Sunday, November 14, 2010

பெற்றோர் பேறுபெற்றோர் (Blessed are our Parents)

             
நம்மை இந்த உலகில் மிக அதிகமாக அன்பு செய்கிறவர்கள் யார்
தெரியுமா? நமது பெற்றோர்கள்தாம். மிக சிலருடைய வாழ்வில் மட்டுமே இது ஒரு விதிவிலக்காக இருக்கலாம். நமது துன்பத்திலும் இன்பத்திலும் நம்மைவிட அதிகம் அக்கறை காட்டுபவர்கள் நமது பெற்றோர்களே. நம் தாயின் கருவறையில் எறக்குறைய பத்து மாதங்கள் நாம் தங்கியிருந்தோம் என்ற உணர்வு நம்மை மெய்சிலர்க்க வைக்கிறது. தனது உதிரத்தை பாலாக்கி பாசத்தோடு நம் தாய் ஊட்டினார் என்ற உண்மை நம்மை பரவசப்படுத்துகிறது. நம்மை அன்போடு
கையிலெடுத்து முத்தமழை பொழிந்து, நமக்காக தன்னை அல்லும்பகலும் வருத்தி உழைத்து, பல தியாகங்கள் செய்தார் நமது தந்தை என்பதை நினைக்கையில் உள்ளம் சிலிர்க்கிறது.
           நம்மை உயிருக்கு உயிராய் நேசிக்கும் பெற்றொர்களை மதிப்பதும் பேணுவதும் நமது தலையாய கடமையல்லவா? ஆனால் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்தங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. பெற்றோர்களை திட்டித் தீர்ப்பதும், எட்டி உதைப்பதும், அநாதைகளாக கைவிடுவதும் இன்று அதிகம். 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம்... ஆனால் அன்னை இருப்பதோ அநாதை இல்லம்' என்ற அழகிய கவிதை வரிகள் இன்றைய எதார்த்தத்தை ஆழமாக எடுத்தியம்புகின்றன. படித்தவர்கள் மத்தியில்தான் பெற்றோர்களை அவமதிப்பதும் கைவிடுவதும் அதிகமாகக் காணப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். முதியோர் இல்லங்களுக்கு சென்று பாருங்கள். அங்குள்ள தாய் தந்தையரின் கண்ணீர் கதைகளில் உருகாத மனமும்
உருகும். வயதாகிவிட்டதால் பெற்றொர்கள் நமக்கு ஓர் சுமை. நோயுற்றிருப்பதால் அவர்கள் நமக்கு ஒரு செலவு. சொத்து ஏதும் சேர்த்து வைக்காததால் அவர்கள் ஒரு பாரம். அழகாக இல்லாததால் அவர்கள் ஓர் அவமானம். படிக்காததால் நாகரீகம் அறியாதவர்கள். மனைவி சொல்லுவதால் அவர்கள் நமக்கு ஓர் தலைவலி. இவ்வாறெல்லாம் எண்ணப்பட்டு ஓரங்கட்டப்படும் பெற்றோர்கள் இன்று ஏராளம்.
         சிவகங்கை மாவட்டம் கோமகோட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த அருள் என்பவரின் தாயார் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். அருளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அன்றாடக் கூலி வேலைக்கு செல்லும் இவர் ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு பல்துலக்கிவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு வேலைக்கு செல்கிறார். சலித்துக் கொள்ளாமலும், முணுமுணுக்காமலும் தனது தாய்க்கு இந்த பணிவிடையை பல ஆண்டுகளாக அன்போடு செய்து வருகிறார். இப்படி ஓர் மகனைப் பெற அந்த தாய் என்ன தவம் செய்தாரோ என்று அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வியப்படைகின்றனர். நாமும் வியப்படைகிறோம் அல்லவா!
நீங்க என்ன நினைக்கிறீங்க?


 உங்கள் பெற்றோரை பாராட்டி பேசச்சொன்னால் நீங்கள் என்ன பேசுவீர்கள்?
 நாம் நமது பெற்றோரை ஏன் பேண வேண்டும்?
 நமது பெற்றோர்கள் மனங்குளிர என்னென்ன செய்யலாம்?

சுயபுத்தி – விலைமதிப்பற்றது (Your reason)

           
 மற்ற விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்று கேட்டால், 'சிந்திக்கும் ஆற்றல்' அல்லது 'ஆறாவது அறிவு' என்று பதில் சொல்லுவோம். இதனால், மனிதர்கள் ஒரு காரியத்தை செய்யும்போது சுயபுத்தியோடு செயல்பட  வேண்டுமென்பது இயல்பாக எழும் ஓர் எதிர்பார்ப்பு. ஏதாவது தவறுகள் நடந்துவிடும்போது அவனாலதான் அல்லது அவளாலதான் இப்படி நடந்தது என்று பிறர்மீது பழிபோடும்போது 'சரி... உன் சுயபுத்தி எங்கே போச்சு?' என்று பிறர் நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
         
