கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். பல்வேறு சமய நூல்கள், சட்டங்கள், புராணங்கள், கதைகள் என்று அயராது வாசித்தார். கற்றுத்தேர்ந்த பலரோடு கடவுள் பற்றி காரசாரமான விவாதங்களை நடத்தினார். எதிலும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஒவ்வாருநாளும் வெறுத்துப்போய் வீடு வந்துசேர்ந்தார். மனைவி பேசும்போதெல்லாம் எரிச்சல் அடைந்து விடுவார். குழந்தை அழும்போது கோபத்தில் சலித்துக் கொள்வார். கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே வீட்டிலும் ஆழ்ந்திருப்பார். ஒருநாள் தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு சிந்தனையில் தன்னையே மறந்து போயிருந்தார். குழந்தையின் மூக்கிலிருந்து சளி வழிந்து கொண்டிருந்தது. திடீரென்று தனது சட்டையில் ஈரத்தை உணர்ந்தவர் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதுபோல் மனைவியை நோக்கிக் கத்தினார். பயந்து கொண்டே வந்த மனைவி குழந்தையை அவரிடமிருந்து வாங்கினாள். தனது வாயை குழந்தையின் மூக்கில் வைத்து குழந்தைக்கு வலிக்காதவாறு சளியை உறிஞ்சினாள். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டவாறே தூக்கிச் சென்றாள். மனைவியின் இச்செயலைக் கண்ட கணவர் வெட்கித் தலைகுனிந்தார்.
நம்மில் சிலர் இப்படித்தான் கடவுள், கோயில். வழிபாடு பற்றிய சிந்தனைகளில் தீவிரமாகி சகமனிதர்களை மறந்து விடுகிறோம். கடவுளுக்கு புகழ்பாக்கள் பாடிவிட்டு பிற மனிதர்களை எளிதில் வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம்.
கடவுளை அன்பு செய்வதாகச் சொல்லிக் கொண்டு மனிதரை அன்பு செய்யாத எவரும் பொய்யர் என்று விவிலியம் எடுத்துரைக்கிறது. கடவுளை தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு பக்கத்து வீட்டுக்காரனை காலில் போட்டு மிதிக்கும் கடவுள் பக்தர்களைப் பார்த்துத்தான் 'அட.. கடவுளை மற் மனிதனை நினை' என்று பெரியார் மனம் வெதும்பி கூறினார் போலும்!
No comments:
Post a Comment