Wednesday, November 10, 2010

குழந்தைகள் மட்டும் எப்படி.. இப்படி!


'ஒரு குழந்தை பிறந்தவுடன்
நீங்கள் எதையெதையோ கற்றுக் கொடுக்கத் தயாராகிறீர்கள்
உண்மையில் நீங்கள்தான்
அக்குழந்தையிடம் கற்றுக்கொள்ள வேண்டும்'
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
                        பேருந்தில் பயணம் செய்கின்றபோது குழந்தைகளை கவனித்திருப்போம். சில குழந்தைகள் வைத்தகண் வாங்காமல் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பார்த்து அப்படி ஒரு புன்சிரிப்பு பூப்பார்கள். பல சைகைகளைக் காட்டி நம்மை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்து நம்மில் சிலர் அப்படியே உளம் பூரித்துப்போய் அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளியிருப்போம். 'என்னிடம் வருகிறாயா' என்று கேட்பதுபோல் குழந்தையைப் பார்த்து பல சைகைகளைக் காட்டியிருப்போம். அந்தக் குழந்தை யாரென்று நமக்கு தெரியாமலிருக்கலாம். எந்த ஊரென்பதும் நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையால் ஒருவகையான இனம்புரியாத மகிழ்ச்சி நம்மில் உதயமாகிறது. நாம் பல்வேறு சிந்தனைகளோடு அந்த பேருந்தில் ஏறியிருக்கலாம். அவசர அவசரமாக குழப்பத்தோடு எங்காவது கிளம்பியிருக்கலாம்.ஆனால், அவற்றையெல்லாம் அந்த குழந்தையின் புன்னகையும் அழகிய சைகைகளும் அப்படியே மறக்கச் செய்துவிடும்.
                   இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன. இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் நிம்மதியும் இருப்பது இயல்புதானே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 குழந்தைகளோடு நீங்கள் பெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? அதில் ஏதேனும் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்து இன்றைய நாளில் சந்தோசமாக இருங்களேன்...
 குழந்தைகளிடம் மட்டும் எப்படி இவ்வளவு நல்ல குணங்கள் காணப்படுகின்றன?
 நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே? நமது சிறுவயது நல்ல குணங்களெல்லாம் நம்மிடம் இப்போது இருக்கிறதா? இல்லையேல் அவை எங்கு போயின?
 குழந்தைகள் போல் வாழ நாம் அன்றாடம் என்னென்ன செய்யலாம் ?

1 comment: