

1. காட்சி ஊடகம்
பல்வேறு வகையான ஊடகங்களின் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சிறார்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு தொடர்பு ஊடகம் பல்லிளித்துக் கொண்டு நிற்கிறது. அச்சு ஊடகம், அலை ஊடகம் (வானொலி), மின்னணு ஊடகம் (கணிணி) என்று ஓயாமல் சிறார்களின் நேரத்தை, சிந்தனையை, மனதை தன்வசப்படுத்திக் கொள்ளும் ஊடகங்களின் வரிசையில் காட்சி ஊடகம் சிறார்களின் ஒப்பற்ற அரசனாய் இன்று அட்சி செய்து கொண்டிருக்கிறது. சிறார்களை மெய்மறக்கச் செய்து மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
1.1 பொருள் விளக்கம்
'காட்சி ஊடகம் என்பது ஒளி மற்றும் ஒலி வகையில் காட்சி அமைப்புச் செய்து ஒளிபரப்புவதாகும்.' இந்தக் காட்சி ஊடகமானது தொலைக்காட்சி, திரைப்படம் (சினிமா) என இரு வகைகளாக புரிந்து கொள்ளப்படுகிறது. காட்சி ஊடகம் வெகுமக்கள் ஊடகங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பதால் அதிகமான மக்களை சென்றடைகிறது.
'தொலைக்காட்சி நிலையத்தில், ஒளிபரப்ப வேண்டியவற்றை படம்பிடித்து அவற்றை மின்காந்த அலைகளாக மாற்றி ஒளி ஒலி பரப்பு அனுப்பீட்டுக் கருவி வாயிலாக விண்ணில் அனுப்புகின்றனர். தொலைக்காட்சி பெட்டியிலுள்ள வானலைக் கொடி அம்மின்காந்த அலைகளைக் கவர்ந்து மீண்டும் ஒளி ஒலியாக மாற்றுகிறது.' தொலைக்காட்சி பெட்டியின் திரையில் ஆயிரக்கணக்கான புள்ளிகள் உள்ளன. இவற்றில் ஒளிபரப்பு நிலையத்திலிருந்து அனுப்பப்படும் எலக்ட்ரான்கள் விழும் போது வண்ணக்காட்சியாகத் தெரிகிறது.
'சினிமா என்ற சொல் சினிமாற்றோகிராபி என்ற வார்த்தையிலிருந்து பிறக்கிறது. சினிமா என்பதற்கு அசைதல், நகர்தல் என பொருள் பெறும்.
1.2 காட்சி ஊடகத்தின் வரலாறு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜாண் பியர்டு என்பவர் தொலைக்காட்சி என்னும் வியத்தகுக் கருவியினைக் கண்டுபிடித்தார். '1926 ஜனவரி 27 ம் நாளில் அவர் தமது கருவியை அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார். 1954 முதல் கொண்டே வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் துவங்கிய முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்காப் பெற்றது. இந்தியாவில் 1959 அக்கோடபர் திங்கள் 15 ம் நாளில் புதுதில்லி நிலையத்திலிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்புத் துவங்கியது.' '1980 ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கிராமங்களுக்கு தொலைக்காட்சியை அறிமுகம் செய்தார்.'
'1890 ல் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த சினிட்டோஸ்கோப் என்ற கருவியும், வில்லியம் பிரிசுகிரீன் என்பவரின் சினிமாட்டோகிராபி என்ற கருவியும், 1885 ல் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த திரைப்பட காமிராவும், சினிமா என்னும் காட்சி ஊடகத்தினை நமது சமுதாயத்தில் பிரசவம் செய்தன. '1919 ல் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ராபர்ட் பிளஹார்த்தி குறும்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். 1920-ல் பேசும் படம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தாதா சாகிப் பால்கே (1913) என்பவரின் இயக்கத்தில் உருவான ராஜா ஹரிச்சந்திரா என்பதே முதல் படம். தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ் என்ற பெயரில் 1931 ல் வெளிவந்தது.'
2. காட்சி ஊடகத்தின் பிடியில் சிறார்கள்
காட்சி ஊடகத்தின் உடும்புப் பிடியில் ஒட்டுமொத்த சமுதாயமும் மூச்சுத் திணறிக் கிடக்கும் அவலத்தின் முதல் பலியாடுகள் சிறார்களே. 'நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் உள்ளனர்.' பார்த்துப் பார்;த்துப் பரவசத்தில் தொலைக்காட்சியும் திரைப்படமுமே கதியென இவர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இந்த மயக்கம், ஏக்கம் அத்தனையும் சிறார்களை பல்வேறு தாக்கங்களுக்கு ஆளாக்குகின்றன.
