'குறை எப்போதும் பிறரை குறைச் சொல்லிக் கொண்ட இருக்கும்'
- பரதேசி பீட்டர்
சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறைச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 'எனது பக்கத்து விட்டுக்காரி சரியில்லை, என்னோடு படிக்கின்ற அந்தப் பையன் ரொம்ப மோசமானவன், எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியாது, அவங்க குடும்பமே அப்படித்தான்' என்று யாரையாவது எதையாவது குறைச்சொல்லிக் கொண்டிருப்பதே சிலரது பொழுதுபோக்கு.

தத்துவயியலாளரான சார்த்தர் என்பவர் 'அடுத்தவன் ஒரு நரகம்' என்று பிறரைக் குறித்து இழிவாகக் கூறினார். புத்தரை ஓர் இளைஞன் 'நீ ஒரு முட்டாள்' என்று கேவலமாகத் திட்டி அவர்மீது காறி உமிழ்ந்தான். 'காந்தி ஒரு நாகரீகமற்ற அரைநிர்வாணி' என்று அமெரிக்க அதிபர் ஒருவர் அவமானப்படுத்திப் பேசினார். இவ்வாறு, படித்தவர் முதல் படிக்காத பாமரர் வரை பிறரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாமும் பல நேரங்களில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்போம். இரண்டு மூன்று பெண்கள் கூடியிருந்து பேசத்தொடங்கினாலே அடுத்த வீட்டுக் கதைதான் அங்கு பேசப்படும் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது பலநேரங்களில் உண்மையாவதுமுண்டு. 'அட அவன் அப்படி... ஐயோ இவள் இப்படி...' என்று வாய்க்கு வந்தபடி குறை சொல்லிவிடுகிறோம். அடுத்த கணமே நாம் குறைசொன்ன நபர் அந்த பக்கம் தற்செயலாக வந்துவிட்டால், 'வாங்க வாங்க எப்படி நல்லா இருக்கீங்களா? என்ன உடம்பு ரொம்ப இளைச்சு போயிடுச்சு? இந்தப் பக்கமே வரமாட்டேங்கிறீங்க. எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?' என்று புன்னகைப் பொங்க அன்பு வார்த்தைகளை அப்படியே அள்ளி வீசுவோம்.

யாரிடம்தான் குறையில்லை? யாரிடம்தான் பலவீனமில்லை? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா? நான் தவறே செய்வதில்லையா? என்று திறந்த மனதுடன் நம்மையே கேட்டுப் பார்ப்போம். அடுத்த மனிதரிடம் நல்ல குணங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி தாராளமாகவும் ஏராளமாகவும் பேசுவோம். அடுத்தவரின் நல்ல குணங்களை நம் கண்கள் நன்றாகப் பார்க்கட்டும். அடுத்தவரை பற்றி நல்லது பேசுவதால் நாம் எதையும் இழந்துவிடப்போவதில்லை. பிறர் நம்மை வெறுத்தாலும், பழித்தாலும். காயப்படுத்தினாலும், காறி உமிழ்ந்தாலும், ஏன் சிலுவையிலேயே அறைந்தாலும் அவர்களை குறைச் சொல்வதை விட மனதார மன்னித்து ஏற்றுக் கொள்வதே சிறந்தது. பல நல்ல மனிதர்கள் அதைத்தான் செய்தார்கள்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

அடுத்தவரைக் குறைசொல்லும் உங்களிடமும் குறைகள் உண்டு என்பதை உணர்கிறீர்களா?
பிறரை குறைச்சொல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
பிறரை திருத்துவதற்கு குறைச்சொல்வதுதான் வழியா? வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன?
👏👏👏
ReplyDelete