
வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவரைப் பற்றி ஆங்கில பாடப்புத்தகத்தில் நாம் கேள்விப் பட்டிருக்கலாம். இவர் ஆங்கில நாடக இலக்கியத்திற்கு மிகவும் பெயர்போனவர். மிகப்புகழ்பெற்ற 37 நாடகங்களை எழுதி எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். ஏறக்குறைய எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இவர் எழுதிய நாடகங்கள் முக்கியமான பாடங்களாக இடம் பெற்றுள்ளன. லண்டனில் ஒரு சிற்றூரில் பிறந்த இவர் பிழைப்புத் தேடி நகரத்திற்கு வந்தார். நாடக அரங்கில் குதிரை வண்டிகளை காவல் காக்கின்ற வேலை கிடைத்தது. வெளியே குதிரைகளை காவல் காத்துக் கொண்டே அரங்கத்தினுள்ளே நடந்து கொண்டிருக்கும் நாடகங்களையும் கவனமாய் கேட்டுக் கொண்டிருப்பார். நாடகங்களை அவ்வாறு திரும்பத்திரும்பக் கேட்டு மனப்பாடம் ஆக்கிக்கொண்டார். ஒரு நாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. நாடகக்குழவினர் மிகவும் பதற்றமாக இருந்தபோது ஷேக்ஸ்பியர் சென்று 'நான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்களேன்' என்று கேட்டார். நாடகக்குழவினர் முதலில் அவரை மிக ஏளனமாகப் பார்த்தாலும் வேறுவழியில்லாததால் அவரை நடிக்கவிட்டனர். மேடை ஏறிய ஷேக்ஸ்பியர் மிகப் பிரமாதமாக நடித்து அசத்திவிட்டார். நாடக்குழவினருக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை. பிறகு பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. நாடகங்களில் நடித்துக்கொண்டு, தானே பல நாடகங்களை எழுதவும் ஆரம்பித்தார். அன்று அவர் பயன்படுத்திக் கொண்ட சிறிய வாய்ப்பினால் அளவுகடந்த புகழையும் பெயரையும் பின்னாளில் சம்பாதித்துக் கொள்ள முடிந்தது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?
No comments:
Post a Comment