Wednesday, September 29, 2010

சாதிய இந்தியா - 4 (தாழ்த்தப்பட்டவர்களின் இழிபெயர்கள்)

ஆதிக்க சாதியினர் தங்களுக்கு அதிகாரத் தொனியில் அழகழகாக பெயர் வைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் விரும்பியவாறெல்லாம் இழிவாகப் பெயரிட்டனர். தங்களுக்கென்று தாங்களே ஒரு பெயர் சூட்டிக் கொள்ளக்கூட முடியாதபடி மழுங்கடிக்கப்பட்ட இனம் இந்த தாழ்த்தப்பட்ட இனம். இவர்களை எப்படி அழைப்பது?
வருணாசிரமப் பட்டியலில் இவர்கள் அவர்ணர்கள், நிறமற்றவர்கள், தீணடத்தகாதவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டனர். 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இவர்களுக்கு 'சுத்தமற்ற சாதிகள்' என்று பெயர் சூட்டியது. 1921 ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்களை 'அழுத்தப்பட்ட இனம்' என்றழைத்தது. 1931 கணக்கெடுப்பு இவர்களை 'புறசாதியினர'; என்றுக் குறிப்பிட்டது. சாதிப் படிநிலையமைப்பில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட தகுதியில்லாதவர்கள் என்ற போக்கு இந்தப் பெயரில் வெளிப்பட்டது. 1936 - ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 'பட்டியல் சாதியினர்' என்று அழைக்கப்பட்டனர் தீண்டப்படக் கூடாதவர்கள் என்ற இந்தப் பட்டியலில் 429 சாதிகள் அடங்கும். அதாவது 60 மில்லியன் இந்தியர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று இந்தப் பட்டியல் வரையறுத்தது. 1950 ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினர் என்ற பெயரே தக்கவைக்கப்பட்டது.

இவற்றைத் தவிர்த்து பல தனிநபர்களும் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டினார்கள். குறிப்பாக, காந்தி இம்மக்களை அரிஜனங்கள் (கடவுளின் பிள்ளைகள்) என்றழைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பெயரைக் குறித்து தங்கள் அதிருப்தியை இன்றையக் காலக்கட்டத்தில் பெருமளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், கோவிலில் இருந்த பார்ப்பனக் குருக்களுக்கு தேவதாசிகள் பெற்றெடுத்தப் பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகள் எனப்பட்டனர். இத்தகைய தேவதாசி (தேவடியாள்) முறைக்குப் பெயர்போன இந்தியாவில், குறிப்பிட்ட மக்களினங்களை தேவனுடையப் பிள்ளைகள் என்று சொல்லும்போது அவர்களை 'தேவடியாப் பிள்ளைகள்' என்று காந்தி சொல்கிறாரா என்று விமர்சனங்கள் எழுகின்றன. தாங்கள் அரிஜனங்கள் என்று அழைக்கப்பட விரும்பாத இந்த மக்கள் தங்களது நிலையைத் தெளிவாக விளக்க 'தலித்' என்ற பெயரைப் பெருமளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment