
சில செயல்களை நாம் விரும்பிச் செய்கின்றோம். சில நபர்களோடு விரும்பிச் செல்கின்றோம். சில புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் ரசித்து ருசித்து வாசிக்கின்றோம். சில காரியங்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றோம். அவை எப்படிப்பட்டவை என்பதை வைத்துக் கொண்டே நாம் எப்படிப்பட்டவர் என்பதை மிக எளிதில் சொல்லிவிட முடியும்.

நகைச்சுவை நிகழ்வுகளை அடிக்கடி பார்த்து, அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாகக் காணப்படும் வாய்ப்பு அதிகம். பாலியல் சார்ந்த விஷயங்களை மட்டுமே அடிக்கடி ஆர்வத்தோடு பார்க்கின்றவர்களிடம் தவறான கற்பனைகளும் செயல்பாடுகளும் நிரம்பிக் காணப்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக எல்லா வகையான விஷயங்களையும் வீட்டிலிருந்து கொண்டே பார்ப்பதற்கான, கேட்பதற்கான. செய்வதற்கான வசதிகள் உருவாகிவிட்டன.

தொலைக்காட்சியும் இணையதளமும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நாம் விரும்பித்தேடும் எதையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இதில் மனப்பக்குவமுடையராக இருந்து தனக்கும் சமூகத்திற்கும் பயன்தருபவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்கலாம் அல்லது மனம் விரும்பியவாறெல்லாம் கண்டதையும் பார்த்து சிரழியவும் செய்யலாம்.
காந்தியடிகள் சுட்டிக்காட்டிய மூன்று குரங்கு பொம்மைகளை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? இரண்டு கண்களையும் பொத்திக்கொண்டு ஒரு பொம்மை, இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு ஒரு பொம்மை, வாயை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு மற்றொரு பொம்மை. சில விஷயங்களை பார்க்காமலும், சிலவற்றைக் கேட்காமலும், இன்னும் சிலவற்றைப் பற்றி அறவே பேசாமலும் இருப்பது நல்லது என்ற பாடத்தை காந்தியடிகள் அந்த பொம்மைகள் வழியாக சுட்டிக்காட்டுகிறார்.

'புதிய தலைமுறை' என்ற வாரஇதழ் இளைஞர்களின் தன்னம்பிக்கை, வேலைவாய்ப்பு, ஒழுக்கம், இலட்சியம் இவற்றை மையப்படுத்தி வெளிவருகிறது. இந்தப் பத்திரிக்கை துவங்கியபோது 50,000 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டது. 5 மாதங்களுக்குள்ளாக 2,00000 பிரதிகள் வெளியிடும் வகையில் இளைஞர்களின் அமோக ஆதரவு குவிந்தது. இன்று மிக அதிகமான இளைஞர்களும் மற்றவர்களும் விரும்பி வாசிக்கின்ற ஓர் இதழாக அந்த பத்திரிக்கை சிறந்து விளங்குகிறது. தரமான செய்திகளை மக்கள் எப்போதும் விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள் என்பதை 'புதிய தலைமுறை' நீரூபித்துள்ளது.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
உங்களுக்கு தெரிந்த தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளை, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளின் பெயர்களை பட்டியலிடங்கள்.
எவற்றை நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள்?
நாம் பார்ப்பதும், கேட்பதும், வாசிப்பதும். பேசுவதும் நம்மை எதைநோக்கி இட்டுச் செல்ல வேண்டும்?
No comments:
Post a Comment