ஒரு குருவும் அவரது சீடர்களும் குதிரையில் சென்று கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் குரு குதிரையை நிறுத்திவிட்டு 'எனது பை கீழே விழுந்ததை யாரும் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு சீடர்கள், 'ஆம் குருவே... நாம் அந்த நதிக்கரை வளைவில் வந்து கொண்டிருந்தபோது உங்களது பை கீழே விழுந்தது' என்றனர். 'ஏன் யாரும் அதை எடுக்கவில்லை?' என்றார் குரு. 'ஏதாவது கீழே விழுந்தால் எடுக்க வேண்டுமென்று நீர்தாம் எங்களுக்கு கட்டளையிடவில்லையே. நீர் சொல்லாததை செய்ய நாங்கள் என்ன முட்டாள்களா?' என்றனர். 'சரி இனி ஏதாவது கீழே விழுந்தால் எடுங்கள்' என்று குரு சொல்ல பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சற்று தூரம் சென்றவுடன் குரு குதிரையை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தார். பின்னால் வந்துகொண்டிருந்த சீடர்கள் எவரையுமே காணோம். குழப்பமடைந்தவர் வந்த வழியே திரும்பிச் சென்றபோது அதிர்ச்சியடைந்தார். சீடர்கள் அனைவரும் குதிரையை நிறுத்திவிட்டு வழிநெடுக குதிரைகள் போட்ட சாணத்தை அள்ளிக் கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த குரு 'இதெல்லாம் என்ன?' என்று கேட்டார். 'நீர்தானே கீழே ஏதாவது விழுந்தால் எடுக்க வேண்டும் என்று கட்டளையீட்டீர்' என்றனர். குருவுக்கு கோபம் தலைக்கேறியது. சீடர்களை ஒருமுறை எரிச்சலுடன் முறைத்துப் பார்ததுவிட்டு, 'அதோ தெரிகிறதே அதுதான் நாம் செல்ல வேண்டிய மலை. நீங்கள் எல்லோரும் முன்னே செல்லுங்கள். நான் பின் தொடர்ந்து வருவேன். ஏதாவது விழுந்தால் நானே பார்த்துக் கொள்கிறேன்' என்றார். சற்று தூரம் சென்றதும் குதிரையின் கால்
 இடறவே குரு ஐயோ என்று கத்தியவாறே கீழே விழுந்தார். சீடர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவுமில்லை. அவரை தூக்கிவிடவுமில்லை. அவர்தான் பார்த்துக்கொள்வாரே என்ற எண்ணம் அவர்களிடத்தில்.
           தங்களின் சுயபுத்தியை பயன்படுத்தாத நபர்களாக இந்த சீடர்களை நாம் இனங்கண்டு கொள்ளலாம். யாராவது ஏதாவது சொன்னால் அதன்படி செய்வோம். நாங்களாக எதையும் சிந்தித்து செய்யமாட்டோம் என்ற தவறான மனநிலை இது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 சுயமாக சிந்தித்து சாதித்த அனுபவம் ஏதேனும் உண்டா?
 சுயபுத்தியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
 சுயபுத்தியை எவ்வாறெல்லாம் வளர்த்தெடுக்கலாம்?

Saturday, November 13, 2010

கவனச் சிதறல் - கவனியுங்கள் (Distraction)

             
குரு ஒருவர் கோவிலில் போதித்துக் கொண்டிருந்தார். அவரது நீளமான, வெளிறிய தாடியை தடிவிக்கொண்டே, தலையை ஆட்டிஆட்டி பரவசத்தோடு போதித்துக் கொண்டிருந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியின் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. அந்த குருவானவரை உற்றுக் கவனித்தபடியே அந்த பாட்டி அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்த குருவின் மனதில் பல எண்ணங்கள் ஊசலாடின. 'இந்த பாட்டி ஏன் அழுது கொண்டிருக்கிறார்? எனது போதனை அவரது மனதை ஆழமாக உருக்கிவிட்டதோ! கடவுளே நன்றி! இந்த பாட்டியின் உள்ளத்தை எனது போதனையால் நீர் கவர்ந்துவிட்டீர்' என்றவாறு பலவகையான எண்ணங்கள் அவருக்குள் உருண்டோட, தொடர்ந்து போதித்துக் கொண்டேயிருந்தார். போதனை முடிந்ததும் மக்கள் கூட்டம் கோயிலிலிருந்து கலையத் தொடங்கியது. குருவானவர் அவசர அவசரமாக, ஆவலோடு அந்த பாட்டியை தேடிச்சென்றார். 'பாட்டி ஏன் நீங்க அழுதுகிட்டே இருந்தீங்க' என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி, 'சாமி... நீங்க உங்க நீளமான தாடியை தடவிக்கிட்டே தலையை ஆட்டிஆட்டி பேசும்போது இரண்டு நாளுக்கு முன்னால காணாமப்போன என் ஆடு நியாபகத்துக்கு வந்திருச்சு. நல்ல கொழுத்த ஆடு சாமி... அது தலையை ஆட்டியாட்டி நடந்து வரும்போது அப்படியொரு அழகு சாமி... உங்களைப் பார்த்ததும் அது நியாபகம் வந்திருச்சு. அதனாலதான் அழுக வந்திருச்சு' என்றார். 'அப்போ நான் போதிச்சதைக் கேட்டு நீங்க அழவில்லையா?' என்று குரு மனம் நொந்து போனார்.
        
 நாமும் பலநேரங்களில் இந்த பாட்டியைப் போலத்தான். உற்றுக்கவனிப்பதுபோல பாவனை செய்து கொண்டு வேறொரு சிந்தனை வானில் சிறகடித்துக் கொண்டிருப்போம். கண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்குள் அறையில் அமர்ந்துகொண்டே கற்பனை என்ற ராக்கெட்டில் உலகையே பலமுறை சுற்றி வந்துவிடுகிறோம். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது ஒரு கிளையில் இருக்க விரும்பாமல் பல கிளைகளுக்கும் தாவிக் கொண்டேயிருக்கும்.
            
 இன்று... இங்கே... இப்போது... இந்த நிமிடம்... இந்த நொடி... இதை கவனி... முழுமையாக கவனி... என்று ஜென் எனப்படும் தியானம் வலியுறுத்துகிறது. நாம் பல நேரங்களில் கடந்தகால அனுபவங்களிலும் எதிர்கால கனவுகளிலும் மூழ்கிவிடுகிறோம். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கவனச்சிதறல் அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்வேறு காரியங்களில் மனதைச் செலுத்தி ஒரு வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் பலர் தடுமாறுகின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 கவனச் சிதறலுக்கான காரணங்கள் என்னென்ன?
 கவனச் சிதறலால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறோம்?
 கவனச் சிதறலை தவிர்க்க முடியுமா? என்னென்ன வழிகளில்?

குறைச்சொல்வதை குறைப்போமா? (Hello...Appreciate)

 'குறை எப்போதும் பிறரை குறைச் சொல்லிக் கொண்ட இருக்கும்'
                                                                                                                    - பரதேசி பீட்டர்

              சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறைச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 'எனது பக்கத்து விட்டுக்காரி சரியில்லை, என்னோடு படிக்கின்ற அந்தப் பையன் ரொம்ப மோசமானவன், எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியாது, அவங்க குடும்பமே அப்படித்தான்' என்று  யாரையாவது எதையாவது  குறைச்சொல்லிக் கொண்டிருப்பதே சிலரது பொழுதுபோக்கு.
         
 தத்துவயியலாளரான சார்த்தர் என்பவர் 'அடுத்தவன் ஒரு நரகம்' என்று பிறரைக் குறித்து இழிவாகக் கூறினார். புத்தரை ஓர் இளைஞன் 'நீ ஒரு முட்டாள்' என்று கேவலமாகத் திட்டி அவர்மீது காறி உமிழ்ந்தான். 'காந்தி ஒரு நாகரீகமற்ற அரைநிர்வாணி' என்று அமெரிக்க அதிபர் ஒருவர் அவமானப்படுத்திப் பேசினார். இவ்வாறு, படித்தவர் முதல் படிக்காத பாமரர் வரை பிறரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
                 
நாமும் பல நேரங்களில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்போம். இரண்டு மூன்று பெண்கள் கூடியிருந்து பேசத்தொடங்கினாலே அடுத்த வீட்டுக் கதைதான் அங்கு பேசப்படும் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது பலநேரங்களில் உண்மையாவதுமுண்டு. 'அட அவன் அப்படி...   ஐயோ இவள் இப்படி...' என்று வாய்க்கு வந்தபடி குறை சொல்லிவிடுகிறோம். அடுத்த கணமே நாம் குறைசொன்ன நபர் அந்த பக்கம் தற்செயலாக வந்துவிட்டால், 'வாங்க வாங்க எப்படி நல்லா இருக்கீங்களா? என்ன உடம்பு ரொம்ப இளைச்சு போயிடுச்சு? இந்தப் பக்கமே வரமாட்டேங்கிறீங்க. எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?' என்று புன்னகைப் பொங்க அன்பு வார்த்தைகளை அப்படியே அள்ளி வீசுவோம்.
                
யாரிடம்தான் குறையில்லை? யாரிடம்தான் பலவீனமில்லை? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா? நான் தவறே செய்வதில்லையா? என்று திறந்த மனதுடன் நம்மையே கேட்டுப் பார்ப்போம். அடுத்த மனிதரிடம் நல்ல குணங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி தாராளமாகவும் ஏராளமாகவும் பேசுவோம். அடுத்தவரின் நல்ல குணங்களை நம் கண்கள் நன்றாகப் பார்க்கட்டும். அடுத்தவரை பற்றி நல்லது பேசுவதால் நாம் எதையும் இழந்துவிடப்போவதில்லை. பிறர் நம்மை வெறுத்தாலும், பழித்தாலும். காயப்படுத்தினாலும், காறி உமிழ்ந்தாலும், ஏன் சிலுவையிலேயே அறைந்தாலும் அவர்களை குறைச் சொல்வதை விட மனதார மன்னித்து ஏற்றுக் கொள்வதே சிறந்தது. பல நல்ல மனிதர்கள் அதைத்தான் செய்தார்கள்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 அடுத்தவரைக் குறைசொல்லும் உங்களிடமும் குறைகள் உண்டு என்பதை உணர்கிறீர்களா?
 பிறரை குறைச்சொல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
 பிறரை திருத்துவதற்கு குறைச்சொல்வதுதான் வழியா? வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன?

நாமும் இவர்களைப் போல் வாழலாமே (Inspire Before You Expire)

           உங்களுக்குப் பிடித்த சில நல்ல மனிதர்களை கொஞ்ச நேரம் அமைதியாக நினைத்துக் கொள்ளுங்களேன். எடுத்துக்காட்டாக, அன்னைத் தெரசா, காந்தியடிகள், பெரியார், அம்பேத்கார், மேதா பட்கர், நெல்சன் மண்டேலா... நமக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இந்த நல்ல மனிதர்களை நன்றாகப் பிடிக்கிறது. நிறைய பேருக்கு இவர்கள் மீது அன்பும் மதிப்பும் மரியாதையும் பாசமும் இருக்கிறது. ஏன் இவர்களை மட்டும் நல்லவர்கள், தியாகிகள், தலைவர்கள், புனிதர்கள் என்று எல்லோரும் கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எப்போதாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
            
இந்த நல்ல மனிதர்களெல்லாம் பிறர்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். அதற்காக தங்கள் வாழ்வின் சுகபோகங்களையும், நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தவர்கள். நான் இந்த சமூகத்திற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஒவ்வொருநாளும் ஏங்கியவர்கள். எதற்கெடுத்தாலும் நான், எனது பெற்றோர், என்னுடைய சகோதர சகோதரிகள், எனது உறவினர்கள், என்னுடைய சாதியினர், எனது சமயத்தினர் என்று சுயநலத்தோடு மட்டுமே சிந்திக்காமல் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். நான்தான் எல்லோரையும் விட பெரியவன்  என்று நினைக்காமல் எல்லோரையும் அன்போடு அரவணைத்தவர்கள். பிறருக்கு ஏதாவது துன்பம் வருகின்றபோது ஓடிச் சென்று உதவி செய்தவர்கள். யாராவது மற்றவருக்கு அநீதி இழைக்கும்போது செய்தால் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தைரியமாக தட்டிக் கேட்டவர்கள். அநீதிகளைத் தட்டிக் கேட்டு அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள்.
            
