்றிருந்தபோது அங்கிருந்த அருந்ததி இன மக்களை பறையர் இன மக்கள் ஆதிக்க மனநிலையோடு நடத்துவதை என்னால் கண்டுணர முடிந்தது. இதைப் போலவே, குஜராத்தில் வாங்கர் எனப்படும் தீண்டத்தகாத சாதியினர் தங்களை மற்றெல்லா தீண்டத்தகாத சாதிகளையும் விட மேலானவர்களாகக் கருதி ஆதிக்க மனநிலையோடு நடந்துக் கொள்கின்றனர். சாமர்கள், பங்கிஸ் போன்றத் தீண்டத்தகாத சாதியினர் மேல் இந்த வாங்கர் சாதியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த மடமையைக் கண்டு நொந்துப்போன செபாஸ்டியன் காப்பன் என்னும் இந்திய இறையியலாளர், 'நீதிக்கும் அன்புக்குமான தேடலோடு முரண்பட்டு நிற்கும் தூய்மை - தீட்டு சட்டங்கள் வெறும் மனித உருவாக்கமே. அவை எந்த அளவுக்கு மனிதர்களை நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்கிறது என்பதைப் பொறுத்து அவற்றைக் கடைபிடிக்கலாம் அல்லது தூக்கி எறியலாம்' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment