இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கவனமாக தாழ்த்தப்பட்ட மக்களை ஓரங்கட்டுவதை அதன் அதிகாரப் படிநிலைகளில் காணலாம். இந்தப் போக்கு இந்திய நிலபிரபுத்துவத்தையும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தையும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. 1991 ல் இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேராயர் ஜார்ஜ் சுர் பின்வருமாறுக் குறிப்பிட்டார். 'தென்னிந்தியாவில், 10 மில்லியன் கிறித்தவர்களில் 65 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த போதிலும் 4 சதவிகிதப் பங்குகளே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தக் குருக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில், 13 கத்தேலிக்க ஆயர்களில் எவரும் தலித் கிடையாது. மறைமாவட்ட முதன்மைக் குரு, குருமட அதிபர்கள், சமூக சேவை மையங்களின் பொறுப்பாளர்கள் இவர்களிலும் மேற்கூறப்பட்ட நிலையே நிலவுகிறது.'
1995 மற்றும் 1998 களில் குரியன் என்பவரால் தலித் கிறித்தவர்கள் அதிகம் வாழுகின்ற இரண்டு கத்தோலிக்க மறைமாவட்டங்களில் (விஜயபுரம் மற்றும் பலாய்) நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மறைமாவட்டங்களின் நிர்வாகத்திலும் தலித் கிறித்தவர்களின் பங்கு மிகக் குறைவாகவேக் காணப்பட்டது கண்டறியப்பட்டது. தலித் சமூகத்தைச் சார்ந்த குருவானவர்களை அங்குப் பார்ப்பதும் அரிதாக இருந்தது. பலாய் மறைமாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த குரு எவருமே இல்லை. இது குருத்துவ நிலைக்கு ஆளெடுக்கும் அழைத்தல் முகாம்கள் மீது ஆழமானக் கேள்விகளை எழுப்புகிறது.
கிறித்தவ நிறுவனங்கள் தங்கள் புதிய கல்விமுறைகளால் ஆதிக்க சாதியினருக்கே கல்வித் தளத்தை பெருமளவில் தாரைவார்த்துவிட்டன. தாழ்த்தப்பட்ட, கடைநிலை சாதியினருக்கு கல்வியைக் கொண்டு சேர்ப்பதில் அதிக அளவில் உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
தலித் கிறித்தவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவமானமும் அடக்குமுறைகளும் கிறித்தவர்கள் மத்தியில் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் சிலுவைப் பாடுகள். இந்தியாவில் உள்ள மொத்தக் கிறித்தவர்களில் 75 விழுக்காடும், கத்தோலிக்கத் திருச்சபையில் ஏறத்தாழ 65 விழுக்காடும் தலித் கிறித்தவர்கள் உள்ளனர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதையின் மிகச் சிறந்த உதாரணம் தலித் கிறித்தவர்களே. ஆம், இந்து சமயத்தில் மனித மாண்பிழந்து அடிமைகளாய் கிடந்தவர்கள் விடுதலை வாழ்வை நம்பி கிறித்தவத்திற்கு கரைசேர்ந்த பின்னும் கிறித்தவத்திலும் இழிசாதியினர் என்ற முத்திரை தாங்கி அவமானத்தோடும் அவலத்தோடும் நடைபிணம் போல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆதிக்கக் கிறித்தவர்கள் தங்கள் கிறித்தவப் பெயருக்குப் பின் சாதிப் பெயரையும் குறிப்பிடுவதன் மூலம் நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கிடையாது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி சாதி உயர்நிலையினை நிலைநாட்டிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்களது சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டிருக்கலாம் என்றவாறு தங்களது சாதிப் பெயர்களின் மூலங்களை துருவித் துருவி ஆராய்ந்து நாங்களும் உயர்ந்தவர்களே, எங்கள் முன்னோரும் சமூக உயர்நிலையில் வாழ்ந்தவர்களே என்று பெருமைப்பட்டுக்கொள்ளத் துடிக்கிறார்கள். இது தங்களையும் உயர்த்;திக் கொண்ட சாதியினரின் வரிசையில் இனங்கண்டு கொண்டு மகிழ்வடையும் ஒருவகையான அணுகுமுறையே அல்லாமல் அடிப்படையில் உயர்வு- தாழ்வு என்ற அநீதத்தை சீண்டிப் பார்க்காமல் விட்டுவிடுகிறது.
சாதிக் கிறித்தவர்கள் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை 'சோற்றுக் கிறித்தவர்கள்' என இழிவாகக் கருதுகின்றனர். இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கைத் தெளிவினால் அல்ல, பொருட்களுக்காகவே தாழ்ததப்பட்டவர்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினார்கள் என உயர்த்திக் கொண்ட சாதியினர் பழிசுமத்துகின்றனர். தங்கள் சமூக நிலையை உயர்த்தவே இவர்களெல்லாம் மதம் மாறினார்கள் என்று குறைச்சொல்லப்படுகிறார்கள். இத்தகைய அவதூறுகள் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. இத்தகைய வேற்றுமை அடுத்திருக்கும் கிறித்தவரோடு நாம் கொள்ளும் உறவைப் பாதிக்கிறது. மதம் மாறினால் சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்பி மதம் மாறிய தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'மதமாற்றம் தீண்டத்தகாதவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வராது' என அம்பேத்கார் கூறியிருப்பது, தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் மட்டில் உண்மையாகிப் போனது.
No comments:
Post a Comment