 உதாரணமாக, நெல்சன் மண்டேலா அவர்களை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தனது சொந்த மண்ணான தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஒவ்வொருநாளும் துடிதுடித்துப் போனார். தென்னாப்பிரிக்காவில் 87 சதவீதம் இருக்கும் கறுப்பின மக்களை வெறும் 13 சதவீதமே வாழும் வெள்ளையர்கள் கொடுமைப்படுத்தினர். இந்தச் சூழலில், தனது நாட்டை எப்படியாவது வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று மண்டேலா முடிவு செய்தார். கறுப்பின மக்களின் நிலங்களை அபகரித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் அவலம் ஒழிய வேண்டும் என்று முழங்கினார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 25 ஆண்டுகள் சிறையிலே ஆயுள்கைதியாக தண்டனை அனுபவித்தார். சிறையிலே அடி, உதை, கடுமையான வேலை, அவமதிப்பு என்று பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இவையெல்லாம் தனக்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ அல்ல தனது நாட்டிற்காக அவர் அனுபவித்தார்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 இந்த நல்ல மனிதர்களைப் போல் வாழ உனக்கு ஆசை இருக்கிறதா?
 எல்லோருக்கும் நல்லது செய்யும் நல்ல எண்ணம் உன்னிடம் இருக்கிறதா?
 பிறருக்காக நீ செய்த உதவிகள் சிலவற்றைக் கூற முடியுமா?
 இந்த சமூகத்திற்கு நீ என்னென்ன நன்மைகளையெல்லாம் இந்த வயதில் செய்ய முடியும்?

தொலைக்காட்சி – சிறார்களின் சிறைச்சாலையா? (Impact of Television)

         இன்று மக்கள் மத்தியில் தொலைக்காட்சியைப் போல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேறு எதுவும் இல்லை எனலாம். வயது வரம்பின்றி எல்லா தரப்பினரையும் அது கவர்ந்துவிட்டது. குறிப்பாக, நமது சிறார்கள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்கின்றார்கள். விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியோடுதான் அவர்களது பொழுதெல்லாம் கரைகிறது. அவர்களை குறிவைத்தே புதியபுதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாளுக்குநாள் வந்து கொண்டிருக்கின்றன.
      
ஆளுக்கொரு சினிமா ஹீரோவை பிடித்துக் கொண்டு அந்த ஹீரோவைப் போல பேசுவதும், தலை சீவுவதும், ஆடை அணிவதும், செயல்களைச் செய்வதும், மற்றவர்களோடு அந்த ஹீரோவைப் பற்றி வாக்குவாதம் செய்வதும் சிறார்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. ஹீரோ என்றால் மற்றவர்களை எப்படியாவது அடித்து வீழ்த்தி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தனையை தொலைக்காட்சி சிறார்கள் மனதில் வேரூன்ற செய்வதால் அவர்கள் முரட்டுக் குணம் படைத்தவர்களாகவும், தங்களால் முடியாததைக் குறித்து தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
            
தொலைக்காட்சியால் நமது சிறார்கள் பல்வேறு உறவுச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிற்கு மாமா, சித்தி, பாட்டி என்று யாராவது வந்துவிட்டால் சிறார்கள் அவர்களை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வது வழக்கம். இப்போதோ, யார் வந்தாலும் எனக்கென்ன என்று ரீமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியிலேயே கண்களை பதித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் ஏதாவது வேலைச்செய்ய சொல்லிவிட்டால் எளிதில் எரிச்சல் அடைந்து விடுகிறார்கள். தனக்கு விருப்பமான அலைவரிசையை வைக்கவேண்டும் என்று சிறார்கள் தங்களுக்குள்ளே ஓயாமல் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள்.
            
தொலைக்காட்சி தரும் ஆச்சரியமும், பயமும், வன்முறையும் நிறைந்த மாயாஜாலக் காட்சிகளை எதார்த்தமாக நினைத்துக் கொண்டு தாங்களும் அதே போல் செய்ய வேண்டும் என்ற தீராத மயக்கத்தில் இன்றைய சிறார்கள் உள்ளனர். இதனால் நடந்தேறும் விபரீதங்கள் கொஞ்சமல்ல. 1999 ம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் 30 க்கும் மேற்பட்ட சிறார்கள் அன்றைய சாகச வீரனான சக்திமானைப் பின்பற்றி தீக்குளித்தல், உயரத்திலிருந்து குதித்து கை கால்களை முறித்துக் கொள்ளுதல், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு விபரீதங்களுக்கு ஆளானார்கள். 27.08.2006 அன்று மதுரையை சார்ந்த தியாகேஷ் என்ற சிறுவன் பவர் ரேஞ்சர்ஸ்களை நினைத்துக் கொண்டு தீயோடு விளையாடி உயிரை மாய்த்துக் கொண்டான்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்கள் அதிகநேரம் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?
 தொலைக்காட்சியால் வரும் நன்மைதீமைகள் என்னென்ன?
 தொலைக்காட்சியில் எவற்றை விரும்பிப் பார்க்கிறீர்கள்? ஏன்?

நான் யாராகப் போகிறேன்? (I want to Be...)

          'நீங்கள் யாராகப் போகிறீர்கள்?' என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். வகுப்பில் ஆசிரியரோ, வீட்டில் நம பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்கும்போது, 'நான் டாக்டராகப் போறேன்... இஞ்சினியராகப் போறேன்... கலெக்டராகப் போறேன்... டீச்சர் ஆகப்போறேன்' என்று விதவிதமாய் பதிலளித்திருப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு பதிலளித்ததோடு சரி. அதன்பிறகு, நாம் என்ன சொன்னோம் என்பதே நம்மில் பலருக்கு நினைவிருப்பதில்லை. ஏதோ ஒருசிலர்தான் தாங்கள் சிறுவயதில் கொண்டிருந்த குறிக்கோளைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, அருமையாக திட்டம் தீட்டி, விடாமல் முயற்சி செய்து குறிக்கோளை அடைந்து விடுகிறார்கள்.
            
