இந்தியாவிலேயேத் தோன்றிய, சமணமும், பௌத்தமும், பல சித்தர்களும,; சித்தாந்தங்களும் சாதியப் பாகுபாடுகளைக் கேள்விக்குட்படுத்தியதால் இருந்த இடம் தெரியாமல் துரத்தியடிக்கப்பட்டன. இந்த நிலையில், வெளியிலிருந்து குடியேறிய கிறித்தவம் தனது இருத்தலை இன்றுவரை இந்தச் சாதிய இந்தியாவில் தக்கவைத்துக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன? கல்வித்துறை, மருத்துவத்துறைப் போன்ற பல்வேறுத் துறைகளிலும் மற்றெல்லா சமயங்களையும் விட இன்றளவும் இந்த சாதிய இந்தியவில் கிறித்தவம் ஓங்கி நிற்கமுடிகிறது என்பதன் பின்னணிதான் என்ன? இந்தக் கேள்விகளின் தேடலில், கிறித்தவம் காலங்காலமாக சாதியத்தோடு கரம் கோர்த்து பயணித்து வருவதன் மெய்மைகள் நமக்கு விளங்கும்.
சுமார் 3500 ஆண்டுகளாக இந்திய மண்ணை சாதிப் புண்ணால் கறைபடுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சாதியத்துக்கும் கிடைத்த இன்னொரு அடிமை கிறித்தவம். சமத்துவத்தின் நற்செய்தியை வார்த்தையாலும் வாழ்க்கையாலும் ஆணித்தரமாக முழக்கமிட்ட இயேசுவின் பதிலாளாக விளங்க வேண்டியக் கிறித்தவம் இந்தியாவில் சாதிக் கட்டமைப்போடு கூட்டணி அமைத்துக் கொண்டு, இன்னொரு ஜென்மப் பாவத்தை தன்மேல் சுமத்தியுள்ளது. சாதியின் முன் கிறித்தவம் தலைவணங்கி நிற்கிறது.
No comments:
Post a Comment