2.1 சிறார்களின் வளர்ச்சிக்கு வழிகோலும் காட்சி ஊடகம்
ஒரு ஊடகம் சமுதாயத்திற்கு வளர்ச்சியை தருவதும் தளர்ச்சியை தருவதும் அதை யார் இயக்குகிறார்கள், எதற்காக இயக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. காட்சி ஊடகமான தொலைக்காட்சியும் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.
காட்சி ஊடகம் சிறார்களை நல்ல முறையில் வளர்த்தெடுக்கும் பணியில் முற்றிலுமாகத் தவறிவிட்டது என்ற வீண் பழியை நான் சுமத்த விரும்பவில்லை. மாறாக, அவர்களை வாழ்வின் பல்வேறு தளங்களில் வளர்த்தெடுப்பதில் காட்சி ஊடகம் பலவகையான நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.
குழந்தைகளின் படைப்பாற்றல், அறிவுத்திறன், கலைத்திறமைகள் ஆகியவற்றிற்கு தூண்டுதலாகவும், திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாகவும் காட்சி ஊடகம் அமைந்துள்ளது. டிஸ்கவரி, அனிமல் பிளானட், சுட்டி போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் குழந்தைகளின் அறிவுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.
குழந்தைகளை வைத்துக் காட்சியாக்கப்படும் திரைப்பட காட்சிகள் குறிப்பாக பாடல்கள் பல வகையான நல்ல உணர்வுகளை (குதூகலம், வியப்பு, சிரிப்பு) சிறார்களிடம் ஏற்படுத்துகின்றன. 'குழந்தைகள் திரைப்பட அமைப்பு (ஊhடைனசநn'ள குடைஅ ளுழஉநைவல) 1955 ல் இந்தியாவில் துவங்கப்பட்டது. சிறுவர்களுக்கான திரைப்படங்களை உருவாக்குவது, வெளியிடுவது, சிறுவர்களுக்கான திரைப்பட விழாக்களை நடத்துவது போன்ற அலுவல்களை இந்த அமைப்பு செய்கிறது.'
கேளிக்கைகள் வாழ்வியல் நிகழ்வுகளோடு தொடக்கத்திலிருந்தேக் காணப் படுகின்றன. கேளிக்கைகள் அவசியமானதே என்பதை சமுதாயத்தில் வாழும் எந்த மனிதரும் மறுப்பதற்கில்லை. சிறார்களை சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்டி, தாங்கள் கண்டவற்றை பிறரிடம் சொல்லி மகிழவைக்கிறது காட்சி ஊடகம். விளம்பரம், தொடர்கள், திரைப்படங்கள் என எல்லாத் துறைகளிலும் சிறார்களை அதிக அளவில் ஈடுபடுத்தி, சிறார்களை வைத்து நிறைய தளங்களில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது.

2.2 சிறார்களை சீரழிக்கும் காட்சி ஊடகம்
சிறார்களை சீரழிக்கும் காரணிகளில் காட்சி ஊடகமே நமது கண்களை முதலில் உறுத்துகிறது என்றால் மிகையல்ல. காட்சி ஊடகத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகும் சிறார்களின் நிலை சமூக அக்கறைக் கொண்ட மனிதர்களுக்கு மிகப் பெரிய கேள்வியாகவும் சவாலாகவும் அமைந்துள்ளது.
காட்சி ஊடகம் தரும் ஆச்சரியமும், பயமும், வன்முறையும் நிறைந்த மாயாஜாலக் காட்சிகளை எதார்த்தமாக நினைத்துக் கொண்டு தாங்களும் அதே போல் செய்ய வேண்டும் என்ற தீராத மயக்கத்தில் இன்றைய சிறார்கள் உள்ளனர். இதனால் நடந்தேறும் விபரீதங்கள் கொஞ்சமல்ல. '1999 ம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் 30 க்கும் மேற்பட்ட சிறார்கள் அன்றைய சாகச வீரனான சக்திமானைப் பின்பற்றி தீக்குளித்தல், உயரத்திலிருந்து குதித்து கை கால்களை முறித்துக் கொள்ளுதல், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு விபரீதங்களுக்கு ஆளானார்கள். 27.08.2006 அன்று மதுரையை சார்ந்த தியாகேஷ் என்ற சிறுவன் பவர் ரேஞ்சர்ஸ்களை நினைத்துக் கொண்டு தீயோடு விளையாடி உயிரை மாய்த்துக் கொண்டான்.'