அமெரிக்காவில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கனிடம் சிறுவயதிலேயே ஒரு குறிக்கோள் இருந்தது. அமெரிக்காவின் அதிபர் தங்கும் மாளிகையான வெள்ளைமாளிகையில் தானும் ஒருநாள் அதிபராக அமர்ந்து, மக்களுக்கு சேவை செய்வேன் என்பதே அவரது சிறுவயது குறிக்கோள். அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு அவரின் இந்த குறிக்கோள் மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால், லிங்கன் தனது குறிக்கோளில் மிகவும் உறுதியாயிருந்தார். வீட்டின் மிகவும் ஏழ்மையான சூழலிலும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் கடினப்பட்டுப் படித்து முன்னேறினார். தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் தொடர்ந்து படுதோல்வியடைந்தார். இருப்பினும், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டேயிருந்தார். ஆம். அந்த நாள் வந்தது. தான் நினைத்ததுபோலவே அதிபராகி வெள்ளைமாளிகையில் போய் அமர்ந்தார். கறுப்பின மக்களுக்காக அளப்பரிய பணிகளை செய்து எல்லோருடைய மனதிலும் நீங்காத  இடத்தையும் பெற்றுவிட்டார்.
             
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள் என்று பிறர் நம்மிடம் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும். 'நான் யாராகப் போகிறேன்?' என்ற கேள்வியை நாம் என்றாவது நம்மிடம் கேட்டு;ப் பார்த்திருக்கின்றோமா? ஏதோ நாமும் பிறந்தோம்... ஜாலியாக இருந்தோம்... இறந்தோம் என்று வாழ்வை வீணடிக்கப்போகிறோமா?
        
சிலரிடம் குறிக்கோள்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆயிரம் குறிக்கோள்கள் அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. ஆனால், அதனை அடைவதற்கான வேகம், விவேகம், கடின உழைப்பு, மனஉறுதி காணப்படுவதில்லை. அதனால்தான் லிங்கனைப்போல் நம்மால் குறிக்கோளை அடையமுடிவதில்லை.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 'நான் யாராகப் போகிறேன்?' என்ற தெளிவு உங்களிடம் இருக்கிறதா? யாராகப் போகிறீர்கள்?
 அந்த இலக்கை அடைய என்னென்ன முயற்சிகளை இதுவரை மேற்கொண்டிருக்கிறீர்கள்?
 நமது எந்தவொரு இலக்கும் சமூக நலனுக்காகவே என்பது சரியா?

உணவுப் பழக்கம் – கொல்லவும் செய்யும் (Food Habits)

        
காலச்சூழலுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கவழக்கமும் மாறிக்கொண்டே வருகிறது. மேலை நாடுகளின் உணவுப் பழக்கவழக்கத்தை நாம் அப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாகரீகம், பேஷன். பாஸ்ட் புட் என்ற பெயரில் எதையெதையோ சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஐஸ் கிரீம், பப்ஸ், நூடுல்ஸ், கட்லட், மாகி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பிச் சாப்பிடுவதால் ஒரு நோயாளிச் சமூகம் ஏற்கெனவே உருவாகிவிட்டது.
        
குழந்தைகள் தங்கள் வயதுக்கு மிஞ்சிய உடல்பருமனைப் பெற்று தங்களது சகநண்பர்களின் கேலிப்பேச்சுகளுக்கு உள்ளாகின்றனர். ஓயாமல் நொறுக்குத் தீனிகளைத் தின்று பலவிதமான உடல்நோய்களுக்கு ஆளாகின்றனர். இயற்கையான இளநீர், கஞ்சித் தண்ணீர், சுக்கு நீர் இவற்றை ஓரங்கட்டிவிட்டு டீ, காப்பி, செவன் அப், கொக்ககோலா, மிராண்டா, பீர் என்று செயற்கைக்கு மாறிவிட்டோம். இவை கொஞ்சம் கொஞ்சமாக நமது சிறுநீரகத்தையும், கல்லீரலையும், சிறுகுடலையும் பெருங்குடலையும், கணையத்தையும் செல்லரிக்க செய்துவிடுகின்றன. யாராவது ஆசிட்டை காசுகொடுத்து வாங்கி நம்மீது ஊற்றிக்கொள்வோமா? நம் உடல் வெந்துப் புண்ணாகி வேதனையில் துடிதுடித்து இறப்பதை நாம் விரும்புவோமா? ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய ஓர் செயலைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
      
கண்மூடித்தனமாக சாப்பிட்டுவிட்டு மிஞ்சும் கொஞ்ச காசையும் மருத்துவர்களிடம் கொண்டுக் கொட்ட வேண்டியிருக்கிறது. நடுத்தர மற்றும் வசதியான குடும்பத்தினர் ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். வீட்டில் சமைக்க விரும்பாமல் ஹோட்டல்களில் சென்று சாப்பிட தொடங்கியுள்ளனர். நகரங்களில் இந்தப் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. வாரஇறுதி நாட்களில் இத்தகைய பழக்கத்தை வளர்த்துக் கொண்டுவரும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுவையையும் மணத்தையுமே ஹோட்டல்களில் கருத்தில் கொண்டு சமைக்கின்றனர். அதற்காக, அதிகமான எண்ணெயையும், கொழுப்பு நிறைந்த பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் உடல்நலம் வெகு சீக்கிரத்தில் கெட்டுப்போய்விடுகிறது.
          
அதிகமாக கொழுப்பு நிறைந்த பொருட்களையும், நொறுக்குத் தீனிகளையும் சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி ஏதும் செய்யாமலிருப்பது உடல்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது. சாப்பிடுவதும், டி.வி பார்ப்பதுமாக பொழுதைக் கழிக்கும் சிறார்கள் வெகு சுலபமாக பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிவிடுகின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் என்னென்ன?
 எந்த வகையான உணவுகள் நமது உடலுக்கு நல்லது?
 சுவைக்காகவும் மணத்திற்காகவும் உடல்நலத்தை இழப்பது சரியா?
 உடல்நலம் கெடுவதால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம்?

