
ஒருமுறை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றிருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வெளிநாட்டு அதிகாரி ஒருவரிடம் நம்மவர் காதோடு காதாய் ஒரு கேள்வியைக் கேட்டார், 'உங்களிடம் மட்டும் இவ்வளவு பணம் எப்படி?' அதற்கு அந்த அதிகாரி, 'கொஞ்சம் வெளியே வருகிறீர்களா' என்று நம்மவரை வெளியே கூட்டிச் சென்றார். 'அதோ அங்கே முழுமையாகக் கட்டமுடிக்கப்பட்ட புதிய பாலம் ஒன்று தெரிகிறதே பார்த்தீர்களா?' என்று கேட்டார். நம்மவர் சற்று கோபத்தோடு, 'என்ன விளையாடகிறீர்களா? அங்கு முழு பாலம் எங்கே இருக்கிறது? கட்டிமுடிக்கப்படாத பாதி பாலம்தானே இருக்கிறது' என்று காட்டமாகச் சொன்னார். அந்த அதிகாரி சிரித்துக் கொண்டே, 'மீதி பாலம் கட்டவேண்டிய காசுதான் எங்களை இவ்வளவு வசதியாக வாழ வைத்திருக்கிறது' என்றார். ஓஹோ.. விசயம் அப்படியா என்று நம்மவர் புரிந்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து, இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்த அந்த வெளிநாட்டு அதிகாரி நம்மவரின் வீட்டுக்குச் சென்றார். நம்மவரின் ஆடம்பர மாட மாளிகையையும், ஏக்கர் கணக்கான நிலங்களையும், அளவுகடந்த சொத்துக்களையும் ஆடம்பரங்களையும் கண்டு அவர் மலைத்துப் போய்விட்டார். 'என்னப்பா இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயே எப்படி?' என்று வியப்புடன் கேட்டார். கொஞ்சம் வெளியே வாருங்களேன் என்று நம்மவர் அழைத்துச் சென்றார். அதோ அங்கே ஒரு பாலம் இருக்கிறதே பார்த்தீர்களா என்று கேட்டார். வெளிநாட்டு அதிகாரி சுற்றிலும் பார்த்தார். பாலம் இருப்பதற்கான சிறு அடையாளம்கூட காணப்படவில்லை. பெரிதும் குழம்பிப்போனவராய் 'என்னப்பா பாலம் இருப்பதற்கான அடையாளத்தையே காணவில்லையே' என்றார். நம்மவர் சிரித்துக்கொண்டே முழு பாலமும் என் பாக்கெட்டிற்குள் என்று பதிலளித்தார். அரசியல், கல்வித்துறை, காவல்துறை, மருத்துவம், கோயில் என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்பில்லாமல் போயிற்று. பெரிய பொறுப்புகளில் இருப்பவர் ஒருவர் நேர்மையாக நடக்க முயற்சித்தால் 'பிழைக்கத் தெரியாதவன'; என்றுச் சொல்லி உசுப்பி விடுகின்றனர். பதவியிலிருக்கும் காலத்திற்குள் முடிந்தவரை சுருட்டிவிடும் மனநிலை பரவலாகக் காணப்படுகிறது. காசுக்கு முன்னால் நேர்மை கைகட்டி நிற்கிறது. ஊழல் ஆண்டாண்டு காலமாய் அதிகார நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

பணஆசை நம்மை என்னென்ன செய்ய தூண்டும்?
ஊழலில்லாத சமுதாயம் எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அரசியல்வாதிகள் ஊழல் செய்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்களா? எப்படி?
நேர்மையுடன் நம்மால் வாழ முடியுமா? என்னென்ன வழிகளில்?


No comments:
Post a Comment