Wednesday, November 10, 2010

தவறு – யார்தான் செய்யவில்லை?

                 நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. 2006 –ம் ஆண்டில் இறுதிப் போட்டிக்கு பிரான்சு அணியும் இத்தாலி அணியும் தகுதிப்பெற்றன. இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பினை தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டியும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. திடீரென, பிரான்சு அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ஜிடேன், இத்தாலி அணி வீரர் ஒருவரோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் சூடேற ஆத்திரமடைந்த ஜிடேன் இத்தாலி அணி வீரரின் நெஞ்சில் தனது தலையால் ஓங்கி முட்டினார். விளையாட்டு அரங்கம் முழுவதும் பதற்றமடைந்தது. விளையாட்டின் ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நொந்து போயினர். மறுநாள் பத்திரிக்கைகள். தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று எல்லாம் ஜிடேன் மீது பல்வேறு விமர்சனங்கதை; தொடுத்தன. ஆனால் ஜிடேன் தனது செயலை பல காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். விமர்சனங்கள் ஓரளவுக்கு ஓய்ந்தபிறகு, அவர் தனக்குள் ஒருவகையான மௌனத்தை உணர்ந்தார். அந்த மௌனம் அவரை வேதனைக்குள்ளாக்கியது. தனது செயலை நினைத்து ஜிடேன் வருத்தமடையத் தொடங்கினார். 'அட பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்;கும்போது இவ்வளவு மோசமாக நடந்துவிட்டேனே' என்று சுயஉணர்வு பெற்றார். 'நான் அன்று நடந்துகொண்டது தவறு. தயவுசெய்து எல்லோரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எல்லாரும் ஜிடேனின் இந்த மனப்பக்குவத்தைப் பாராட்டினர்.
               தவறு செய்யாத மனிதர்களே இல்லை எனலாம். நாம் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் தவறு செய்திருக்கிறோம். 'நான் தவறு செய்ததே கிடையாது என்று சொல்பவர் பொய்யர்' என்று விவிலியம் சாடுகின்றது. சில நேரங்களில் 'நான் செய்தது தவறு' என்பதை உணர மறந்து விடுகிறோம். யாராவது நமது தவறை சுட்டிக்காட்ட நேர்ந்தால் 'நீ என்ன யோக்கியமா' என்று கேட்டு அவரை படாதபாடு படுத்திவிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் தவறு என்று தெரிந்தும் அவற்றை  திரும்பத்திரும்ப நாம் செய்கிறோம். அந்தத் தவறுகளை ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி நியாயப்படுத்தி விடுகிறோம். 'ஊர் உலகத்தில் யாரும் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன்' என்று மனசாட்சியை தொலைத்து விடுகிறோம். நமது தவறை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலும், அதை திருத்திக் கொள்வதற்கான முயற்சியும் நம்;மிடம் இருக்குமானால் நாமும் மனப்பக்குவமுடைய மனிதர்களாக வாழமுடியும். ஜிடேனைப் போல நாமும் பாராட்டப் பெறுவோம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 நீங்கள் தவறுகள் செய்தபோது உங்களிடம் இருந்த உணர்வுகள் என்னென்ன?
 உங்களது தவறை எப்போதாவது நியாப்படுத்தியது உண்டா?
 தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட அனுபவம் ஏதேனும் உங்களுக்கு உண்டா?
 நமது தவறுகளைத்  திருத்திக் கொள்ள என்னென்ன முயற்சிகளை முன்னெடுக்கலாம்?


'எல்லா தவறுகளும் நல்ல படிப்பினைகளே'

No comments:

Post a Comment