பிச்சைக்காரர்களை மதிப்போம் (Respect for Beggars)


             அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளண்டன் ஒருமுறை நமது அண்டை மாநிலம் ஒன்றிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டிருந்த அந்த மாநில அரசு ஓர் இரகசிய ஆணை பிறப்பித்தது. என்ன ஆணை தெரியுமா? 'பில் கிளிண்டன் வருவதால் பிச்சைக்காரர்களையெல்லாம் சிறையிலடையுங்கள். அவர் முன்னால் நம் மானம் போய்விடக்கூடாது' என்பதுதான் அந்த ஆணை. இந்த அரசைப் போலவே நம்மில் பலருக்கும் பிச்சைக்காரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் அவமானம்... சாபக்கேடு.
        
பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில். கோவில் முற்றங்களில். தெருக்களில் பிச்சையெடுப்பவர்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். கை கால் இழந்தவர்கள், பார்வை தெரியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பலர் நம்மிடம் பிச்சைக்கேட்டு கையேந்தியிருப்பார்கள். அந்த நேரங்களில், சிலர் ஐயோ பாவம் என்று இரக்கப்பட்டு காசு போட்டிருப்போம். சிலர் ஏதோ கண்டும் காணாமலும் ஒதுங்கி போயிருப்போம். இன்னும் சிலர், 'ஏன் பிச்சையெடுக்கிற.. நல்லா உழைச்சு சாப்பிட வேண்டியதுதானே' என்று அறிவுரை மட்டும் சொல்லியிருப்போம்.
      
 பிச்சையெடுப்பவர்கள் பல காரணங்களை சொல்லி நம்மிடம் கையேந்தாலாம். ஏன் சிலர், பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் பொய் சொல்லியும் காசு வாங்கலாம். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, நம்மிடம் கையேந்துபவர்களை மதிப்போடு நடத்துவது நல்லது. அவர்களுக்கு காசு கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவமானப்படுத்துவதையும், வார்த்தைகளால் காயப்படுத்துவதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. சில டீக்கடைக்காரர்கள் சுடுதண்ணீரை அவர்கள்மேல் ஊற்றி மனிதாபிமானமில்லாமல் நடந்துகொள்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தினால் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களை மதிப்போடும் மாண்போடும் நடத்துவதில்தான் நமது மனப்பக்குவம் வெளிப்படுகிறது.
      
 விசேச நாட்களில் சில நல்லவர்கள் இவ்வாறு தெருவில் சுற்றித் திரிபவர்களையெல்லாம் அழைத்துவந்து சாப்பாடு கொடு;த்து மகிழ்வதுண்டு. மதுரையைச் சார்ந்த கல்லூரி ஒன்றின் மாணவர்கள் மிக அற்புதமான செயலை செய்திருந்தனர். என்னவென்றால், மதுரையின் சுற்றுப்புறங்களிலுள்ள பிச்சைக்காரர்களை தேடிச்சென்று, அவர்களுக்கு முடிவெட்டிக் கொடுத்து, குளிப்பாட்டி, நல்ல சாப்பாடும் கொடுத்து தங்களது மேலான சமூக அக்கறையை வெளிப்படுத்தினர். பிச்சைக்காரர்களை தரக்குறைவாக நடத்தும் மனிதர்கள் மத்தியில் அவர்களை மதிப்போடும் மாண்போடும் நடத்தும் மாணிக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 ஏன் பிச்சையெடுக்கிறார்கள்?  குழந்தைகளை ஏன் பிச்சையெடுக்க வைக்கிறார்கள்?
 உங்களிடம் கையேந்தியவர்களை நீங்கள் எப்படி நடத்தினீர்கள்?
 எந்தெந்த வழிகளில் அவர்களுக்கு உதவி செய்யலாம்?

எதை விரும்புகிறோம்? அதுபோலவே நாமும்... (You are Your Likes)

         சில செயல்களை நாம் விரும்பிச் செய்கின்றோம். சில நபர்களோடு விரும்பிச் செல்கின்றோம். சில புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் ரசித்து ருசித்து வாசிக்கின்றோம். சில காரியங்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றோம். அவை எப்படிப்பட்டவை என்பதை வைத்துக் கொண்டே நாம் எப்படிப்பட்டவர் என்பதை மிக எளிதில் சொல்லிவிட முடியும்.

நகைச்சுவை நிகழ்வுகளை அடிக்கடி பார்த்து, அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாகக் காணப்படும் வாய்ப்பு அதிகம். பாலியல் சார்ந்த விஷயங்களை மட்டுமே அடிக்கடி ஆர்வத்தோடு பார்க்கின்றவர்களிடம் தவறான கற்பனைகளும் செயல்பாடுகளும் நிரம்பிக் காணப்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
       அறிவியல் வளர்ச்சியின் காரணமாக எல்லா வகையான விஷயங்களையும் வீட்டிலிருந்து கொண்டே பார்ப்பதற்கான, கேட்பதற்கான. செய்வதற்கான வசதிகள் உருவாகிவிட்டன.
தொலைக்காட்சியும் இணையதளமும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நாம் விரும்பித்தேடும் எதையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இதில் மனப்பக்குவமுடையராக இருந்து தனக்கும் சமூகத்திற்கும் பயன்தருபவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்கலாம் அல்லது மனம் விரும்பியவாறெல்லாம் கண்டதையும் பார்த்து சிரழியவும் செய்யலாம்.     
    காந்தியடிகள் சுட்டிக்காட்டிய மூன்று குரங்கு பொம்மைகளை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? இரண்டு கண்களையும் பொத்திக்கொண்டு ஒரு பொம்மை, இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு ஒரு பொம்மை, வாயை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு மற்றொரு பொம்மை. சில விஷயங்களை பார்க்காமலும், சிலவற்றைக் கேட்காமலும், இன்னும் சிலவற்றைப் பற்றி அறவே பேசாமலும் இருப்பது நல்லது என்ற பாடத்தை காந்தியடிகள் அந்த பொம்மைகள் வழியாக சுட்டிக்காட்டுகிறார்.
             