சிறார்கள் அதிக நேரத்தை காட்சி ஊடகத்தோடு செலவிடுவதால் பெற்றோரோடும் மற்றோரோடும் கொள்ளும் உறவு மிகவும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சிறார்கள் வளர்ந்த பிறகு மிக எளிதாக பெற்றோர்களை வேண்டாமென்று துக்கி எறியும் நிலையை நமது சமுதாயம் ஏற்கெனவே வேதனையுடன் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
பாலியல் பலாத்காரம், கொலை, வன்முறை, இரட்டை அர்த்தம் மிகுந்த உரையாடல்கள் போன்ற தனது வயதுக்கு மீறிய காட்சிகளை ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் காட்சி ஊடகம் சிறார்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இதனால் இத்தகைய அநியாயங்களை ஒரு வாழ்க்கை முறையாகவே அவர்கள் ஏற்றுக் கொண்டு வாழும் அபாயம் உருவாகிறது.
ஆளுக்கொரு சினிமா ஹீரோவை பிடித்துக் கொண்டு அந்த ஹீரோவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும், அதன் பொருட்டு மற்றவர்களோடு வாக்குவாதம் செய்வதும் சிறார்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. ஹீரோ என்றால் மற்றவர்களை எப்படியாவது அடித்து வீழ்த்தி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தனையை காட்சி ஊடகம் சிறார்கள் மனதில் வேரூன்ற செய்வதால் அவர்கள் முரட்டுக் குணம் படைத்தவர்களாகவும், தங்களது இயலாமையைக் குறித்து தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
தான் வாழுகின்ற சமுதாயம் மிகப் பயங்கரமானது என்ற பயத்தையும் நம்பிக்கையின்மையையும் காட்சி ஊடகத்தில் நிறைந்து வழியும் வன்முறைக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன.
சிறுவர்களைக் குறிவைத்து ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. பொருட்களின் மீது தீராத மோகத்தை ஏற்படுத்தி விடுகிறது காட்சி ஊடகம். விளம்பரங்கள் சிறாரையும் பெண்களையும் குறிவைத்து ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பொருட்களை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்று நச்சரிக்கும் சிறார்களால் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகிறார்கள.
காட்சி ஊடகத்தில் பாலியல் ரீதியான காட்சிகள் குவிந்து கிடப்பதால் பாலியல் சார்ந்த முன்சார்பு எண்ணங்களும், குழப்பங்களும் சிறார்களை அலைக்கழிக்கின்றன. ஓருபால் புணர்வு போன்ற பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு அவர்களை ஆளாக்குகின்றன.
நிறத்தின் அடிப்படையில் அழகு என்ற சித்தாந்தத்தை காட்சி ஊடகம் மிக வலுவாக சிறார்களிடம் முன்னிறுத்துகிறது. ஆழகான சிறுமிதான், சிறுவன்தான் நன்றாக படிப்பார்கள், திறமைசாலிகளாக இருப்பார்கள், வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் போன்ற தவறான சித்தாந்தங்களை சிறார்களிடம் ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கிறது.
காட்சி ஊடகத்தின் முன்னாலேயே சரணாகதியாக விழுந்து கிடக்கும் சிறார்களிடம் படிப்பில் கவனக் குறைவுக் காண்ப்படுகிறது. வாழ்வின் குறிக்கோளை அவர்கள் மறந்து விடுகின்றனர். வீட்டில் செய்யும் சிறுசிறு வேலைகளைக்; குறித்து வெறுப்பும், கோபமும் சோம்பலும் சிறாரிடம் அதிகமாகக் காணப்படுவதற்கு காட்சி ஊடகம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கமே காரணம் என்று தயக்கமின்றி சொல்லலாம்.
3. காட்சி ஊடகம் கொண்டிருக்க வேண்டிய தன்மைகள்
ஒவ்வொரு வீட்டிலும் கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கும் காட்சி ஊடகம் சிறார்களை நன்மக்களாக வளர்த்தெடுக்கும் மிகப் பெரிய பொறுப்பை சிறப்பான வகையிலே பெற்றுள்ளது. சிறார்களின் நெருங்கிய நண்பனாகத் தோற்றமளிக்கும் காட்சி ஊடகம் மிகப் பெரிய சமூக மாற்றத்தினை சிறார்கள் மூலமாக உருவாக்க முடியும். அத்தகைய ஒரு சமூக மாற்றத்தை காட்சி ஊடகம் ஏற்படுத்த வேண்டுமென்றால் தன்னிலையிலேயே சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
காட்சி ஊடகத்தினை இயக்குகிறவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சமூக நலனை மையப்படுத்த வேண்டும். தங்களது வியாபார வெறியாலும், சுயநலத்தாலும், போட்டி மனப்பான்மையாலும் இந்த சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையான சிறார்களை சீரழிப்பதை அவர்கள் உணந்து செயல்பட வேண்டும்.
