உங்களுக்குப் பிடித்த சில நல்ல மனிதர்களை கொஞ்ச நேரம் அமைதியாக நினைத்துக் கொள்ளுங்களேன். எடுத்துக்காட்டாக, அன்னைத் தெரசா, காந்தியடிகள், பெரியார், அம்பேத்கார், மேதா பட்கர், நெல்சன் மண்டேலா... நமக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இந்த நல்ல மனிதர்களை நன்றாகப் பிடிக்கிறது. நிறைய பேருக்கு இவர்கள் மீது அன்பும் மதிப்பும் மரியாதையும் பாசமும் இருக்கிறது. ஏன் இவர்களை மட்டும் நல்லவர்கள், தியாகிகள், தலைவர்கள், புனிதர்கள் என்று எல்லோரும் கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எப்போதாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

இந்த நல்ல மனிதர்களெல்லாம் பிறர்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். அதற்காக தங்கள் வாழ்வின் சுகபோகங்களையும், நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தவர்கள். நான் இந்த சமூகத்திற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஒவ்வொருநாளும் ஏங்கியவர்கள். எதற்கெடுத்தாலும் நான், எனது பெற்றோர், என்னுடைய சகோதர சகோதரிகள், எனது உறவினர்கள், என்னுடைய சாதியினர், எனது சமயத்தினர் என்று சுயநலத்தோடு மட்டுமே சிந்திக்காமல் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். நான்தான் எல்லோரையும் விட பெரியவன் என்று நினைக்காமல் எல்லோரையும் அன்போடு அரவணைத்தவர்கள். பிறருக்கு ஏதாவது துன்பம் வருகின்றபோது ஓடிச் சென்று உதவி செய்தவர்கள். யாராவது மற்றவருக்கு அநீதி இழைக்கும்போது செய்தால் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தைரியமாக தட்டிக் கேட்டவர்கள். அநீதிகளைத் தட்டிக் கேட்டு அதற்காக தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள்.

உதாரணமாக, நெல்சன் மண்டேலா அவர்களை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தனது சொந்த மண்ணான தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஒவ்வொருநாளும் துடிதுடித்துப் போனார். தென்னாப்பிரிக்காவில் 87 சதவீதம் இருக்கும் கறுப்பின மக்களை வெறும் 13 சதவீதமே வாழும் வெள்ளையர்கள் கொடுமைப்படுத்தினர். இந்தச் சூழலில், தனது நாட்டை எப்படியாவது வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று மண்டேலா முடிவு செய்தார். கறுப்பின மக்களின் நிலங்களை அபகரித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் அவலம் ஒழிய வேண்டும் என்று முழங்கினார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 25 ஆண்டுகள் சிறையிலே ஆயுள்கைதியாக தண்டனை அனுபவித்தார். சிறையிலே அடி, உதை, கடுமையான வேலை, அவமதிப்பு என்று பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இவையெல்லாம் தனக்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ அல்ல தனது நாட்டிற்காக அவர் அனுபவித்தார்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

இந்த நல்ல மனிதர்களைப் போல் வாழ உனக்கு ஆசை இருக்கிறதா?
எல்லோருக்கும் நல்லது செய்யும் நல்ல எண்ணம் உன்னிடம் இருக்கிறதா?
பிறருக்காக நீ செய்த உதவிகள் சிலவற்றைக் கூற முடியுமா?
இந்த சமூகத்திற்கு நீ என்னென்ன நன்மைகளையெல்லாம் இந்த வயதில் செய்ய முடியும்?
No comments:
Post a Comment