 'புதிய தலைமுறை' என்ற வாரஇதழ் இளைஞர்களின் தன்னம்பிக்கை, வேலைவாய்ப்பு, ஒழுக்கம், இலட்சியம் இவற்றை மையப்படுத்தி வெளிவருகிறது. இந்தப் பத்திரிக்கை துவங்கியபோது 50,000 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டது. 5 மாதங்களுக்குள்ளாக 2,00000 பிரதிகள் வெளியிடும் வகையில் இளைஞர்களின் அமோக ஆதரவு குவிந்தது. இன்று மிக அதிகமான இளைஞர்களும் மற்றவர்களும் விரும்பி வாசிக்கின்ற ஓர் இதழாக அந்த பத்திரிக்கை சிறந்து விளங்குகிறது. தரமான செய்திகளை மக்கள் எப்போதும் விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள் என்பதை 'புதிய தலைமுறை' நீரூபித்துள்ளது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்களுக்கு தெரிந்த தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளை, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளின் பெயர்களை பட்டியலிடங்கள்.
 எவற்றை நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள்?
 நாம் பார்ப்பதும், கேட்பதும், வாசிப்பதும். பேசுவதும் நம்மை எதைநோக்கி இட்டுச் செல்ல வேண்டும்?

Wednesday, November 10, 2010

வாய்ப்புகள் வானளவு (Opportunities in Plenty)

           ஆயிரமாயிரம் வாய்ப்புகள் நம் கண்முன்னே கொட்டிக்கிடக்கின்றன. உள்ளம் தெளிந்து, கண்கள் திறந்து பார்ப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்வில் முன்னேறியே தீருவேன் என்ற தாகம் கொண்டவர்கள் சிறியசிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு பெரியபெரிய சாதனைகளை படைத்து விடுகிறார்கள்.
            வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவரைப் பற்றி ஆங்கில பாடப்புத்தகத்தில் நாம் கேள்விப் பட்டிருக்கலாம். இவர் ஆங்கில நாடக இலக்கியத்திற்கு மிகவும் பெயர்போனவர். மிகப்புகழ்பெற்ற 37 நாடகங்களை எழுதி எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். ஏறக்குறைய எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இவர் எழுதிய நாடகங்கள் முக்கியமான பாடங்களாக இடம் பெற்றுள்ளன. லண்டனில் ஒரு சிற்றூரில் பிறந்த இவர் பிழைப்புத் தேடி நகரத்திற்கு வந்தார்.  நாடக அரங்கில் குதிரை வண்டிகளை காவல் காக்கின்ற வேலை கிடைத்தது. வெளியே குதிரைகளை காவல் காத்துக் கொண்டே அரங்கத்தினுள்ளே நடந்து கொண்டிருக்கும் நாடகங்களையும் கவனமாய் கேட்டுக் கொண்டிருப்பார். நாடகங்களை அவ்வாறு திரும்பத்திரும்பக் கேட்டு மனப்பாடம் ஆக்கிக்கொண்டார். ஒரு நாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. நாடகக்குழவினர் மிகவும் பதற்றமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் சென்று 'நான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்களேன்' என்று கேட்டார். நாடகக்குழவினர் முதலில் அவரை மிக ஏளனமாகப் பார்த்தாலும் வேறுவழியில்லாததால் அவரை நடிக்கவிட்டனர். மேடை ஏறிய ஷேக்ஸ்பியர் மிகப் பிரமாதமாக நடித்து அசத்திவிட்டார். நாடக்குழவினருக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை. பிறகு பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. நாடகங்களில் நடித்துக்கொண்டு, தானே பல நாடகங்களை எழுதவும் ஆரம்பித்தார். அன்று அவர் பயன்படுத்திக் கொண்ட சிறிய வாய்ப்பினால் அளவுகடந்த புகழையும் பெயரையும் பின்னாளில் சம்பாதித்துக் கொள்ள முடிந்தது.
               
 ஏழ்மையும் வறுமையும் நமது வளர்ச்சிக்கு தடையல்ல. உடல் குறைகளோ, நமது குடும்பச் சூழலோ, சாதிய நிலையோ நமது வளர்ச்சியை ஒருபோதும் தடுத்துநிறுத்த முடியாது. எல்லாச் சூழலிலும் நாம் வளர்வதற்கான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்பிக்கையிழந்து விரக்தியோடு வாழ்பவர்களின் கண்களுக்கு அந்த வாய்ப்புகள் தெரிவதில்லை. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சாதிக்க முடியாததை இன்று ஏழை விட்டு;ப் பிள்ளைகள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல திடகாத்திரமான உடலோடு இருப்பவர்கள் சாதிக்காததை இன்று மாற்றுத் திறனாளிகள் சாதித்துக் காட்டுகிறார்கள். படித்தவர்கள் செய்யத் துணியாத பல நல்ல காரியங்களை படிக்காத பாமரர்கள் எத்தனையோ வழிகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்களாக ஏதாவது வாய்ப்பைத் தேடிச்சென்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
 வாய்ப்புகள் நம்மை தேடிவரும் என்று காத்துக்கிடப்பது சரியா?
 என்னென்ன வாய்ப்புகள் நம் முன்னே கொட்டிக்கிடக்கின்றன?