சிறாருக்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு காட்சியையும் ஒளிபரப்புவதில்லை என்ற தீர்மானத்தோடு செயல்பட்டு நமது சழுதாயத்தின் மானம் காக்கும் தன்மையை காட்சி ஊடகம் கொண்டிருத்தல் வேண்டும்.
மற்ற சிறார்கள் மீது நல்லெண்ணத்தையும், உறவையும், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையையும் சிறுவர்களிடையே வளர்க்கும் தன்மை வேண்டும். சிறார்களை மையப்படுத்தும் தன்மையை திரைப்படங்கள் கொள்ள வேண்டும். சமூகத்தின் எதார்த்தங்களை மிகைப் படுத்தாமல் சமூக மாற்றத்திற்கான விதைகளைக் கொண்டக் காட்சிகளை மட்டுமே திரைப்படங்கள் சிறார்களின் பார்வைக்கு அடிக்கடி கொண்டு வரவேண்டும.; சிறாருக்கு ஒவ்வாத காட்சிகளை திரைப்படங்கள் முடிந்தவரை நீக்கவும் குறைக்கவும் முனைய வேண்டும்.
4. காட்சி ஊடகம் கையாள வேண்டிய யுத்திகள்
சிறார்கள் மத்தியில் அசைக்க முடியாத ஓர் தனி இடத்தைப் பெற்றுள்ள காட்சி ஊடகம் அவர்களை மிக எளிதாகவும் சிறப்பாகவும் சென்றடைய சில நல்ல யுத்திகளை அது கண்டிப்பாகக் கையாள வேண்டும்.
'அனைத்துக் குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் நகைச்சுவையுணர்வுடன் நிகழ்ச்சிகளை தயாரித்தல், சிறுவர் சிறுமியருக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை சரியான இடைவெளியில் நிகழ்ச்சியின் பல்வேறு பாத்திங்கள் மூலம் திரும்பத் திரும்பப் பேசவைத்தல், இனிமையான இசைக் கலவையை பயன்படுத்துதல், வரைபடங்கள் மூலம் வேகமாக உயிரூட்டி இயக்க வைத்தல், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், கதை மாந்தர்களை சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைத்தல், சிறார்கள் எளிதில் புரிநிதுகொள்ளும் மொழிநடையை பயன்படுத்துதல்' போன்ற சிறப்பான யுத்திகளை காட்சி ஊடகம் கொண்டிருக்க வேண்டும்.
நிறையக் கருத்துக்களை எப்படியாவது சிறாருக்கு சொல்லிவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் காட்சிகளை பட்டும் படாமலும் அமைத்துக் கொள்வதை சிறார்கள் விரும்புவதில்லை. ஒரே கருத்தை உணர்வுப் பூர்வமாகவும், வியக்கத்தக்க வகையிலும் நகைச்சுவையுணர்வோடும் படைக்கும் யுத்தியை காட்சி ஊடகம் கையாள வேண்டும். எளிதான கேள்வி பதில் முறையில் நிகழ்வுகளை அமைத்து குழந்தைகளை ஒளிதில் சென்றடையும் யுக்தி கையாளப்பட வேண்டும்

முடிவுரை காட்சி ஊடகத்தின் மடியில் நமது சிறார் சமூகம் மடியாமலிருக்க பெற்றோரும் மற்றோரும் விழிப்புடன் இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும். சிறார்களை கைப்பொம்மைகளாக்கி அவர்களது சிந்தனையை மழுங்கடித்து, சீரிய செயல்களுக்குக் கால்கட்டுப் போடும் எந்தவொரு காட்சி ஊடகமும் நமது சமுதாயத்திற்கு வரமல்ல, சாபமே என்பது தெளிவு. ஆகவே, சமூக மாற்றத்திற்கான கருவிகளாக சிறார்களை உருவாக்கும் பணியில் காட்சி ஊடகம் தகுந்த தன்மைகளையும் யுத்திகளையும் பயன்படுத்தி தனது உண்மையான இருத்தலையும் இலக்கணத்தையும் நிரூபிக்க வேண்டியது மிகமிக அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
No comments:
Post a Comment