கடமையும் உரிமையும் (Responsiblity and Rights)


'நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?'
- ஜான் கென்னடி
                  ஊதிய உயர்வுகோரி ஆசிரியர்கள் போராட்டம்... சாலை வசதி செய்து தரமாறு கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்... இலவச டி.வி. வழங்கப்படாத ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்... வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டம்... ஓவ்வொருநாள் செய்தித்தாளிலும் இதுபோன்ற செய்திகளை நாம் காண்கிறோம். தங்களது உரிமைகளைக் கேட்டு ஏதாவது ஒரு போராட்டம் இந்த நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கலாம்.
        உரிமைகளைக் கேட்டுப் பெறத்துடிக்கும் நம்மில் பலர் நமது கடமைகளைப் பற்றிய பேச்சை அறவே மறந்து விடுகிறோம். எதையெல்லாம் பெற்றோர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பெற்றுவிடவேண்டுமோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் நாம், நமது கடமைகளை குழிதோண்டிப் புதைத்துவிடுகிறாம். ஊதிய உயர்வுக்கோரிப் போராடும் ஆசிரியர்களில் எத்தனைபேர் தான் பொறுப்புள்ள ஓர் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற கடமையை உணர்;ந்து செயல்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அரசிடமிருந்து இலவசங்களை வாங்கிக் குவிக்க நினைக்கும் நாம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்துள்ளோமா என்ற கேள்வியை பலநேரங்களில் கேட்பதில்லை.
        
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசும்போது அதிலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி மட்டும் பேசுகிறோம். அதே அரசியலமைப்புச் சட்டத்தில்தான் ஒவ்வொரு இந்தியக்    குடிமகனு(ளு)ம் ஆற்ற வேண்டிய கடமைகளும் எழுதப்பட்டுள்ளன. அதைப்பற்றி நம்மில்  அதிகமானோர் பெரிதாகப் பேசுவதே இல்லை. சாதி, சமய, மொழி பேதங்களைக் கடந்து சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும், வன்முறைகளை தவிர்க்க வேண்டும், சுற்றுப்புறச் சூழலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும், பொதுச்சொத்துக்களை பேணிப் பாதுகாக்க வேண்டு;ம் என நமது அரசியலமைப்புச் சட்டம் நம்மிடம் எதிர்பார்க்கும் கடமைகளை எத்தனை பேர் பெரிதாக எண்ணி செயல்படுத்துகிறோம்?
             கடமைகளைச் செய்ய மனமில்லாத எவருக்கும் சலுகைகளும் உரிமைகளையும் பெறுவதற்கான தகுதியில்லை. கடமையும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். கடமையை ஆற்ற மனமில்லாதவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவது நியாயமானதே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 ஒரு மனிதருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு?
 நமக்கு வீட்டிலும், சமூகத்திலும். நாட்டிலும் என்னென்ன கடமைகள் இருக்கின்றன?
 கடமைகளை எல்லாரும் ஒழுங்காக செய்தால் நமது வீடும் நாடும் எப்படியிருக்கும்?

இழப்புகளை தாண்டி வா

               வாழ்வினில் ஏமாற்றப்படும்போதோ, இழப்புகளை சந்திக்கின்றபோதோ நம்மில் பலர் மனம் தளர்ந்து விடுகிறோம். இனி வாழ்வதில் பயனில்லை என்று நிலைகுலைந்து விடுகிறோம். உதாரணமாக, மாணவர்கiளை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலோ அல்லது தோல்வியடைந்திருந்தாலோ சில மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் அறிவோம். ஓவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை நாம் செய்தித்தாள்களில் வாசிக்க முடிகிறது.
                 
அறிவியல் உலகம் இன்றளவும் வியந்து போற்றும் மாமேதைகளில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரது ஆசிரியர் 'இவன் சரியான மரமண்டை.. எதையுமே புரிந்துகொள்ளாத உதவாக்கரை' என்ற சொல்லி பள்ளிக்கூடத்தை விட்டே  துரத்தியடித்தார். ஆனால், இதனைக்கண்டு மனமுடைந்து போகாத எடிசன் தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகையே வியக்க வைத்தார். எடிசனால் அவமானத்தைத் தாண்டி சாதிக்க முடிந்தது.

கிரிக்கெட் உலகமே வியந்து கொண்டாடுகின்ற சச்சின் தெண்டுல்கர் பத்தாம் வகுப்புத் தேல்வில் தோல்வியடைந்தவர். இன்று கிரிக்கெட் விளையாட்டில் அவர் முறியடிக்காத சாதனைகளே இல்லை என்றாகிவிட்டது. ஆம். அவரால் தோல்வியைத்தாண்டி வாழ்வில் சாதிக்க முடிந்தது. இவர்களைப் போன்று எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் தோல்விகளையும் தாண்டி சாதித்திருக்கிறார்கள்.
             மதுரை அழகர்கோவில் பகுதியைச் சார்ந்த அமுதலட்சுமி என்பவர் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு பிரச்சனைகளோடு தன்னிடம் தஞ்சமடையும் பெண்களை ஆறுதலோடு தேற்றி நல்வழிப்படுத்துகிறார். ஆனால். இவர் தனது சொந்த வாழ்விலே பல்வேறு வேதனைகளை அனுபவித்தவர். தனது கணவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்டவர். எதெற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவரால் வஞ்சிக்கப்பட்டவர்.  'ஐயோ எனக்கு மட்டும் இப்படி நடந்து விட்டதே' என்று மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கவில்லை. மாறாக, துணிவு கொண்டிருந்தார். ஆழமான தன்னம்பிக்கைக் கொண்டிருந்தார். தன்னைப்போல் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்ய முடிவுசெய்தார். இன்று அளப்பரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார். (நன்றி: தினமணி, ஆகஸ்டு 15, 2010).
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்கள் வாழ்வில் அவமானங்களும் தோல்விகளும் நிகழ்ந்ததுண்டா? என்ன செய்தீர்கள்?
 மதிப்பெண் குறைவாலும், தோல்வியுறுவதாலும் தற்கொலை முடிவுக்கு வரும் மாணவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 தோல்விகளே இல்லாத வாழ்வு என்பது சாத்தியமா?
 எந்த மாதிரியான பிரச்சனைகளை நிங்கள் சந்தித்துக் கெண்டிருக்கிறீர்கள்?